சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை
1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் இன்று வரை சோழ நாட்டில் இவற்றைப்போல இரு மடங்கு எண்ணிக்கையிலான புத்தர் சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் களப்பணி மேற்கொண்டபோது நேரடியாகக் காண முடிந்தது. 1998 முதல் 2009 வரை இப்பகுதியில் அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இக்கட்டுரையாளரால் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சி காஜாமலையில் அக்டோபர் 2008இல் கண்டுபிடிக்கப்பட்ட சிலை சோழ நாட்டில் காணப்படுகின்ற 65ஆவது புத்தர் சிலையாகும்.
திருச்சி மாவட்டத்தில் புத்தர் சிலைகள் ஸ்ரீராமசமுத்திரம் என்றழைக்கப்படும் ஆயிரவேலி அயிலூர், காஜாமலை, கீழக்குறிச்சி, குழுமணி, பேட்டவாய்த்தலை, மங்கலம், முசிறி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. குழுமணி, முசிறி ஆகிய இடங்களைச் சார்ந்த சிலைகள் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர செப்டம்பர் 1998-இல் களப்பணி மேற்கொண்டபோது பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக தோப்பில் காணப்பட்ட புத்தர் சிலை, மே 2002-இல் திருச்சி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
முசிறி வட்டத்தில் உள்ள மங்கலம் என்னும் சிற்றூரில் அரவாண்டியம்மன் என்னும் கோயில் உள்ளது. 1998-இல் களப்பணி சென்றபோது இக்கோயிலில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கி.ஸ்ரீதரன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அவர், இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், முசிறி-ஆத்தூர் அக்காலத்தில் சிறந்த வணிகத்தலமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் பல இடங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகள் அங்குப் பௌத்த சமயம் செழிப்பான நிலையில் இருந்ததை உணர்த்துகிறது என்றும், வணிக நோக்கில் இப்பகுதிக்கு வந்த பௌத்த சமயத்தவர் இச்சிலையைச் செதுக்கியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இச்சிலை பீடத்துடன் 68 அங்குலம் உயரமுள்ளது. சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்கங்கள் காணப்படுகின்றன. அகன்ற மார்பு, திண்ணிய தோள்கள், நீண்டு வளர்ந்த காதுகள், தலையில் அழகான தீச்சுடர் வடிவில் முடி,திருவாட்சி போன்ற அமைப்பு முதலியவை இதன் சிறப்புக் கூறுகளாகும். சோழ நாட்டில் காணப்படுகின்ற வேறு எந்தப் புத்தர் சிலையின் பீடத்திலும் இல்லாத சிங்க உருவங்கள் இச்சிலையில் காணப்படுகின்றன.இவை அனைத்திற்கும் மேலாக இந்தச்சிலை மீசையுடன் உள்ளது. பொதுவாக மைத்ரேயர் சிற்பம் மீசையுடன் காணப்படும். இங்குப் புத்தர் சிலைக்கு மீசையுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சோழ நாட்டில் உள்ள புத்தரது கற்சிலைகளில் இந்தச் சிலை மட்டுமே மீசையுடன் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. உள்ளூர் மக்கள் இச்சிலை புத்தர் எனத் தெரிந்தபோதிலும், செட்டியார் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள்.அரவாண்டியம்மன் கோயிலில் பிராணிகளைப் பலி கொடுப்பது வழக்கமென்றும், பலியிடுவதைப் புத்தர் விரும்ப மாட்டாராகையால் அவரது சிலையை அமைப்பதற்காகத் தனியாக ஒரு சன்னதி கட்டி வைத்துள்ளதாகக் களப்பணியின்போது கூறினர். பலியிடுவது தெரியாமலிருப்பதற்காகத் திரைச் சீலையினை சிலைக்குமுன் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
சோழ நாட்டில் புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைக்கின்றனர். வழிபாடும் நடத்துகின்றனர். புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்கள், பொதுவிடங்கள், கோயில்கள், தோப்புகள், ஊரின் மையப்பகுதி போன்ற பலவாறான இடங்களில் காணப்படுகின்றன. சில இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. சில இடங்களில் புத்தர் சிலைகள் பராமரிப்பின்றி உள்ளன. பல இடங்களில் புத்தர் சிலையைச் சமணர் சிலை என்றும், சமணத் தீர்த்தங்கரர் சிலையைப் புத்தர் சிலை என்றும் கூறிவருவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது.
