13 ஏப்ரல் 2023இல் சின்னமேடு புத்தர், புத்தர் பாதம், புத்த விகாரை ஆகியவற்றைக் காண்பதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாருக்குக் களப்பணி மேற்கொண்டேன். இவை வரலாற்று ஆர்வலர்களும், பௌத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் அவசியம் பார்க்கவேண்டியவையாகும். அத்துடன் சதுக்க பூதங்களும்.
களப்பணியின்போது முதலில் பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகம் சென்றேன். என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேட்டிலும் (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) நூலிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022), துறையிலிருந்து அப்போது பெற்ற சின்னமேடு புத்தரின் ஒளிப்படத்தை இணைத்திருந்தேன்.
தற்போது காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சின்னமேடு புத்தரின் சிற்பத்தைக் கண்டேன். அச்சிற்பம் காட்சிப்பேழையில் அழகாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரே சிற்பம் என்ற பெருமையைக் கொண்டதாகும்.
முந்தைய களப்பணிகளின்போது அந்த அருங்காட்சியகத்தில் புத்தர் பாதம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அதனைப் பற்றிக் கேட்டபோது புத்தர் பாதம் அங்கு இல்லை என்று தெரிவித்தனர். சின்னமேடு புத்தரைப் பார்த்துவிட்டு கிளம்பினேன். அதற்கு முன்னர் நான் அலைபேசியில் தொடர்புகொண்ட பூம்புகார்க் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் கோவி.லெனின் எனக்காகக் காத்திருந்தார். அவருடன் அங்கிருந்து பல்லவனேஸ்வரம் நோக்கிக் கிளம்பினேன்.
பல முறை அங்கு வந்து வெளியிலிருந்தே அந்த எச்சங்களைக் கண்டு சென்றுள்ளேன். இப்போது பல்லவனீஸ்வரத்தில் உள்ள அந்த வளாகம் திறந்திருந்தது. அருகில் சில பணியாளர்கள் இருந்தனர். நானும் அவரும் அங்கே சென்றோம். வளாகத்தில் இருந்துகொண்டு புத்த விகாரையின் எச்சங்களை மிகவும் அருகில் கண்டேன். உள்ளே புத்த பாதம் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக பணியாளர்கள் கூறினர். அங்கிருந்த பொருள் விளக்கம் என்ற அறையில் பூம்புகாரின் பெருமை பேசும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல ஒளிப்படங்களைக் கண்டேன். ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகத்தில் இருப்பதாக நான் நினைத்திருந்த புத்தர் பாதத்தை அங்கு கண்டேன்.
வளாகத்தின் வெளியில் அவ்விடத்தின் பெருமையை உணர்த்துகின்ற பெரிய பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. முந்தைய களப்பணிகளின்போது இவ்வாறான விளக்கப்பலகையினைக் காணவில்லை. இதை அமைத்துள்ள துறையினரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும். பொதுமக்களும், ஆய்வாளர்களும் இவ்வளாகத்தைப் பற்றி அறிய இந்தப் பெயர்ப்பலகை பெரிதும் உதவும்.
அடுத்து வெளிவரவுள்ள என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கில நூலில் இந்த சின்னமேடு புத்தர் மற்றும் புத்த பாதத்தின் ஒளிப்படங்கள் அவை இருக்கின்ற உரிய இடங்களைப் பற்றிய குறிப்புகளுடன் இடம்பெறும்.
விகாரையின் எச்சங்களைக் கண்டபின் அங்கிருந்து பூம்புகார் கல்லூரிக்குச் சென்றோம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களாக எனக்கு அறிமுகமான, தற்போது பூம்புகார் கல்லூரியில் தத்துவம், சமயம் மற்றும் பண்பாட்டுத் துறையில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் பிற நண்பர்களான முனைவர் இந்திரா (துறைத்தலைவர்), முனைவர் விஜயகுமார் (உதவிப்பேராசிரியர்)] ஆகியோரைச் சந்தித்தேன். அந்நாள் நினைவுகளை அவர்கள் நினைவுகூர்ந்தது மனதிற்கு மகிழ்வினைத் தந்தது.
மூன்று ஆசிரிய நண்பர்களும் என் களப்பணி அனுபவம் பற்றி மாணவர்களிடம் சில மணித்துளிகள் பேசக் கேட்டுக்கொண்டனர். என்னுடைய களப்பணி ஆய்வு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள் ஆகியவற்றைக் குறித்து பண்பாட்டுத் துறை மாணவர்களிடையே சிறிய உரை நிகழ்த்தினேன். வாய்ப்பு தந்த ஆசிரிய நண்பர்களுக்கு நன்றிகூறினேன்.
அங்கிருந்து தஞ்சாவூருக்குத் திரும்பும் முன்பாக சதுக்க பூதங்களைப் பார்க்கச் சென்றேன். 1990களின் இடையில் ஆய்வியல் நிறைஞர் ஆய்விற்காகவும், பிறகு பல முறை பூம்புகார் வந்தபோதிலும் இப்போதுதான் சதுக்கபூதங்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். கம்பீரமாக உள்ள, நம் வரலாற்றுப் பெருமைகளை இன்றும் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்ற, சிலப்பதிகாரத்தில் பேசப்படுகின்ற, சதுக்க பூதங்களைக் கண்டேன். களப்பயணத்தை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டேன், தஞ்சாவூரை நோக்கி.
அடுத்த களப்பயணத்தில் திருச்சி அருகேயுள்ள கீழ்க்குறிச்சியில் உள்ள புத்தர் சிலையைப் பார்த்த அனுபவத்தைக் காண்போம்.
நன்றி:
ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகம்,
இந்தியத்தொல்லியல் துறை, பல்லவனீஸ்வரம்,
பூம்புகார்க் கல்லூரி ஆசிரிய நண்பர்கள்
திரு பாஸ்கர், திரு செல்வராஜ், திரு பழனிச்சாமி, திரு புண்ணியமூர்த்தி
10 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது-.
வாழ்த்துகள்...
ReplyDeleteசிறப்பான தகவல்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDelete