துல்லியமான படங்களைக் கொண்ட நூல்: பேராசிரியர் அ.மார்க்ஸ்
என் நூலுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் (அலைபேசி 94441 20582) அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் |
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் அவர்களின் மிகச் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் இது.
பெரிய அளவில் கெட்டி அட்டையில் ஏராளமான புத்தரின் திரு உருவச் சிலைகளின் துல்லியமான படங்களுடன் இது வந்துள்ளது. 'சோழ நாட்டில் பவுத்தம்' எனும் பெயரில் அவர் தன் ஆய்வுகளின் ஊடாகக் காண நேர்ந்த புத்தர் சிலைகள் குறித்து உரிய படங்களுடன் வந்துள்ள நூல்.
பெரிய வடிவில் (277 mm x 240 mm) வெளிவந்துள்ள இதன் விலை குறித்த தகவல்கள் இறுதியில்.
சோழ நாடு முழுவதும் ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் பௌத்தம் மற்றும் சமணம் ஆகியன தழைத்திருந்ததற்கு ஆதாரமாக ஏராளமான புத்த சிலைகளும், சமண ஆலயங்களும் இன்றுவரை ஆங்காங்கு தமிழகம் முழுவதும் உள்ளன. சமண ஆலயங்கள் உரிய முறைகளில் வணங்கப் படுவதும், பௌத்த அடையாளங்கள் ஆங்காங்கு இப்படி அவ்வப்போது கிடைத்து வருவதும் குறித்து நான் கண்ணில் படும்போதெல்லாம் பதிந்து வருவதையும் ஒரு சில நண்பர்கள் அறிவார்கள்.
குறிப்பாகக் கண்டர மாணிக்கம் எனும் ஊரில் இவ்வாறு பிருமாண்டமான ஒரு புத்தர் சிலை சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டு அவ்வூர் மக்களால் அது பராமரிக்கப்பட்டு வந்ததையும் பற்றிய செய்தி இப்படி வெளியானபின் உடனடியாக அது அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் ஆலயத்தை ஒட்டி உள்ள அரசு அலுவலகத்தில் ஒரு துணியில் சுற்றி அது வைக்கப் பட்டிருந்ததையும் குறித்து இந்தப் பக்கங்களில் நான் விரிவாக எழுதி இருந்ததும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு பத்திரிகையாளரால் அது எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, பத்திரிக்கைகளில் செய்தியாகிப் பின்னர் அது அங்கே பாதுகாக்கப்பட நேர்ந்தது பற்றியும் நான் விரிவாகப் படங்களுடன் அப்போது வெளியிட்டிருந்தது ஒரு சிலருக்கு நினைவிருக்கலாம்.
தஞ்சைப் பெரியகோவில் என்பது ராஜராஜன் எனும் மன்னனின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்கிற செய்தியே மிகச் சமீபத்தில்தான் தெரிய வந்தது என்கிற உண்மையையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
இதன் பொருள் என்ன? புஷ்யமித்ரசுங்கனின் காலத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பௌத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கு நோக்கி வந்த வரலாறு எல்லாம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
பௌத்தம் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இன்றளவும் ஏராளமான சிரமண ஆலயங்கள் உரிய முறையில் அத்தகைய நம்பிக்கை உள்ள மக்களால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வணங்கப்படுவதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
(நூலின் விலை ரூ.1,000/. சலுகை விலை ரூ.750/க்குக் கிடைக்கிறது. தமிழ்நாட்டிற்குள் அஞ்சல்/கூரியர் இலவசம். இது ஒரு புது எழுத்து வெளியீடு. தொடர்புக்கு 9842647101)
ஒளிப்படம்: திரு Marx Anthonisamy அவர்களின் முகநூல்
***************************
நன்றி: மானுடம்
21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.
மதிப்புரை அருமை...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
வாழ்த்துகள் தொடர்ந்து தங்களது நூல்கள் வெளிவரட்டும்.
ReplyDelete