களப்பணி ஆய்வுகள்


களப்பணி அடிப்படையில் ஆய்வுகள், ஆய்வுகள் அடிப்படையில் களப்பணி ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். களப்பணி தொடர்பான பொது அனுபவங்களும், ஆய்வாளராக களப்பணியில் ஈடுபட்ட தனிப்பட்ட அனுபவங்களும் வெவ்வேறு வகையில் அமையும். அதற்கான பின்புலத்தைக் காண்போம்.

கும்பகோணத்தில் எங்கள் தாத்தா ரத்தினசாமி 1960கள் தொடங்கி நவசக்தி, நாத்திகம் ஆகிய இதழ்களின் வாசகராக இருந்தார். அவருடைய பழக்கத்தில், கல்லூரிக்காலத்தில் (1975-79) தி இந்து ஆங்கில நாளிதழை வாங்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பானது செய்திகளுக்கு அப்பாற்பட்டு புதிய வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, எழுத்துரு, இதழின் வடிவம், செய்திகள் தரப்படும் பாணி, எழுத்து அமைப்பு, புள்ளியும் காற்புள்ளியும் இடுதல், மேற்கோள் ஆகியவற்றில் காணப்படும் உத்திகளின்மீதான ஆர்வத்தை மிகுவித்தது. அதே காலகட்டத்தில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலத்தட்டச்சு, தமிழ்த்தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியவற்றைக் கற்றேன். ஆரம்பித்தேன். எந்த இடத்தில் ஒரு புதிய சொல்லைக் கண்டாலும், கேட்டாலும் அது பயன்படுத்தப்பட்ட முறையையும், பொருளையும் அறிய ஆரம்பித்தேன். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக, தினமும் படிக்கும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களுடன், அயலக நாளிதழ்களான தி கார்டியன், தி நியூ யார்க் டைம்ஸ், டான் உள்ளிட்ட பல இதழ்களை படிக்க ஆரம்பித்தேன். அவற்றில் வந்த முக்கியமான செய்திகளை மொழிபெயர்த்து என்னுடைய வலைப்பூவிலும், தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ்களிலும் கட்டுரையாக எழுதிவருகிறேன். இத்தேடல் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவில் சுமார் 1300 கட்டுரைகளை எழுதத் துணையாக அமைந்தது.

கல்லூரிப்படிப்பு முடிந்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 1982இல் பணியில் சேர்ந்தேன். பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, Unpublished M.Phil., Dissertation, Madurai Kamaraj University, Madurai 1995), முனைவர் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வுகளை மேற்கொண்டேன். முனைவர் பட்டத்தால் பெறும் பெருமையைவிட அந்த முனைவர் பட்டத்திற்குப் பெருமையைச் சேர்க்கவேண்டும் என்ற உறுதியான ஒரு முடிவினை எடுத்தேன்.

தத்துவம் அல்லது இலக்கியம் என்ற பின்னணியில் முந்தைய அறிஞர்கள் எழுதிய நூல்களின் அடிப்படையில், ஆய்வை மேற்கொள்ள எண்ணியபோது முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் களப்பணி மூலமாக பல புதிய செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்கமுடியும் என்று கூறினார். அலுவலகப்பணியினை தொய்வின்றி மேற்கொள்ளல், ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாள்களிலும் மட்டுமே செல்லல், திடீரென விடுப்பு எடுத்தல், பயணச்செலவினம், குடும்பச்சூழல் உள்ளிட்ட பல சிக்கல்களையும் சமாளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு முன் இத்துறையில் ஆய்வு செய்த அறிஞர்களைத் தொடர்ந்து, பல புதியனவற்றை வெளிக்கொணர முடியும் என்ற உறுதி என்னுள் தோன்றவே களப்பணியை மையமாக வைத்து ஆய்வினை மேற்கொண்டேன்.

ஆய்விற்காகப் பதிவு செய்தபோது நான் பிறந்த கும்பகோணத்தில் பௌத்த சமயத்தின் இறுதிச் சுவட்டைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டு கி.பி.1580 வரை அப்பகுதியில் ஒரு பௌத்தக் கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இவ்வாறு தொடங்கிய களப்பணி அனுபவங்கள் வித்தியாசமானவையாகும்.

முதலில் இது தொடர்பாக வெளியான கட்டுரைகளையும், நூல்களையும் தேடும் முயற்சியில் இறங்கினேன். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் (பௌத்தமும் தமிழும், 1940) நூலை அடிப்படையாக வைத்து புத்தர் சிலை இருந்த இடங்களைப் பட்டியலிட்டேன். நாளிதழ்கள் வாசிப்புப் பழக்கமானது ஆய்வு தொடர்பான செய்திகளைச் சேகரிக்க உதவியது.

களப்பணியின்போது வழக்கமாக இரு கேமராக்கள் (அப்போது பிலிம் போடும் முறை), தொப்பி, நொறுக்குத்தீனி, குடிதண்ணீர், சாக்பீஸ், இஞ்ச் டேப், குறிப்பு நோட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது வழக்கம். சோழ நாட்டில் புத்தர் சிலைகள் காணப்படும் இடங்கள் பட்டியலிட்டு, பயணித்தேன். நான் ஆய்வில் அடியெடுத்துவைத்த காலத்தில் கூகுள் வரைபடம், புலனம், கைபேசி போன்ற வசதிகள் இல்லை. பின்னர்தான் இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு அமைந்தது. புத்தர் சிலைகளைப் பார்க்க சில ஊர்களில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதை மறக்கமுடியாது. களப்பணியின்போது பெறப்பட்ட சில அனுபவங்கள் மறக்கமுடியாதவையாக உள்ளன. ஒவ்வொரு களப்பணியும் ஒவ்வொரு பாடமாக அமைந்தது. அவ்வாறான அனுபவங்களில் சிலவற்றை இங்கு காண்போம்.

ஒரு முறை ஆட்களே இல்லாத காட்டுப்பகுதி போன்ற இடத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே சில மரங்கள். ஒருவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. சரியான உச்சி வேளை. 1970களில் எங்கள் ஆத்தா, “உச்சுறும் நேரத்திலே கொல்லப்பக்கம் போகாதீங்க” என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சற்றே நடுக்கம். ஒருவர் வருவது போல இருந்தது. அருகில் வந்ததும் அவர், “உங்களுக்கு பூ வாசம் தெரிகிறதா?” என்றார். “இல்லை” என்றதும், “உங்களை உரசிக்கொண்டு ரயில் போவது போல இருந்ததா?” என்றார். எனக்கு பயம் அதிகமாகவே அனைத்து தெய்வங்களின் பெயர்களையும் உச்சரித்துக்கொண்டே நடந்தேன். மறுபடியும் தொடர்ந்து வந்த அவர், “உங்களுக்கு ஏதாவது ஆனால் அதோ அருகில் என் வீடு உள்ளது. வாருங்கள்” என்றார். “பேய், பிசாசு அடிப்பதைப் போலக் கூறுகின்றீர்களே? சுய நினைவில் இருந்தால்தானே வரமுடியும்?” என்று நான் சொன்னதற்கு அவர் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார். அப்பகுதியைக் கடந்து வெளியே வரும் வரை என் உயிர் என்னிடத்தில் இல்லை. அப்பகுதியில் புத்தர் சிலையைக் காணச் சென்று சமண தீர்த்தங்கரர் சிலையினைக் கண்டேன்.

பட்டீஸ்வரம் கிராமத்தேவதை கோயிலில் புத்தர் சிலையைத் துர்க்கையம்மன் கோயிலிலும், தேனுபுரீஸ்வரர் கோயிலிலும் தேடினேன். பள்ளிக்காலம் முதலே அந்தப்பகுதிக்கு என்னுடன் வரும் நண்பர்களை அழைத்துச் சென்றேன். இறுதியில் அங்கேயுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பார்த்தேன்.

மயிலை சீனி. வேங்கடசாமி புத்தர் இல்லாத ஒரு சிலையைப் புத்தர் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனை ஆய்வியல் நிறைஞர் பதிவேட்டில் பதிந்தேன். அடுத்தடுத்து சென்றபோது அந்த சிலை புத்தர் சிலை இல்லை என்பதையும், பகவர் எனப்படும் ஒரு ரிஷி என்பதையும் அறிந்து அவ்வாறே முனைவர் பட்ட ஆய்வேட்டில் பதிந்தேன்.

கி.பி.1580இல் எலந்துறை எனப்படும் திருவிளந்துறையில் பௌத்தக்கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டினைப் பற்றி மயிலை சீனி.வேங்கடசாமி கூறியிருந்தார். அதன் செராக்ஸ் படியினை வரலாற்றறிஞர் திரு என். சேதுராமன் தந்ததோடு, கோயிலில் அக்கல்வெட்டு இருக்கின்ற இடத்தினைத் தெரிவித்து உதவினார். ஆனால் அங்கு புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றையோ புத்தர் சிலையையோ தற்போது காணமுடியவில்லை.

முதன்முதலில், மீசையோடு கண்ட புத்தரைப் பற்றிய செய்தி ஜூன் 1999இல் நாளிதழ்களில் வெளிவந்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தொடர்ந்து நானும், பிற ஆய்வாளர்களும் கண்டுபிடித்த புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்தன. 2002இல் அயலக ஆய்வாளர் புகோரி யுகோ ஆய்வு தொடர்பாக என்னை சந்தித்தார். ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு ஆங்கிலத்திலும் முனைவர் பட்ட ஆய்வேடு தமிழிலும் இருந்தது. என் ஆய்வினை மேற்கோளாகக் காட்டியிருந்தார். முனைவர் பட்ட ஆய்வேடு ஆங்கிலத்தில் இருந்தால் தன்னைப் போன்ற ஆய்வாளருக்கு உதவியாக இருக்கும் என்று அவரும், பிற நண்பர்களும் கூறிய கருத்தின்படி புதுதில்லி நேரு டிரஸ்ட் உதவியுடன் ஆங்கிலத்தில் எழுதினேன்.

வரலாற்றறிஞர் பேராசிரியர் பீட்டர் ஷாக் அவர்களுடன் ஆய்வு தொடர்பாக கடிதத் தொடர்பு வைத்திருந்தேன்.  பிற ஆசிரியர்களுடன் இணைந்து அவர் எழுதிய நூலில் மீசை புத்தர் பற்றிய செய்தி மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்தது.

2002இல் திரு ரவிக்குமாரும், திரு ஆனந்தும் என்னைக் காணவந்து, சோழ நாட்டுப் பௌத்தத் தடயங்களைக் காண விரும்பியபோது அவர்களை நான் அங்கு அழைத்துச்சென்றேன். அவர்கள் என் ஆய்வினை மேற்கோளாகக் காண்பித்திருந்தனர். இவ்வாறாக பல அறிஞர்களுடனும், ஆய்வாளர்களுடனுமான களப்பணி தொடர்கிறது.

தொடர்ந்து நாளிதழ்களில் வெளியான ஆய்வு தொடர்பான என்னுடைய பேட்டிகளும், மேற்கோள்களும் எனக்கு ஊக்கத்தைத் தந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் பிற அறிஞர்களுடைய நூல்களை ஆதாரமாகக் கொண்டு களப்பணியைத் தொடரும் நிலையில் என்னுடைய ஆய்வுகள், தேடல்கள் மேற்கோளாக பிற அறிஞர்களின் நூல்களில் இடம்பெறுவதை என் களப்பணிக்கும், ஆய்விற்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். என் அனுபவங்களை ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற வலைப்பூவில் 10 ஆண்டுகளாக எழுதிவருகிறேன். ஓர் ஆய்வாளர் ஈடுபாட்டுடன் மேற்கொள்கின்ற களப்பணியானது பல புதிய சான்றுகள் அமையக் காரணமாக அமைவதோடு, வரலாற்று நூல்களில் ஆவணமாக அவை அமையவும் துணை நிற்கும். அடுத்த தலைமுறையினர் அதனை முன்னெடுத்து பல கோணங்களில் புதிய நோக்கில் ஆய்வினைத் தொடரவும் அது துணை நிற்கும். இவற்றை என் களப்பணிக்கும், ஆய்விற்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.     

                      

-------------------------------------------------------------------------------------------
நன்றி: மணற்கேணி
(8 ஜூன் 2020, களப்பணி ஆய்வுகள் பொழிவின் எழுத்து வடிவம்)
-------------------------------------------------------------------------------------------


8 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. வாழ்த்துகள் ஐயா...

    உரையாடல் காணொளியை இணைக்கலாமே ஐயா...

    ReplyDelete
  2. முனைவர் அவர்களின் மகத்தான பணி இன்னும் தொடரட்டும் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. அருமை ஐயா, புத்தர் சிலை ஆய்வு, விக்கி பீடியா இரண்டிலும் தங்களுக்கு மகத்தான இடம் உண்டு. தமிழர்கள் உங்களுக்குக் கடமைப் பட்டவர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஐயா! உங்களின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது! அதனை விட அதிகமாய் உங்கள் எழுத்தும்!

    ReplyDelete

Post a Comment