தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை சார்பாக வியாழ வட்ட ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பான வாவி நூல் வெளியீட்டு விழாவும், “சோழ மண்ணில் பௌத்தம் : களப்பயண அனுபவங்கள்” என்ற தலைப்பிலான வியாழ வட்டச் சிறப்பு ஆய்வளிக்கை நிகழ்வும் 12.9.2024இல் தமிழ்ப் பல்கலைக்கழக பனுவல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாவி நூலை வெளியிடும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இது, என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் வெளியீட்டிற்கு அடுத்து நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வாகும். நூல் வெளியீட்டிற்குப் பிறகு களப்பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பல புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. கும்பகோணம் பகுதியில் திருவிளந்துறை புத்தர் கோயில் இருந்ததற்கான கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் முக்கியமான சான்றாக உள்ளது. அங்கிருந்து பயணிக்க ஆரம்பித்தால் பட்டீஸ்வரம், பழையாறை, முழையூர், கோபிநாதப்பெருமாள்கோயில், திருவலஞ்சுழி, பாபநாசம் அருகில் மதகரம், அய்யம்பேட்டை அருகில் மண...