தஞ்சாவூர் இராஜராஜேச்சரத்தில் புத்தர் சிற்பங்கள்

தஞ்சாவூர் இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. சோழ நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற புத்தர் கற்சிலைகளில் பெரும்பாலானவை இக்கோயிலைக் கட்டிய இராஜராஜன் காலத்தையோ,  அதற்குப் பின்னுள்ள காலத்தையோ சார்ந்தவையாக (கி.பி.10ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்குப் பின்) உள்ளன. பெரிய கோயிலில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்கள் மற்றும் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகளின் பொதுக் கூறுகளைக் காண்போம்.

இராஜராஜேச்சரத்தில் இரு இடங்களில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் புத்தர் சிற்பத்தொகுதி இராஜராஜன் திருவாயிலின் உட்புறச் சுவரில், தாங்குதளத்தில் உள்ளது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள அந்த சிற்பத்தில் போதி மரத்தின்கீழ் புத்தர் அமர்ந்தவாறு போதனை செய்யும் கோலம் காணப்படுகிறது.


இரண்டாவது புத்தர் சிற்பத் தொகுதி கருவறை தென்புற வாயிலின் படிக்கட்டின் பக்கவாட்டின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கி உள்ள அந்த தொகுதியில் புத்தர் போதி மரத்தடியில் தியான நிலையில் பத்மாசன கோலத்தில் உள்ளதையும், புத்தர் போதி மரத்தடியில் நின்ற நிலையில் உள்ளதையும் காண முடியும்.


சோழ நாட்டில் 1993 முதல் மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் ஆய்வுப்பகுதியிலும் பிற பகுதியிலும் சுமார் 70 புத்தர் சிலைகளை காணமுடிந்தது. அவற்றில்  திருச்சி மாவட்டத்தில் மங்கலம் (1999), திருச்சி (2008), தஞ்சாவூர் மாவட்டத்தில் கோபிநாதப்பெருமாள்கோயில் (2002)  (தலையின்றி),  கோபிநாதப்பெருமாள் கோயில் (2002) (இடுப்புப்பகுதி மட்டும்), மணலூர் (2015), திருவாரூர் மாவட்டத்தில்  புதூர் (2000),  குடவாசல் (2002), திருநாட்டியத்தான்குடி (2003), உள்ளிக்கோட்டை (2005), வளையமாபுரம் (2007), கண்டிரமாணிக்கம் (2012), நாகப்பட்டினம் மாவட்டத்தில்  கிராந்தி (2013), அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் (2006), பிள்ளைபாளையம் (2019), இராமநாதபுரம் மாவட்டத்தில்  சுந்தரபாண்டியன்பட்டனம் (நின்ற நிலை) (2002), கடலூர் மாவட்டத்தில் ராசேந்திரப்பட்டினம் (2007) ஆகிய 16 இடங்களில் புத்தர் கற்சிலைகளும், அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி (1999) ஒன்றும் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

பெரிய கோயிலில் உள்ள புத்தர் சிற்பத்தொகுதிகளிலும் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகளிலும் அமர்ந்த நிலையிலான தியான கோலம், நின்ற நிலை, மார்பில் காணப்படுகின்ற மேலாடை ஆகிய கூறுகள் சற்றொப்ப ஒத்தவாறு உள்ளன.  களப்பணி புத்தர் சிலைகளில் ஞானத்தைக் குறிக்கின்ற தீச்சுடர், தலையில் சுருள் முடி, பரந்த மார்பு, திண்ணிய தோள்கள் உள்ளன. பெரிய கோயிலில் உள்ள சிற்பத் தொகுதியில் அவை காணப்படவில்லை. களப்பணி புத்தர் சிலைகளில் உள்ளங்கையில் தர்ம சக்கரத்தைக் காணமுடியும். பெரிய கோயில் சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளதால் அதனைக் காண முடியவில்லை. அவ்வாறே களப்பணி புத்தர் சிலைகளில் நீண்டு வளர்ந்த காதுகளைத் தெளிவாகக் காணமுடியும். பெரிய கோயில் சிற்பங்களில் தலையிலிருந்து காதுகள் வரை துணியால் மூடப்பட்ட நிலையில் உள்ளதைப் போன்ற தோற்றமாக உள்ளதால் அவற்றைத் தெளிவாகக் காணமுடியவில்லை.

இக்கோயிலில் உள்ள சிற்பத்தொகுதியில் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நிகழ்வுகள் உள்ளன. சோழர் காலத்தில் கிழக்காசிய நாடுகளுடனும், இலங்கையுடனும் கொண்ட தொடர்பால் களப்பிரர் காலத்திற்குப் பிறகு சோழ நாட்டில் பௌத்தம் வேரூன்றியது. இங்குள்ள புத்தரின் சிற்மும் இதன் விளைவால் ஏற்பட்டது எனலாம். இக்கோயிலின் கருவறையைச் சுற்றி சாந்தாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் ஓவியமும் உள்ளது.

அசோகர் காலத்தில் தமிழகத்திற்கு வந்த பௌத்தம் பக்தி இயக்கக் காலத்தில் சற்று பின்னடைவில் இருந்தபோதிலும், இராஜராஜன் காலம் தொடங்கி ஏற்றம் பெற்றதை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக இன்றும் இருந்து நமக்கு உணர்த்தி வருபவை பெரிய கோயிலில் உள்ள புத்தர் சிற்பங்களும், புத்தர் ஓவியமும் களப்பயின்போது கண்ட புத்தர் கற்சிலைகளும் ஆகும்.

Comments

  1. தங்களது பணி மேலும் சிறக்கட்டும் வாழ்க வளர்க...

    ReplyDelete
  2. அருமை ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment