கோயில்களில் புத்தர் சிலைகள்

கோயில்களில் புத்தர் சிலைகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. இவை தவிர சுமார் 10 இடங்களில் பிற சிலைகளை புத்தர் சிலைகள் என்று கூறிவருகின்றனர். இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில சிலைகள் தலையின்றி உள்ளன. சில சிலைகளின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. 1993 முதல் சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது புத்தர் சிலைகளை புத்தர் கோயிலிலும், சைவ, சமண மற்றும் அய்யனார் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகிலும் காணமுடிந்தது. அருந்தவபுரம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் அருகில் திருக்கோயில்பத்தில் உள்ள சிவன் கோயிலின் திருச்சுற்றில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்...