அயோத்திதாசர் ஆதவன் விருது ஏற்புரை : நமது தமிழ்மண், ஜூலை 2025
இந்த
இனிய விழாவிற்கு வந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேடையில் உள்ள பெருமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும்.
ஒரு
அரசியல் கட்சியானது இவ்வாறாக ஒரு ஆய்வாளனைத் தேடி விருது தருவது என்பது எனக்கு மிகவும்
பெருமையாக உள்ளது. சாதாரணமாக ஒரு தட்டச்சுச் சுருக்கெழுத்தனாகப் பல்கலைக்கழகத்தில்
சேர்ந்தேன். பௌத்தம் என்னை இந்த அளவிற்குக் கொண்டுவந்து நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஒரு
சிறிய பிளாஷ்பேக்! தமிழ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு செய்யலாம்
என்று ஒரு விதியைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன்.
எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. மூத்த பேராசிரியர் சோ. ந. கந்தசாமி சொன்னார்,
தம்பி யாரும் தொடாத துறையை நீ தொடுகிறாய் கவனமாக இரு. அதே செய்தியை ஐராவதேம் மகாதேவன்
சொன்னார். கும்பகோணம் சேதுராமனும் அதையே சொன்னார். அப்பா, அது ரொம்ப கஷ்டம், அது உன்னால
முடியாது. முடியாது முடியாது முடியாது என்று பெருமக்கள் சொன்னது எனக்குள் ஒரு ஆசை இயல்பாக
வந்துவிட்டது.
கும்பகோணத்தில்
பிறந்த நான், இயல்பாகக் கோவிலுக்கு புகழ் பெற்ற ஊர்,. அந்தச் சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.
நான் இருந்த வீட்டிற்கு அருகிலேயே கும்பேஸ்வரன் கோவில். அந்தக் கோவிலில் 16ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஒரு பௌத்தக் கல்வெட்டு இருக்கும் என்பதை நான் நினைக்கவில்லை. என்னுடைய இளம்
வயதில் அந்தக் கோவில் பிரகாரத்தில் விளையாடியிருக்கிறேன். கல்லூரி போகும்போது அங்கு
படித்திருக்கிறேன். அங்குள்ள கல்வெட்டுதான் தமிழகத்தில் புத்தர் கோவில் இருந்ததற்கான
கடைசி கல்வெட்டு. அதற்குப் பிறகு எங்கும் கல்வெட்டு கிடையாது. ஆனால், அந்தப் புத்தர்
கோவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்ற இடத்தில், கும்பகோணம் பக்கத்தில் திருவிளந்துறை
என்னும் ஊரில், எங்கெங்கோ தேடிப் பார்த்துவிட்டேன். அங்கு எந்த இடத்திலும் கல்வெட்டும்
இல்லை, சிலையும் இல்லை, கோவில் இருந்ததற்கான சான்றும் இல்லை.
அடுத்தது,
களப்பணி போகும்போது எப்படி களப்பணி செல்வது, அது முடியுமா என்று பார்க்கின்ற போது எங்கிருந்து
ஆரம்பிப்பது என்ற சிக்கல். 1940இல் மயிலை சீனி. வெங்கடசாமி, பௌத்தமும் தமிழும் என்ற
ஒரு நூலை எழுதியிருந்தார், அதில் பல செய்திகள் இருந்தன. அதை அடிப்படையாக வைத்து களத்தில்
இறங்கினேன். சாதாரணமாக, கோட்பாட்டு நிலையிலேயே ஆய்வை நிறைவு செய்யலாம் என்று நினைத்தபோது
பல அன்பர்கள் களப்பணி மூலமாகத்தான் வரலாற்றுக்குப் பங்களிக்க முடியும் என்று சொன்னார்கள்.
என்
ஆய்வின் எல்லை பழைய தஞ்சாவூர், பழைய திருச்சி மாவட்டம். 1940இல் மயிலை சீலை வெங்கடசாமி
தனது நூலில் பத்து சிலைகளை மட்டும்தான் குறிப்பிடுகிறார். நான் ஆய்வேட்டை முடித்து,
பின்னர் 2023இல் நூல் எழுதும்போது கிட்டத்தட்ட 70 சிலைகள், அதாவது 60 சிலைகளை 30 வருடத்தில்
நான் பார்த்துள்ளேன். எனது வாழ்வில் பாதிக் காலம் அந்த ஆய்வுக் காலமாகத்தான் இருந்தது.
எங்கே சிலை இருந்தாலும் பார்ப்பது, குறிப்பெடுப்பது.
