கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் சார்பாக வெளிவருகின்ற தமிழாய்வுக் களஞ்சியம் முதல் இதழ் (தமிழாய்வு 1, களஞ்சியம் 1, ஜனவரி-மார்ச் 2024) கிடைக்கப் பெற்றேன்.
இந்த தமிழ்ச்செம்மொழி வரலாற்று இலக்கிய ஆய்விதழ், பதிவு செய்யப்பெற்ற இதழாகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் இசைவு பெற்ற இதழாகவும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு நிலைகளை விளக்குவதும், வரலாறு முதல் வாசகர் கடிதம் வரை துலக்குவதும் இதழின் நோக்கமாகும் என்று தமிழாய்வுக் களஞ்சியத்தின் ஆசிரியருமான முனைவர் சி.இலட்சுமணன் கூறுகிறார்.
48 பக்கங்களைக் கொண்ட இவ்விதழ் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தொல்லியல் உள்ளிட்ட பல துறையிலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம், பேரா. ச.அகத்தியலிங்கம், பேரா. இ.சுந்தரமூர்த்தி ஆகியோரின் வாழ்வியலும், படைப்புகளும் முதல் மூன்று கட்டுரைகளாக அமைகின்றன. இலக்கியங்களில் கோட்டைகள், புதுக்கோட்டை தொண்டைமான், கோயில்களில் புத்தர் சிலைகள், திருமுருகாற்றுப்படை பாடவகுப்பு, மகாகவி பாரதியாரின் பல்துறைப் புலமையும் பன்மாண் சிறப்பும், மொழியறிஞர் தொல்காப்பியர், பழந்தமிழர் வாழ்ந்த கீழடி உள்ளிட்ட கட்டுரைகளுடன், கவிதைகள், சிறுகதைகள், முதல் இதழுக்கு வந்த வாழ்த்துச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழாய்வுக் களஞ்சியம் சாதனைகளைப் படைக்கவும், போற்றத்தக்க முயற்சி தொடரவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தொடர்புக்கு: முனைவர் சி.இலட்சுமணன் (+91 63795 84362/+94865 75944)
இவ்விதழில் வெளியான என்னுடைய கட்டுரை: கோயில்களில் புத்தர் சிலைகள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன.(1) இவை தவிர சுமார் 10 இடங்களில் பிற சிலைகளை புத்தர் சிலைகள் என்று கூறிவருகின்றனர். இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில சிலைகள் தலையின்றி உள்ளன. சில சிலைகளின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. 1993 முதல் சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது புத்தர் சிலைகளை புத்தர் கோயிலிலும், சைவ, சமண மற்றும் அய்யனார் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகிலும் காணமுடிந்தது.
அருந்தவபுரம்தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் அருகில் திருக்கோயில்பத்தில் உள்ள சிவன் கோயிலின் திருச்சுற்றில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை உள்ளது.(2) அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. வலது உள்ளங்கையும், பிரபையும் உடைந்துள்ளன. இச்சிலை வழிபாட்டில் இல்லை.
கரூர்
புதுக்கோட்டை மாவட்டம் கரூரில் உள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் ஒரு புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. பீடத்தில் உள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், இடது மார்பை மூடிய மேலாடை, இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. தலைக்குப் பின்னுள்ள தோரணம் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் அமையும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள கருப்பர்சாமிக்கு விலங்குகளைப் பலிகொடுப்பது வழக்கமென்றும், அது தெரியாமலிருக்க இச்சிலையைத் தனியாக வைத்துள்ளதாகவும் இவ்வூர் மக்கள் கூறினர்.
திருவலஞ்சுழி
தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழியில் சிவன் கோயிலிலிருந்த நின்ற நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலை சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் தலைகீழாக வைக்கப்பட்ட கேள்விக்குறியைப் போன்ற திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அபய முத்திரையில் வலது கை, பல மடிப்புகளுடன் உடலை அணைத்தபடியுள்ள மேலாடை ஆகியவற்றுடன் உள்ளது. சோழ நாட்டில் நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
பட்டீஸ்வரம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஒரு புத்தர் சிலை உள்ளது. முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள, புத்தர் சிலையைச் சுற்றிலும் அழகான சிற்ப வேலைப்பாடு காணப்படுகிறது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, தீச்சுடர், அதற்கு மேல் போதி மரம், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் இச்சிலை உள்ளது. கோயிலுக்கு வெளியே, வலப்புறத்தில் இருந்த இச்சிலை தற்போது கோயிலின் உள்ளே உள்ளது.
புத்தமங்கலம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் புத்தமங்கலத்தில் உள்ள புத்தர் கோயிலில் ஒரு புத்தர் சிலை உள்ளது.(3) உடற்பகுதியுடன் தலைப்பகுதி பொருத்தப்பட்ட, அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை ஒரு பீடத்தின்மீது உள்ளது. இச்சிலை நெற்றியில் திலகக்குறி, நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் காணப்படுகிறது. வலது உள்ளங்கை சிதைந்துள்ளது. முகம் தெளிவின்றி உள்ளது. புத்தமங்கலத்தின் வடக்கில் மரத்தடியில் புதர்களுக்கிடையில் மண்டிக்கிடந்த இடத்தில் இருந்த சிலையை தாய்லாந்து நாட்டு வடிவமைப்பில் கோயிலை எழுப்பி அதில் அமைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டுப் பௌத்த சமயத்தினர் கோடைக்காலத்தில் இங்கு வந்து முடியெடுத்து, வழிபடுவதாக உள்ளூரில் கூறினர். மழை வருவதற்காக பட்டை மிளகாயை அரைத்துச் சிலையின் தலையில் தேய்த்து, எருக்கம்பூ மாலையை அணிவிப்பது வழக்கம் என்றும், அவ்வாறாக மாலையிட்ட சில நிமிடங்களில் மழை வந்துவிடும் என்றும், கோயில் கட்டி அதில் வைத்துவிட்டதால் இப்போது இவ்வாறு செய்வதில்லை என்றும், இந்தப் புத்தரை ‘மழையை வரவழைக்கும் சாமி’ என்று வழிபடுவதாகவும் கூறினர்.
பெருஞ்சேரி
மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரியில் உள்ள புத்தர் கோயிலில் பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் அழகான திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பின் இடப்புறம் குறுக்கே செல்லும் ஆடை, இடுப்பில் ஆடை, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி முதலியவை இச்சிலையின் கூறுகளாகும். தலையின் பின்புறத்திலும் சுருள்முடி அழகாக உள்ளது. இந்தச் சிலையின் பீடத்தில் எழுத்துப்பொறிப்பு தெளிவின்றி உள்ளது. அண்மைக்காலமாக விளக்கேற்றுவதோடு, சிலை முழுவதும் திருநீறு பூசியும், நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டும் வணங்குகின்றனர். முன்னர் இச்சிலையை ‘ரிஷி’ என்றழைத்தனர். தற்போது புத்தர் என்றே கூறி வழிபடுகின்றனர்.
பேட்டைவாய்த்தலை
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்ற மூன்று சமண தீர்த்தங்கரர் சிலைகளில் இரு சிலைகள் புத்தர் சிலைகள் ஆகும். அவற்றில் மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக இருந்த ஒரு சிலை தற்போது திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. முகம் தெளிவின்றி உள்ளது. பிரபையின் மேல் பகுதி உடைந்துள்ளது.
மங்கலம்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மங்கலத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் ஒரு புத்தர் சிலை உள்ளது.(4) பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ள இந்தச் சிலை மீசையுடன் உள்ளது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகான சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் ஆகியவற்றுடன் இச்சிலை உள்ளது. சோழ நாட்டிலுள்ள பெரிய புத்தர் சிலைகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் மக்கள் இந்தப் புத்தரைச் ‘செட்டியார்’ என்று கூறி விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபடுகின்றனர். கோயிலில் திருட வந்தவர் அரவாண்டியம்மன் சாபத்தால் கல்லாகிவிட்டதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் விலங்குகளைப் பலிகொடுப்பது வழக்கமென்றும், அது தெரியாமலிருப்பதற்காகத் திரைச்சீலையைப் போடுவதாகவும் கூறினர்.
