திருவாரூர் மாவட்டத்தில் பௌத்தம்

திருவாரூர் மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக புத்தர் சிலைகள் இடும்பவனம், இலையூர், உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கோட்டப்பாடி, சீதக்கமங்கலம், திருநாட்டியத்தான்குடி (இரு சிலைகள்), திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி, வலங்கைமான், வளையமாபுரம், விடையபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. இவற்றில் இலையூர், கண்டிரமாணிக்கம், வலங்கைமானைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களிலும் விடையபுரம் சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ளன. தலை இல்லாத சிலை, தலைப்பகுதி மட்டும் உள்ள சிலை என்ற வகையில் இவை காணப்படுகின்றன. முதலில் களத்தில் உள்ள சிலைகளைப் பார்த்துவிட்டு அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம். இடும்பவனம் அருகில் காடுவெட்டியில் பொ.ஆ.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘அம்மணசாமி’ என்றழைக்கப்பட்ட அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை, நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, மேலாடை ஆகியவற்றுடன் இச்சிலை இருந்தது. மன்னார்குடி அருகில் உள்ளிக்கோட்டையில் செட்டியார்மேடு என்னுமிடத்தில் ‘செட்டியார்’ என்று...