பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர்
10 பிப்ரவரி 1997 சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச் சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும் பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் சென்றேன். அப்போது திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன். டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர் புத்தரும் ஒன்று. பாண்டிச்சேரி பிரெஞ்ச...