பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து

தஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ள செய்தியை (தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 6 மார்ச் 2015) நாளிதழில் கண்டேன். 


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 


1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும்.

14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வளையமாபுரம், அய்யம்பேட்டை அருகே மணலூர் ஆகிய இடங்களில் காணப்பட்டன. களப்பணியின்போது தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும் உண்டு.

இதுவரை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையும் உள்ளது. மேலாடை, இடுப்பில் ஆடை, காலில் ஆடை, தியான நிலையில் கைகள், அகன்ற மார்பு ஆகிய அனைத்து கூறுகளும் இச்சிலையில் காணப்படுகின்றன.

சுமார் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் கேட்பாரின்றி உள்ள சிலைகளைக் காணமுடிந்தது. சமயக்காழ்ப்புணர்வு, வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும் நிலை, தொல்பொருள்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற மனப்பாங்கு காணப்படாமை போன்ற நிலைகளே இவ்வாறாக சிலைகள் காணப்படுவதற்குக் காரணங்களாகின்றன. இச்சிலையைத்தேடி திருக்கோயில்பத்து செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

31 டிசம்பர் 2021
அந்தப் புத்தரைக் காண நண்பர் கரந்தை ஜெயக்குமாரும் நானும் பயணித்தோம். தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம், அம்மாப்பேட்டை வழியாகச் சென்றோம். அம்மாப்பேட்டையின் வலது புறத்தில் செல்லும் சாலை இரு பிரிவாகப் பிரிகிறது. வலது புறச்சாலை திருக்கோயில்பத்தினை நோக்கியும், இடது புறச்சாலை அருந்தவபுரத்தை நோக்கியும் செல்கின்றன. அம்மாப்பேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கோயில்பத்து என்றழைக்கப்படுகின்ற திருக்கோயில்பத்து என்னும் இடத்திற்குச் சென்றோம். 
 















அங்குள்ள வஜ்ரபுரீஸ்வரர் கோயில் எனப்படுகின்ற சிவன் கோயிலின் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயிலின் வலது திருச்சுற்றில் தலையில்லாத புத்தர் சிலை இருந்தது. (சிலை சிகப்பு வண்ண வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது) 69 செ.மீ. உயரமுள்ள இச்சிலை பிரபை, பரந்த மார்பு, திண்ணிய தோள்கள், கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், மடியில் இடது உள்ளங்கையின்மீது வானோக்கிய நிலையில் வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, மார்பிலும் இடுப்பிலும் ஆடை ஆகிய சிற்பக்கூறுகளுடன் இருந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்கள் புத்தர் சிலைகள் உள்ள/இருந்த இடங்களாகும்.

சமயக் காழ்ப்புணர்வும், கலை ரசனையில்லா நிலையும் ஓர் அழகான சிலை சிதைந்திருப்பதற்குக் காரணங்களாக இருந்தன. வேதனையாக இருந்தது. காரணமாக தலையில்லாத புத்தரைப் பார்த்துவிட்டு சற்றே கனத்த மனத்துடன் அங்கிருந்து திரும்பினோம், தஞ்சாவூரை நோக்கி. 

2023
இந்தப் புத்தர் சிலை என்னுடைய நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022, ப.43), (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023, p.56) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்,
-------------------------------------------------------------------------------------------
24.12.2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தலையில்லாத புத்தர் சிலையைப் படத்தில் பார்க்கும் போதே, அந்நாளைய மதவெறியின் உச்சத்தை, வரலாற்றின் பக்கத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  2. காரைக்குடியிலிருந்து திருச்சி வரும் போது வழியில் தீர்த்தங்கரர் சிலைகள் என்று எழுதி இருந்தது பார்த்தபோது உங்கள் நினைவு தான் வந்தது. எத்தனை எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம்......

    ReplyDelete
  3. அயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்

    ReplyDelete
  4. அயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்

    ReplyDelete
  5. பௌத்தம் மீண்டும் மலர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தலை இல்லாத அந்தச் சிலை புத்தருடையதுதான் என்பதை நிலைநாட்டும் வகையில் ஏதாவது நிரூபணம் உள்ளதா?மேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. ?உங்கள் அயராப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  7. வணக்கம் முனைவரே அரிய விடயங்கள் தங்களின் தேடுதல் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  8. திருக்கோயில் பத்து செல்லும் நாள் விரைவில் அமையட்டும்
    நன்றிஐயா

    ReplyDelete
  9. அரிய பதிவு!
    த ம 5

    ReplyDelete
  10. அந்நாளில் எவ்வளவு மத வெறியோடு இருந்து இருக்கிறார்கள். அழிந்தவை எத்தனை எத்தனையோ...தங்களைப் போன்றோர்களால் தான் நாங்கள் இந்தளவாவது தெரிந்து கொள்கிறோம். நன்றி. தம 6

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு ஐயா, தங்கள் களப்பணி தொடரட்டும்..

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு, தங்கள் களப்பணி தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment