பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து
மார்ச் 2015 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் திருக்கோயில்பத்து என்னும் இடத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கண்டுபிடித்த செய்தி நாளிதழில் வெளியானது. பழமையான சிவன் கோயிலின் புதுப்பித்தலின்போது அச்சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. அச்சிலையைக் காணும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன். 31 டிசம்பர் 2021 அந்தப் புத்தரைக் காண நண்பர் கரந்தை ஜெயக்குமாரும் நானும் பயணித்தோம். தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம், அம்மாப்பேட்டை வழியாகச் சென்றோம். அம்மாப்பேட்டையின் வலது புறத்தில் செல்லும் சாலை இரு பிரிவாகப் பிரிகிறது. வலது புறச்சாலை திருக்கோயில்பத்தினை நோக்கியும், இடது புறச்சாலை அருந்தவபுரத்தை நோக்கியும் செல்கின்றன. அம்மாப்பேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கோயில்பத்து என்றழைக்கப்படுகின்ற திருக்கோயில்பத்து என்னும் இடத்திற்குச் சென்றோம். அங்குள்ள வஜ்ரபுரீஸ்வரர் கோயில் எனப்படுகின்ற சிவன் கோயிலின் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயிலின் வலது திருச்சுற்றில் தலையில்லாத புத்தர் சிலை இருந்தது. (சிலை சிகப்பு வண்ண வட்டம...