களப்பணியில் சமணம் : அகிம்சை நடை
அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் களப்பணியில் சமணம் என்ற தலைப்பில் ஆற்றிய பொழிவின் சுருக்கம். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைக் கொண்ட சோழ நாட்டில் பௌத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது சுமார் 70 இடங்களில் புத்தர் சிலைகளையும், சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணமுடிந்தது. பள்ளிக்காலம் முதல் சொந்த ஊரான கும்பகோணத்தில் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களைப் பார்த்துவரும்போது வித்தியாசமாக அங்கே காணப்பட்ட ஜீனாலயம், பல இடங்களில் புத்தரை சமணர் என்று அழைக்கப்படல் உள்ளிட்ட பல சூழல்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் (1998), திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூர் (1998), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி (1999), திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகில் (1999), தஞ்சாவூர் (1999), பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் (1999), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில் அடஞ்சூர் (2003), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் செர...