தஞ்சாவூர் இராஜராஜேச்சரத்தில் புத்தர் சிற்பங்கள்
தஞ்சாவூர் இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. சோழ நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற புத்தர் கற்சிலைகளில் பெரும்பாலானவை இக்கோயிலைக் கட்டிய இராஜராஜன் காலத்தையோ, அதற்குப் பின்னுள்ள காலத்தையோ சார்ந்தவையாக (கி.பி.10ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்குப் பின்) உள்ளன. பெரிய கோயிலில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்கள் மற்றும் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகளின் பொதுக் கூறுகளைக் காண்போம். இராஜராஜேச்சரத்தில் இரு இடங்களில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் புத்தர் சிற்பத்தொகுதி இராஜராஜன் திருவாயிலின் உட்புறச் சுவரில், தாங்குதளத்தில் உள்ளது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள அந்த சிற்பத்தில் போதி மரத்தின்கீழ் புத்தர் அமர்ந்தவாறு போதனை செய்யும் கோலம் காணப்படுகிறது. இரண்டாவது புத்தர் சிற்பத் தொகுதி கருவறை தென்புற வாயிலின் படிக்கட்டின் பக்கவாட்டின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கி உள்ள அந்த தொகுதியில் புத்தர் போதி மரத்தடியில் தியான நிலையில் பத்மாசன கோலத்தில் உள்ளதையும், புத்தர் போதி மரத்தடியில் நின்ற நிலையில் உள்ளதையும் காண முடியும். ...