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள மல்லிநாதசுவாமி ஜினாலயம் என்றழைக்கப்படுகின்ற சமணக்கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் ஒரு மரத்தின் கீழ் ‘சமணர்’ என்றழைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வழிபாட்டில் இருந்தது.5 பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலிருந்த இந்தச்சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, மேலாடை, இரு புறங்களிலும் நின்ற சிங்கங்கள், பிரபையின் இரு புறமும் காவலர்கள் ஆகிய கூறுகளுடன் இருந்தது.
மானம்பாடி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடியில் ஒரு புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முட்புதர்களுக்கிடையே இருந்த இந்தச் சிலை தற்போது சாலையின் எதிர்ப்புறத்தில் வடபத்ர காளியம்மன் கோயில் வளாகத்தின் இடது புறத்தில் உள்ளது. ஏழு அடுக்குகளைக் கொண்ட பீடத்தில் உள்ள இச்சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், தலைக்குப் பின் வேலைப்பாடுகளுடன்கூடிய பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. தற்போது இச்சிலை வழிபாட்டில் உள்ளது.
முழையூர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் முழையூர் பரசுநாதசுவாமி கோயிலில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி உள்ளது. கண்ணிமைகள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர் ஆகியவற்றுடன் இருந்த இந்தச் சிலையின் இடது காதும், தீச்சுடரும் சிதைந்துள்ளன.
பிற சிலைகள்
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் செண்பகாரண்யேஸ்வரர் கோயிலின் திருச்சுற்றில் உள்ள இரு சிலைகள் சமண தீர்த்தங்கரர் சிலைகளாகும். முன்னர் இவை புத்தர் சிலைகளாகக் கருதப்பட்டன.(6) தொடர்ந்து சென்ற களப்பணியின்போதும், உருவ அமைதியைக் கொண்டும் அவை புத்தர் சிலைகள் அல்ல என்பதை அறியமுடிந்தது. இவை இவ்வூருக்கு அருகில் சன்னாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சமண சிலைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறே கள எல்லைக்கு அப்பால், இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோயிலில் நின்ற நிலையில் உள்ள ஒரு புத்தர் சிலை உள்ளது. இந்த மூன்று சிலைகளும் வழிபாட்டில் இல்லை.
அருந்தவபுரம், திருவலஞ்சுழி, பேட்டைவாய்த்தலை, முழையூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகள் பாதுகாப்பு கருதி கோயிலில் வைக்கப்பட்டிருக்கலாம். பிற சிலைகள் வழிபாட்டில் இருந்து வந்துள்ளன. இந்த அனைத்து சிலைகளும் முன்பு இப்பகுதியில் இருந்த புத்தர் கோயிலிலோ, விகாரங்களிலோ இருந்திருக்கலாம். சமயம் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு பாதுகாப்பு மற்றும் வழிபாடு என்ற நிலையில் இச்சிலைகள் உள்ளதைக் களப்பணியின்போது காணமுடிந்தது.
குறிப்புகள்
2.“தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை கண்டெடுப்பு”, தினமணி, 6 மார்ச் 2015, ப.23
3.“துண்டித்த தலையுடன் புத்தர் சிலை”, தினமலர், 1 ஜனவரி 1999, ப.5
4.“மீசையுடன் கூடிய புத்தர் சிலை கண்டெடுப்பு”, தினமலர், 17 ஜூன் 1999, ப.2
5.தற்போது சிலையைக் காணவில்லை.
6.B.Jambulingam, “Buddha statues in the vicinity of other temples in the Chola country”, Tamil Civilization, Vol.19, September 2008 என்ற கட்டுரையில் திருநாகேஸ்வரம் செண்பகாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ளவை புத்தர் சிலைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவை புத்தர் சிலைகள் அல்ல. அவ்வாறே இதே கட்டுரையில் சுந்தரபாண்டியன்பட்டினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இராமநாதபுரம் மாவட்டம் ஆகும்.
25 மார்ச் 2024இல் மேம்படுத்தப்பட்டது.
சிறப்பு. வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா.
ReplyDelete