பல இடங்களில் புத்தரை சமணர் என்றும் சமணரை புத்தர் என்றும் சொல்வார்கள். அந்த ஒரு தெளிவினைப்
பெற முடிந்தது. பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் அதனை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
அதில் நல்ல பல செய்திகள் இருக்கின்றன. அவர்கள் 12, 15 சிலைகளைப் பற்றித் தான் வைத்திருக்கிறார்கள்.
ஒரு
வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரம் மிகவும் முக்கியம். அந்த அடிப்படை ஆதாரத்தை நாம் தந்துவிட்டால்
நமக்குப் பின், எனக்கு பின்னால், வருகின்ற ஆய்வாளர்கள் அதை பல துறையில் கொண்டு வந்து
மேம்படுத்த பெரிய வாய்ப்பு இருக்கிறது.
சிலைகள்
என்று நாம் எடுத்துக் கொண்டால் அமர்ந்த நிலை, நின்ற நிலை. இங்கு புத்தரைப் பொறுத்தவரைக்கும்
பெரும்பாலும் அமர்ந்த நிலை சிலைகள் தான் உள்ளன. நின்ற நிலை சிலைகள் மூன்று அல்லது நான்கு, சுந்தரபாண்டியன்பட்டினம்,
திருவலஞ்சுழி இதுபோல இரண்டு மூன்று இடத்தில் தான் இருக்கிறது. அமர்ந்த நிலையில் உள்ள
சிலைகள் அனைத்துமே தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், மார்பில் ஆடை, இடுப்பில்
ஆடை, நெற்றியில் திலகக்குறி, கையில் தர்மச்சக்கரம் என்ற கூறுகளைக் கொண்டுள்ளன. அந்தக்
கூறுகளை வைத்துக்கொண்டே புத்தர் சிலையா, சமணர் சிலையா என்று எளிதில் கண்டுபிடித்துவிட
முடியும்.
இவ்வாறாகத்
தேடிக் கொண்டே வரும்போது ஒருநாள் புதுக்கோட்டையில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு என்ற
ஒரு செய்தி வந்தது. அச்செய்தியுடன் வெளியான புகைப்படத்தில் சமணர் சிலையின் புகைப்படம்
இருந்தது. நண்பரைத் தொடர்பு கொண்டேன். அங்கே சென்று போய்ப் பார்த்தபோது அது புத்தர்
சிலை இல்லை, சமணத் தீர்த்தங்கரர் சிலை என்பதை அறிந்தேன். அவ்வாறே செய்தியைத் தந்தோம். இதுபோன்று புத்தர் சிலையை பார்க்கச்
சென்று நாங்கள் 13 சமணர் சிலைகளைப் பார்த்துள்ளோம்.
பிரெஞ்சு
இன்ஸ்டிடியூட்டிற்கு ஆரம்பத்தில் நாங்கள் போகும்போது அவர்களுடைய ஆவணத்தில் பல புத்தர்
சிலைகளின் புகைப்படங்களை வைத்திருந்தார்கள். 1956 முதல் இருக்கின்ற பல சிலைகளின் படங்கள்
அவர்களிடம் இருக்கின்றன. அதை நான் தரவுகளாக எடுத்துக் கொண்டேன். அதிலும் திருநாகேஸ்வரம்,
தஞ்சாவூர் போன்ற பல இடங்களில் வேறு சிலைகளைப் புத்தர் சிலைகள் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.
அவை அனைத்தையுமே நான் என்னுடைய நூலில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறேன். இந்த
ஒரு வேறுபாடு என்பது தெரிந்தால் தான், அடுத்தடுத்து நமக்குப் பின்வரும் ஆய்வாளர்களுக்கு
மிகவும் எளிதாக இருக்கும்.
1978இல்
மெயில் இதழில் வெளியான செய்தியை ஸ்ரீதரன் அனுப்பியிருந்தார். புத்தர் சிலையின் தலைப்பகுதி
மட்டும் அதில் இருந்தது. தஞ்சாவூர் பக்கத்தில் பெரண்டாக்கோட்டை என்ற இடம். அங்குப்
போய் பார்க்கிறோம். சாம்பான் என்று சொல்லி வழிபடுகிறார்கள். இவ்வாறாக, பல பெயர்களில்
வழிபட்டு வருகிறார்கள்.
1995இல்
எம்ஃபில் ஆய்வேட்டைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப் போகிறேன். அப்போது, மாயவரத்தில்
ஒரு புத்தர் கோவில் இருக்கிறது என்று கும்பகோணத்தில் சொன்னார்கள். அங்கே சென்றோம்.