பிப்ரவரி 2009-இல் களப்பணி சென்றபோது தொடர்ந்து அந்த புத்தர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் காணமுடிந்தது. முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய சன்னதிக்கு முன்பாக முகப்பு மண்டபம் ஒன்றை 2002-இல் புதிதாகக் கட்டியுள்ளனர். அதில் செட்டியப்பன் ஸ்வாமி ஆலயம் என்ற குறிப்போடு ஒரு கல்வெட்டு உள்ளது. மண்டபத்தின் முகப்பில் மேல் புறத்தில் அமர்ந்த நிலையிலுள்ள சுதையாலான புத்தர் சிலை உள்ளது. அரவாண்டியம்மன் கோயிலின் இடப்புறத்தில் காணப்படுகின்ற மீசையுடன் கூடிய புத்தர் சிலையை மண்டபத்துடன் கூடிய சிறிய சன்னதியில் வைக்கவுள்ளதாகக் களப்பணியின்போது தெரிவித்தனர். மன்னரைக் குறிக்கும் வகையிலோ, வீரத்தைக் குறிக்கும் வகையிலோ, சிற்பியின் அதிகமான ஆர்வம் காரணமாகவோ இந்தப் புத்தருக்கு மீசை அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். வழிபாடு, நம்பிக்கைகள் தொடர்ந்து முன்பிருந்ததைப் போலவே தற்போதும் உள்ளதைக் காணமுடிந்தது. சிறிய சன்னதிக்குள் புத்தரை அமைக்கும் நன்னாளை உள்ளூர் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
நாயன்மார்கள்-ஆழ்வார்கள் காலத்தில் பௌத்தச் சமயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறப்பட்டாலும்கூட அவர்களுக்குப் பின் சோழர் ஆட்சியில் இந்தச் சமயமானது சிறப்புற்று இருந்ததை இப்பகுதியில் காணப்படுகிற புத்தர் சிலைகள் உறுதிகூறுகின்றன. சோழ நாட்டில் தேவாரப்பாடல் பெற்ற சிவக்கோயில்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக்கோயில்களும் இருந்த அளவு அதற்குப் பிந்தைய காலகட்டங்களில் புத்தர் கோயில்கள் இருந்ததை இந்த புத்தர் சிலைகள் உணர்த்துகின்றன. மயிலாடுதுறை அருகே ரிஷிக்கோயில் என்னும் பெயரிலான புத்தர் கோயில் உள்ளது. தற்போது சோழ நாட்டில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்காகக் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதியில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும், வழிபாடுகளும் இப்பகுதியில் பௌத்த சமயத்தின் தாக்கத்தினை உணர்த்துவதோடு பௌத்தம் புத்துயிர் பெற்று வருவதையும் உறுதி செய்கின்றன.
துணை நின்றவை
- பிக்கு சோமானந்தா, தம்ம பதம், மகாபோதி சொசைட்டி, சென்னை, 1996.
- தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம், (2-ஆம் பகுதி), தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 1998
- வேங்கடசாமி, மயிலை.சீனி., பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957
- ஜம்புலிங்கம், பா., சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999
- Jambulingam, B., Buddhism in the Cola Country, Project Report, Nehru Trust for the Indian Collections
- at the Victoria & Albert Museum, New Delhi, 2002
- Minakshi, C., “Buddhism in South India”, South Indian Studies-II, (Editor R.Nagaswamy), Society for Archaeological, Historical and Epigraphical Research, Chennai, 1979
- Srinivasan, P.R., “Buddhist images of South India”, Story of Buddhism with special reference to South India, Department of Information and Publicity, Madras, 1960
நன்றி :தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரை.
மே 2022இல் மங்கலத்திற்குக் களப்பணி சென்றபோது அரவாண்டியம்மன் கோயிலில் புத்தருக்காகக் கட்டப்பட்டிருந்த தனி சன்னதியையும், வெளியில் புத்தர் சிலையையும் காணமுடிந்தது. அந்தச் சன்னதியானது முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானம் ஆகியவற்றுடன் உள்ளது.
19 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment