களப்பணி ஆய்வுகள்

களப்பணி அடிப்படையில் ஆய்வுகள், ஆய்வுகள் அடிப்படையில் களப்பணி ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். களப்பணி தொடர்பான பொது அனுபவங்களும், ஆய்வாளராக களப்பணியில் ஈடுபட்ட தனிப்பட்ட அனுபவங்களும் வெவ்வேறு வகையில் அமையும். அதற்கான பின்புலத்தைக் காண்போம். கும்பகோணத்தில் எங்கள் தாத்தா ரத்தினசாமி 1960கள் தொடங்கி நவசக்தி, நாத்திகம் ஆகிய இதழ்களின் வாசகராக இருந்தார். அவருடைய பழக்கத்தில், கல்லூரிக்காலத்தில் (1975-79) தி இந்து ஆங்கில நாளிதழை வாங்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பானது செய்திகளுக்கு அப்பாற்பட்டு புதிய வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, எழுத்துரு, இதழின் வடிவம், செய்திகள் தரப்படும் பாணி, எழுத்து அமைப்பு, புள்ளியும் காற்புள்ளியும் இடுதல், மேற்கோள் ஆகியவற்றில் காணப்படும் உத்திகளின்மீதான ஆர்வத்தை மிகுவித்தது. அதே காலகட்டத்தில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலத்தட்டச்சு, தமிழ்த்தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியவற்றைக் கற்றேன். ஆரம்பித்தேன். எந்த இடத்தில் ஒரு புதிய சொல்லைக் கண்டாலும், கேட்டாலும் அது பயன்படுத்தப்பட்ட முறையையும், பொருளையும் அறிய ஆரம்பித்தேன். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக, தினமும் படிக்கும் ஆங்கில, தம...