பௌத்த சுவட்டைத் தேடி : சீதக்கமங்கலம்
2002ஆம் ஆண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் தமிழகத்தில் காணப்படுகின்ற புத்தர் சிலையின் அமைப்பைப் பற்றி விசாரித்தார். அவர் தத்துவத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அவரைப் போலவே துறை சார்ந்த பலர் அவ்வப்போது நான் பார்க்கின்ற, பார்த்த புத்தர் சிலைகளை பற்றி பேசுவது வழக்கம். தொடர்புடைய துறைத்தலைவர்கள் கூட என்னிடம் இவ்வாறு கேட்டதுண்டு. தொலைபேசியில் ஆர்வமாகப் பேசுவார்கள். சிலை இருக்கும் இடம், அமைப்பு, மற்றும் தொடர்புடைய விவரங்களைக் கேட்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அவர்களிடம் ஆய்வு செய்யும் மாணவர்கள் மூலமாக மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை என் ஆய்வின்போது சந்தித்துள்ளேன். திரு கோவிந்தராஜன் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை பின்னர் தான் அறிந்தேன். நான் பார்த்த புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை கூறினேன். தொடர்ந்து சில நாள் கழித்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்: புத்தர் சிலையின் தலையை எ...