பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை
பேட்டைவாய்த்தலையில் 1998இல் முதன்முதலாக புத்தர் சிலை பார்க்கச் சென்றது, அச்சிலை 2002இல் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, அவ்வாறு காட்சிப்படுத்தப்பட நான் அனுப்பிய அஞ்சலட்டைதான் காரணம் என 2008இல் அறிந்தது என்ற பின்னணியில் முதலில் பேட்டைவாய்த்தலைக்கும், பின்னர் திருச்சிக்கும் செல்வோம்.
மார்ச் 1998
திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன்.
செப்டம்பர் 1998
திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் கோயில் இருந்தது. பேருந்து வசதி இல்லாத நிலையில் அருகிலிருந்த கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டேன். வெளியூர்க்காரர்களுக்கு மிதிவண்டி தருவதில்லை என்ற பதில் வந்தது. ஆய்வு தொடர்பாக நான் வந்த விவரத்தைக் கூறி அதற்கான கடிதத்தைக் காண்பித்தேன். "ஆய்வுன்னா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, தர முடியாதுன்னா தரமுடியாது" என்ற பதில் வந்தது. என் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தேன். அதையும் சைக்கிள் கடைக்காரர் ஏற்பதாக இல்லை. அருகிலுள்ள பிற வாடகை சைக்கிள் கடைகளில் விசாரித்தேன். சொல்லிவைத்தாற்போல் அனைவரும் மறுத்தனர். நான் வலியுறுத்தி என் அடையாள அட்டையைக் காட்டவே ஒரு கடைக்காரர், "இதுபோல உங்களுக்கு எத்தனை அட்டை வேண்டும், நான் தருகிறேன்" என்று கூறிவிட்டு, என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாக் குறையாகக் கத்த ஆரம்பித்தார். அடுத்த முறை வரலாமா என்ற யோசனை ஒரு புறம், உடன் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மறுபுறம். இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவ்வ ஆரம்பித்தது. எப்படியும் சிலையைப் பார்த்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு வந்து நடக்க ஆரம்பித்தேன். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கோயிலை அடைந்தேன். கோயிலில் இருந்த அறிவிப்புப்பலகையில் "கோயிலுக்கு முன் தோப்பில் ஒரு சைன விக்கிரக உருவமும், சுமார் 6 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு சிற்பமும் உள்ளன" என்ற குறிப்பு இருந்தது. கோயிலின் வெளியே வந்தேன். நுழைவாயிலின் எதிரே சிலையைக் கண்டேன். சிலை இருந்த இடத்தின் அருகே மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மாட்டுத்தொழுவம் போலிருந்த அவ்விடத்தில் அமைதியாக இருந்தார் புத்தர். பார்ப்பதற்கு சமண தீர்த்தங்கரைரைப் போல இருந்த அந்த சிலையை உற்றுநோக்கியபோது புத்தர் சிலைக்குரிய கூறுகளைக் கண்டேன். சிலர் கோயிலுக்குப் பின்புறம் மூன்று சமணர் சிலைகள் இருந்ததாகவும், அவை முறையே கடன் கொடுத்தவன், கடன் வாங்கியவன், சாட்சி என்றும் சொல்லப்படுவதாகவும் கூறினர். மூன்று சிலைகளில் ஒரு சிலை கோயிலின் எதிரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இரு சிலைகள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலர் பேட்டைவாய்த்தலை-நங்கவரம் சந்திப்பில் இரு சமணர் சிலைகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று புதையுண்டு போனதாகவும் கூறினர். சிலைகள் முன்பு இருந்தஇடத்தைக் கடன்காரக்குழி அல்லது கடன்காரப்பள்ளம் என்று கூறினர். மாறுபட்ட கருத்துக்களுக்கிடையே கிடைத்த ஒரு சிலையைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியே. புத்தரைத் தவறாக சமணர் எனக் கூறிவந்ததைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. முகம் தெரியாத அளவு இருட்ட ஆரம்பித்தது. களப்பணி முடிந்ததும் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியருக்குக் களப்பணியின்போது நான் புத்தர் சிலையைப் பார்த்த விவரத்தை ஓர் அஞ்சலட்டை வழியாகத் தெரிவித்தேன்.
ஏப்ரல் 1999
தொடர்ந்து பல முறை அங்கு சென்றேன். மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் செயல் அலுவலரிடம் எழுத்துவழி அனுமதி கேட்டுப் பெற்று,அந்த புத்தர் சிலையைப் புகைப்படம் எடுத்தேன்.
