பௌத்த சுவட்டைத் தேடி : குடவாசல் புத்தர்

முந்தைய பதிவொன்றில், 2002இல் குடவாசல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி விவாதித்தோம்.  அக்கண்டுபிடிப்பு தொடர்பான செய்தி சற்றே வித்தியாசமானது. 

2002ஆம் ஆண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் தமிழகத்தில் காணப்படுகின்ற புத்தர் சிலையின் அமைப்பைப் பற்றி விசாரித்தார். அவர் தத்துவத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். 

அவரைப் போலவே துறை சார்ந்த பலர் அவ்வப்போது நான் பார்க்கின்ற, பார்த்த புத்தர் சிலைகளை பற்றி பேசுவது வழக்கம். தொடர்புடைய துறைத்தலைவர்கள் கூட என்னிடம் இவ்வாறு கேட்டதுண்டு. தொலைபேசியில் ஆர்வமாகப் பேசுவார்கள். சிலை இருக்கும் இடம், அமைப்பு, மற்றும் தொடர்புடைய விவரங்களைக் கேட்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அவர்களிடம் ஆய்வு செய்யும் மாணவர்கள் மூலமாக மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை என் ஆய்வின்போது சந்தித்துள்ளேன்.  

திரு கோவிந்தராஜன் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை பின்னர் தான் அறிந்தேன். நான் பார்த்த புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை கூறினேன். தொடர்ந்து சில நாள் கழித்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்:


 • புத்தர் சிலையின் தலையை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? 
 • புத்தரா சமண தீர்த்தங்கரரா என்பதை எப்படி உறுதி செய்வது?
 • நீங்கள் எத்தனை சிலைகள் கண்டுபிடித்துள்ளீர்கள்?
 • தலை இருந்தால் உடல் பகுதி அருகில் இருக்க வாய்ப்பு உள்ளதா?
 • தலைப்பகுதியை மட்டுமே வைத்து புத்தர் என்று கூறமுடியுமா?

அவருடைய அனைத்து கேள்விகளுக்கும் மறுமொழி கூறினேன். பின்னர் அவரிடம் "நீங்கள் ஏதாவது புத்தர் சிலையைப் பார்த்துள்ளீர்களா? பார்க்கப்போகின்றீர்களா? அவ்வாறிருப்பின் சிலையையோ, புகைப்படத்தையோ காண்பியுங்கள்" என்றேன். அவர் இல்லையென்று கூறினார்.

ஒரு நாள் எனக்கு சில நண்பர்களும், அறிஞர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்றைய நாளிதழ்களில் புதிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு தொடர்பாக செய்தி வந்துள்ளதாகவும், அதில் என் பெயர் இருந்ததாகவும் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் நாளிதழ்களை வாங்கிப் பார்த்தபின் செய்தியை அறிந்தேன்.

நாளிதழில் செய்தி வந்தபின் திரு கோவிந்தராஜன் என்னைக் காண வரவில்லை. நானே அவரைக் காணச் சென்றேன். நாளிதழ்களில் வந்த செய்தியைப் பற்றிக் கேட்டேன். "நான் உங்களைக் காண வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் தந்த செய்தி மிகவும் உதவியாக இருந்தது. அதனடிப்படையில் நாளிதழுக்குச் செய்தி தந்து, இன்று வெளிவந்துள்ளது" என்று கூறினார். "நேரில் சிலையைக் காண்பிக்காமல் நீங்கள் செய்தது சரியா?" என்று கேட்டேன். அவர் மறுமொழி கூறாமல் மௌனம் சாதித்துவிட்டு, "ஐயா, நீங்கள் இதனைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பொறுத்துக் கொள்ளுங்கள், இனி கவனமாக இருப்பேன்" என்றார். தான் செய்ததற்கு அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. "இனி ஆய்வு தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்க வரவேண்டாம். இப்பழக்கத்தை இனி கையாளாதீர்கள்" என்றேன். துறை நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும் அவரிடம் கவனமாக இருக்கும்படிக் கூறிவிட்டு வெளியே வந்தேன். 

ஆய்வின்போது இவரைப் போல பலரைச் சந்தித்துள்ளேன். புத்தரை சமணத் தீர்த்தங்கரர், சமண புத்தர்  (எவ்விதத் தொடர்பும் இன்றி) என்றும் சமண தீர்த்தங்கரரை புத்தர் என்றும் கூறும் பலரை என் ஆய்வுக்காலத்தில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். ஒவ்வொன்றும் ஒரு பாடமாக எனக்கு அமைந்தது. ஒருவரின் முயற்சியை, பணியை, சிரமத்தை மிக எளிதாகப் பயன்படுத்துவோர் பலரைக் காணும் நிலையைத் தந்து அவர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள உதவியது என் பௌத்த ஆய்வு. 

Comments

 1. சரியான ஆதங்கம். திருக்குறள் என்றால் டிடி சகோ ஞாபகம் வருவதுபோல் புத்தர் என்றால் உங்கள் ஞாபகம்தான் வருகிறது ஜம்பு சார்

  ReplyDelete
 2. இது போல் செய்யும் மனிதர்கள் பலர் உள்ளனர்... கவனமாகவே இருக்க வேண்டும்... ஆனால் இவை தங்களுக்கு, எத்தனை விதமான வேதனையை தந்திருக்கும் என்பது புரிகிறது ஐயா...

  ReplyDelete
 3. பிறர் உழைப்பைத் திருடும் மனிதர்களை என்ன சொல்ல...
  அப்படியே விட்டு விடாமல் நேரில் சென்று விசாரித்து எச்சரித்து வந்தீர்களே... சிறப்பு.

  ReplyDelete
 4. இதுகூட அறிவுத்திருட்டுதான். இப்படி மனிதர்கள் சகல துறைகளிலும் உண்டு.

  ReplyDelete
 5. Plagiarism is a crime.But so called scholars deliberately do it.

  ReplyDelete
 6. சுவையான அனுபவ தொகுப்பு அய்யா

  ReplyDelete
 7. மோசமான திருட்டு, வெட்கமே இல்லை. நல்லவேளையாக உடனடியாக அவருடைய சுபாவத்தைக் கண்டு கொண்டு விட்டீர்கள்.

  ReplyDelete
 8. இப்படியும் சில மனிதர்கள்....

  நல்லவேளையாக முதலிலேயே உணர்ந்து கொண்டீர்கள்.

  தொடரட்டும் அனுபவப் பகிர்வுகள்.

  ReplyDelete
 9. நல்ல அனுபவம் .......

  ReplyDelete

Post a Comment