பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து
தஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். திருக்கோயில்பத்து புத்தர் சிலை புகைப்பட உதவி : முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும். 14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வள...