களப்பணியில் அங்கு போய் இறங்குகிறோம். நாங்கள்
இருக்கும் இடத்தின் மிக அருகில் அந்தக் கோவில் இருக்கிறது. ஆனால் அந்த கோவிலில் இருக்கிற
சிலையை அவர்கள் புத்தர் என்று சொல்லவில்லை, ரிஷி என்று சொல்கிறார்கள். இங்குப் புத்தர்
கோவில் ஏதும் இல்லை நீங்கள் செல்லலாம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு நாங்கள் திரும்பிவிட்டோம்.
தொடர்ந்து எம்ஃபில் ஆய்வேட்டை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துவிட்டேன். நான் தெளிவுப்படுத்திக்
கொண்டு உள்ளே சென்று பார்த்திருந்தால் அது புத்தர் என்று பதிவு செய்திருக்கலாம். இவ்வாறான
பல விடுபட்ட தகவல்களை முனைவர் பட்ட ஆய்வில் நான் சரி செய்தேன்.
என்னுடைய
ஆய்வுக்கு பல நூல்கள் துணையாக இருந்தன டி.என்.வாசுதேவராவ், மீனாட்சி, தமிழ் நாடு அரசு
வெளியிட்ட நூல், ஏசியன் ஸ்டடிஸ் வெளியிட்ட சிவராமன் எழுதிய நூல் என்று சிலர் எழுதி
இருந்த நூல்கள். எனக்கு ஓரளவு துணையாக இருந்தன.
எது
எவ்வாறாக இருந்தாலும் ஒரு சிலையை படிப்பதாக மட்டும் இல்லாமல் நேரில் பார்த்து பதிவு
செய்து புகைப்படம் எடுத்த பின்பு தான் நான் அந்த இடத்தை விட்டு நகர்வேன். அவ்வாறு செய்த
நிலையில் தான் இவ்வளவு சிலைகளை பார்க்க முடிந்தது. இந்த அளவிற்குப் பௌத்தம் பரவி இருந்தது
என்பதற்கான ஒரு ஆதாரத்தை நம்மால் கொடுக்க முடிந்தது. காரணம், ஆரம்பத்தில் எங்கு பார்த்தாலும்
இங்கு சிலை இல்லை, இது அய்யனார் சிலை என்று திசைதிருப்புவதாக பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
இந்த
நேரத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூறுகிறேன். அங்கு பகுதி நேரமாக ஆய்வு
செய்தேன். பல்கலைக் கழக அனுமதியும், பின்புலமும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அடுத்தடுத்து
இவ்வாய்வானது வரலாற்றுக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறாக
எனக்கு ஊக்கம் தரும் வகையில் எனக்கு இந்த விருது தந்த எழுச்சி தலைவர் அவர்களை நான்
நன்றியோடு நினைவு கூறுகிறேன். நான் முன்னரே சொன்னதைப் போல நான் ஒரு தட்டச்சுச்சுருக்கெழுத்தராகவோ,
பிற அலுவலகப் பணியாளராகவோ இருந்திருந்தால் இந்த இடம் வந்திருக்க முடியாது. என்னை வெளிச்சம்
போட்டு காட்டிய அவருக்கு நன்றி. மூன்று மாதங்களுக்கு முன்பாக இளவந்திகை திருவிழாவின்
போது கூட எனக்கு ஒரு விருது வழங்கினார்கள். இவ்வாறான விருதுகள் என்னை, ஓய்வு பெற்று
ஏழு வருடம் ஆக போகிறது. இன்னும் செய் சும்மா இருக்காதே என்று வேகப்படுத்துகிறது. கொஞ்சம்
அலுப்பு இருந்தால் கூட நாளை அடுத்து போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. போன
வாரம் புதுக்கோட்டையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இங்கு ஒரு சிலை இருக்கு, நீங்க
வந்து அவசியம் வந்து பாருங்கள் குழப்பமாக இருக்கிறது என்று.
என்னுடைய
ஆய்வுக்கு குடும்பத்தினர் ஆதரவு பெரிது... குறிப்பாக எனது மனைவி. பல ஆய்வாளர்களின் குடும்பத்தை நான் பார்த்திருக்கிறேன்,
மனைவி, குடும்பத்தினுடைய ஆதரவு பலருக்கு இருக்காது. என்னுடைய மனைவி சின்னப்
பையனை பள்ளிக்கு எப்படி அனுப்புவாரோ அப்படி இன்றும் என்னை அனுப்பி வைத்தார்.
1993இல் என்னை எவ்வாறு அனுப்பினாரோ அதேபோல இன்றும் என்னை அனுப்பி வைத்தார். இன்னும்
என் ஆய்வு தொடரும் அனைவருக்கும் நன்றி! வணக்கம்.





Comments
Post a Comment