அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) : பட்டுக்கோட்டை குமாரவேல்
நான் படித்த நூல்களில் ஒன்று அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் . 104 காட்சிகளைக் கொண்ட வரலாற்று நாடகமாக உள்ள இந்நூலில் புத்தரது வரலாற்றை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல். நாடகப்பாத்திரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளவிதம், ஒவ்வொரு காட்சியையும் அமைத்துள்ள முறை, நிகழ்வுகளை மனதில் பதியும்வகையில் தந்துள்ள பாங்கு போன்றவை மிகவும் சிறப்பாக இந்நூலில் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த இந்நூலை அண்மையில் மறுபடியும் படித்தேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவ்வரலாற்று நிகழ்வை நாடமாக்கித் தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி, அந்நூலை வாசிப்போம், வாருங்கள். காட்சி 7 (இடம் : அரண்மனை / மன்னர், அரசி, அந்தணர்கள்) சுத்தோதனர் : ஜோதிட வல்லுநர்களே...இளவரசனின் ஜாதகம் பார்த்து பலனைச் சொல்லி இந்த நாட்டு இளவரசருக்கு நீங்கள் பெயரிடவேண்டும். அந்தணர்1 : இளவரசனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிடுங்கள். அந்தணர்2 : குழந்தையின்னி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். அந்தணர்3 : குழந்தை இளவரசானதும் அவர் நாட்டம் அரசியலில் இருந்தால் பெரிய சக்கரவர்த்தியாக வாழ்வார். அந்தணர்4 : ...