ஜூன் 1999
புகைப்படம் எடுக்க அனுமதி தந்ததோடு உதவியும் செய்த செயல் அலுவலருக்கு நன்றி கூறி கடிதம் எழுதினேன். அத்துடன் சிலையின் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தேன். அவருக்கு எழுதிய கடிதத்தில் அச்சிலையைச் சமணர் என்று தவறாக உள்ளூரில் கூறிவருவதையும், கோயில் தல வரலாற்றுக்குறிப்பிலும் சமணர் சிலை என்று குறிப்பிட்டுள்ளதையும் கூறி அது புத்தர் சிலை தான் என்று உறுதிப்படுத்தியிருந்தேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு கலைக்கோவன்
-------------------------------------------------------------------------------------------
அடுத்தடுத்து பல முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.
மே 2002
"திருச்சி அருங்காட்சியகத்திற்குப் பழமையான புத்தர் வருகை" என்ற தலைப்பில் நாளிதழில் வெளியான செய்தியைக் கண்டேன். அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு இராஜமோகன் தலைமையில் இந்த புத்தர் சிலை உள்ளிட்ட சில சிலைகள் அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. களப்பணியின்போது நான் பார்த்தது இந்தச் சிலையைத்தான். சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துவரப்பட்ட முயற்சி பற்றியோ, நாளிதழ் செய்தி பற்றியோ அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. பணியின் பளு காரணமாகவோ, சிலையை பேட்டைவாய்த்தலையிலிருந்து கொண்டுவந்து அருங்காட்சியகத்தில் சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்திலோ அவர் மறந்திருக்கலாம்.
அக்டோபர் 2008
பிறிதொரு களப்பணியின்போது திருச்சிக்குச் சென்றபோது அரசு அருங்காட்சியகம் சென்றேன். காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்களும், முன்னாள் காப்பாட்சியர் திரு இராஜமோகன் அவர்களும் அங்கிருந்தனர். என்னைக்கண்டதும் திரு இராஜமோகன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. "உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி" என்று கூறிக்கொண்டே என்னை அவசரம் அவசரமாக அருங்காட்சியக நுழைவாயிலுக்கு அழைத்துவந்தார். பேட்டைவாய்த்தலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த சிலை தற்போது அருங்காட்சியக வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதைக் காண்பித்தார்.
"இந்த புத்தர் சிலை பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு இங்கு வைக்க உதவியது உங்களது எழுத்துதான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று கேட்டபோது அவர், "பேட்டைவாய்த்தலையில் உங்களது களப்பணியின்போது நீங்கள் கண்ட புத்தர் சிலை பற்றி எழுதிய அனுப்பிய அஞ்சலட்டைதான் இந்தச் சிலை இங்கு வரக் காரணமாக இருந்தது" என்று கூறி மனதாரப் பாராட்டினார். 1998இல் நான் அனுப்பிய அஞ்சலட்டைச் செய்தியை மறவாமல், 2008இல் எனது களப்பயணத்தில் எதிர்பாராத நிலையில் அருங்காட்சியகத்தில் நான் அவரைச் சந்தித்த நிலை ஏற்பட்டபோது அவர் நினைவுகூர்ந்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது நினைவாற்றலுக்கு நன்றி கூறினேன். என் ஆய்வுக்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நான் எதிர்கொண்டுள்ளேன். மாட்டுத்தொழுவத்தின் அருகே இருந்த புத்தர் சிலை அருங்காட்சியக வாயிலுக்கு வருவதற்கு நான் காரணமாக இருந்ததை எண்ணி வியந்தேன். அடையாள அட்டையைக் காண்பித்தும் நான் துரத்தப்பட்டபோது பட்ட வலி என்னைவிட்டுப் போனதை இப்போது உணர்ந்தேன், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புத்தர் சிலையின் மூலமாக.
12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
இயேசுநாதரைப் போல, மாட்டுத் தொழுவத்தில் இருந்த புத்தரை, அருங்காட்சியக வாயிலில் குடியமர்த்திய தங்களின் மகத்தானப் பணி போற்றத் தக்கது, பாராட்டத்தக்கது. இயேசு நாதரைப் போல தாங்களும் ஒரு மீட்பர்தான். தங்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
ReplyDelete