பௌத்த சுவட்டைத் தேடி : குழுமூர், பெரம்பலூர் மாவட்டம்
ஜனவரி 2005 எனது ஆய்வினைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து அறிமுகமானவர்களில் ஒருவர் திரு அரும்பாவூர் திரு செல்வபாண்டியன். தொலைபேசியில் தன்னை அறிமுகப்படுத்தி பேசியபோது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய பட்டியலில் நான் பார்க்காதது செந்துறை வட்டத்தில் குழுமூர் என்னுமிடத்தில் உள்ள புத்தர் சிலை. எழுத்தாளர் பழமலய் அவர்கள் எழுதியுள்ள (இது எங்க சாமி, ஆனந்தவிகடன், 31.10.2004) கட்டுரையில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளதாகத் தெரிவித்து, அதன் நறுக்கினை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். ஜுன் 2006 அந்த புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைக்க ஒரு வருடத்திற்கு மேலானது. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மருதையான்கோயில் என்ற பேருந்து நிறுத்தத்திற்கு வரக்கூறினார். அதன்படி தஞ்சாவூரிலிருந்து அரியலூர் சென்றுவிட்டு (அரியலூர்-செந்துறை-குழுமூர் பேருந்து வரத் தாமதமானதால்) அப்போது நின்றுகொண்டிருந்த திட்டக்குடி/பெரம்பலூர் பேருந்தில் சென்று மருதையான் கோயில் நிறுத்தத்தில் இறங்கினேன். அங்கிருந்து தொடர்புகொண்டபோது அவர் பைக்கில் வந்தார். அவருடன் துங்கபுரம் வழியாக குழுமூர் சென்றேன்...