பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் நாகப்பட்டினம்

8 ஏப்ரல் 2023இல் புதூர் புத்தரைப் பார்த்தபின் தஞ்சாவூர் திரும்ப ஆயத்தமானபோது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிராந்தி, சந்தைத்தோப்பு புத்தர்களைப் பார்த்ததும், கிராந்தி புத்தரைப் பற்றிய செய்தியை நாளிதழ்களுக்குத் தந்ததும் நினைவிற்கு வந்தன. பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டேன். திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் நோக்கிப் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன். 

பேருந்தில் நாகை வந்து சேர்ந்து, விகாரை இருந்த இடம் என்று கூறப்படுகின்ற இடத்தை நோக்கி நடந்தேன். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அவ்விடம் இருந்தது. 

வளாகத்தின் வெளியே சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு உள்ளே சென்றேன். அங்கிருந்த நீதிமன்றக்கட்டடத்தைப் பார்த்தேன். பூம்புகாரில் விகாரையின் எச்சங்களை இன்றும் காணமுடியும். ஆனால் நாகப்பட்டினத்தில் விகாரையின் எச்சங்களை அந்த அளவிற்குக் காணமுடியாது.  அவ்வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம்,  சார்நிலைக்கருவூலம், வெளிப்பாளையம் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களைக் காணமுடிந்தது. ஒரு காலத்தில் புத்த விகாரை இருந்த இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் நிழலாடியது. கால வெள்ளத்தில் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்தேன்.  வரலாற்றுரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணிக்கும்போதும், அந்த இடத்தில் இருக்கும்போதும் கிடைக்கின்ற ஒரு திருப்தி வித்தியாசமானது. அதனை முற்றிலும் உணர்ந்தேன்.

அங்கிருந்து தஞ்சாவூர் திரும்ப எண்ணியபோது சந்தைத்தோப்பு புத்தரைப் பற்றி அருங்காட்சியகக் காப்பாட்சியர் கூறியது என் நினைவிற்கு வந்தது.  

முனைவர் மீ. மருதுபாண்டியன் (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம் மதுரை மற்றும் காப்பாட்சியர் அரசு அருங்காட்சியகம், திருவாரூர்) அவர்கள் 1 பிப்ரவரி 2022இல் எனக்கு ஒரு தலையில்லாத புத்தர் சிலையின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார். அது வேளாங்கண்ணி அருகில் சந்தைத்தோப்பிலிருந்து நாகப்பட்டினத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு வந்திருந்ததாகக் கூறினார். அப்போது அவரிடம் நான் நாகப்பட்டினம் திரு இராமச்சந்திரன் மற்றும் முனைவர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் மே 2013இல் கிராந்தி புத்தரைக் காணச்சென்றபோது சந்தைத்தோப்பு புத்தரைப் பார்த்ததை நினைவுகூர்ந்தேன்.

அதனடிப்படையில் இப்போதைய பயணத்தின்போது நாகப்பட்டின அருங்காட்சியகம் சென்று அந்த புத்தரைப் பார்க்க எண்ணினேன். விகாரை இருந்த வளாகத்திலிருந்து வெளியே வந்து, அருங்காட்சியகத்திற்கு ஆட்டோவில் சென்றேன். நான் சென்றிருந்த நாளில் அருங்காட்சியகம் விடுமுறை. வெளியிலிருந்து அருங்காட்சியகத்தைப் பார்த்தேன். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சந்தைத்தோப்பு புத்தரையும் வெளியிலிருந்தே காணமுடிந்தது. வெளியில் இருந்தபடியே அந்த புத்தரை ஒளிப்படம் எடுத்தேன்.





அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் தலையில்லாமல் இருந்தார் அந்த புத்தர். தலையில்லாமலும்கூட அந்த புத்தர் அழகுதான். சில ஆண்டுகளுக்கு முன் சந்தைத்தோப்பில் பார்த்த அதே புத்தர். களத்தில் இருந்த புத்தரை, அருங்காட்சியகத்தில் கண்டது மனதிற்கு நிறைவினைத் தந்தது.

அங்கிருந்து நடந்து ரயில்வே ஸ்டேஷன் வந்துசேர்ந்தேன். சிறிது நேரத்தில் நண்பர் திரு க. இராமச்சந்திரன் என்னைக் காணவந்தார். அவருடன் சிறிது நேரம் ஆய்வு பற்றி விவாதித்தேன். 

புதூர் புத்தரை, குறிப்பாக அவர் அணிந்திருந்த கழுத்தணியைப் பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் நாகை வரை என்னை இட்டுசெல்லும் என எண்ணவில்லை. இருப்பினும் விகாரை இருந்த இடத்தையும், அருங்காட்சியகத்திலுள்ள சந்தைத்தோப்புப் புத்தரையும் பார்த்த மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன், தஞ்சை நோக்கி.

நன்றி : முனைவர் மீ. மருதுபாண்டியன்


அண்மையில் என் நூலுக்கு வந்த மதிப்புரை


திரு இரா.சுப்பராயலு, 3 ஜுன் 2023


4 ஜுன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

Post a Comment