தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள் : தமுஎகச மாநில மாநாட்டு சிறப்பு மலர் 2025



தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச் சுவடுகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தச்சுவடுகளாகக் கல்வெட்டு, புத்தர் சிலைகள், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், ஓவியம் ஆகியவை காணப்படுகின்றன. பக்தி இயக்கக் காலத்தில் பௌத்தத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும், அதற்குப் பின்னர் பௌத்தத்தின் தாக்கமானது தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளதை இச்சான்றுகள் உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டில் கீழ்க்குறிச்சி, நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் காலத்தால் அண்மையானது குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்படுகின்ற கும்பகோணத்தில் உள்ளது. பாடல் பெற்ற தலமான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலமாகத் திருவிளந்துறை என்னுமிடத்தில் ஒரு புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட இக்கல்வெட்டு குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆகும். எலந்துறை என்றழைக்கப்படும் அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எச்சங்களையோ, புத்தர் சிலையையோ தற்போது காணமுடியவில்லை.

கல்வெட்டிற்கு அடுத்தபடியாகப் பௌத்த சமயச்சான்றாக புத்தர் சிலைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை), ஒருங்கிணைந்த திருச்சி (திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர்), புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியச் சோழ நாட்டில் பௌத்த சமயச்சான்றுகள் உள்ள 11 இடங்களைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின் வந்த பல அறிஞர்களை அடியொற்றி மேற்கொண்ட களப்பணியின்போது 65 இடங்களில் புத்தர் சிலைகள் இக்கட்டுரையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய சோழ நாட்டில் பௌத்தம் என்ற நூலின் தமிழ்ப்பதிப்பில் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூரிலும், பழையாறையிலும் காணப்பட்ட இரு புத்தர் சிலைகளைப் பற்றிய விவரம் இதே நூலின் ஆங்கிலப்பதிப்பில் (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, Kaveripattinam, 2023) இடம்பெற்றுள்ளது. ஆகஸ்டு 2025இல் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் பெரிய கண்மாய் பெருமடை வாய்க்கால்மேட்டில் புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக்கழகத்தினருடன் மேற்கொண்ட கள ஆய்வின்போது தலையில்லாத புத்தர் சிலையைக் காணமுடிந்தது. தொடர் தேடலில் கண்டுபிடிக்கப்படுகின்ற புத்தர் சிலைகள் இப்பகுதியில் பௌத்தம் பரவியிருந்ததை உறுதி செய்வதோடு பௌத்தம் புத்துயிர் பெற்று வருவதையும் உணர்த்துகின்றன.

தற்போதுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, தஞ்சாவூர், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பழையாறை, பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றில் சோழன்மாளிகை, திருவலஞ்சுழி ஆகிய இடங்களில் நின்ற நிலையிலுள்ள சிலைகள் உள்ளன. மற்றவை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள சிலைகளாகும். தலையில்லாத புத்தர் சிலைகள் அருந்தவபுரம் உள்ளிட்ட சில இடங்களில் காணப்படுகின்றன. புத்தா் சிலையின் தலைப்பகுதி மட்டும் பெரண்டாக் கோட்டையிலும், முழையூரிலும், கீழப்பழையாறையிலும் உள்ளன. வையச்சேரியில் இவ்வாறான தலைப்பகுதி இருந்ததாகக் கூறப்பட்டபோதிலும் அங்கு அதனைக் காணமுடியவில்லை. பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

தஞ்சாவூர், கலைக்கூடத்தில் மதகரம், பட்டீஸ்வரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலைகள் உள்ளன. மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்தில் சோழன்மாளிகையைச் சேர்ந்த, பொ.ஆ.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும், நின்ற நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும் உள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் மாத்தூரைச் சேர்ந்த, பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது. தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொ.ஆ.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது. சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் திருவலஞ்சுழியைச் சேர்ந்த, பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, நின்ற நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது.

நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகளில் ஒன்று தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் உள்ளது. அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி முனீஸ்வரன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் விமானத் தென்புறப்படிக்கட்டின் பக்கவாட்டுப்பகுதியின் கீழ்ப்புறத்திலும், ராஜராஜன் திருவாயிலான இரண்டாம் கோபுரத்தின் உட்புற தாங்குதளத்திலும் புத்தர் சிற்பங்களும், கருவறையைச்சுற்றியுள்ள சாந்தாரத்தில் காணப்படுகின்ற சோழர் கால ஓவியங்களில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள புத்தர் ஓவியமும் உள்ளன. தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயிலில் ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள குதிரைக்குக் கீழாக ஒரு கருவறை போன்ற அமைப்பின் உட்புறத்தில் ஒரு புத்தர் சிற்பமும், திருவிடைமருதூர், மகாலிங்கசுவாமி கோயிலில் வேம்படி முருகன் சன்னதியின் முகமண்டப உட்புறச் சுவரின் மேல் புறத்தில் இரண்டு புத்தர் கற்சிற்பங்களும் உள்ளன. இந்தப் புத்தர் சிற்பங்கள் சோழர் காலம் முதல் பௌத்தத்திற்கு மன்னர்கள் அளித்த ஆதரவினை வெளிப்படுத்துகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகின்ற இச்சான்றுகள் பல்வேறு காலகட்டங்களில் பௌத்தம் நன்கு பரவி தழைத்திருந்ததை எடுத்துரைக்கின்றன.

1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது பழையாறையிலும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதியிலும் அதிகமான புத்தா் சிலைகளைக் காணமுடிந்தது. அடுத்தடுத்த களப்பணியின்போது சில புத்தர் சிலைகள் சுவடின்றி மறைந்துவிட்டதை அறியமுடிந்தது. சமயக் காழ்ப்புணர்வும், வரலாற்றின்மீதான ஈடுபாடு இல்லா நிலையும் இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் மறைவதற்குப் பெரும் காரணிகளாக அமைகின்றன. அவற்றைக் காப்பதே வரும் தலைமுறையினருக்கும், வரலாற்றுக்கும் செய்கின்ற பெரும் பங்களிப்பாக அமையும்.

நூல் : தமுஎகச மாநில மாநாட்டு சிறப்பு மலர் 2025
வெளியீடு : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு, 57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை 625 001, தொலைபேசி 0452-2341669, மின்னஞ்சல்: thamueakasa2014@gmail.com
பதிப்பாண்டு : டிசம்பர் 2025
விலை : ரூ.600




திரு மு.இலக்கியன்,  மலரைத் தரல் (14.2.2026)
-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமுஎகச மாநில மாநாட்டு மலர் 2025
-------------------------------------------------------------------------------------------

Comments

  1. மிகச் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

Post a Comment