பௌத்த சுவட்டைத் தேடி : குழுமூர்

ஜனவரி 2005
எனது ஆய்வினைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து அறிமுகமானவர்களில் ஒருவர் திரு அரும்பாவூர் செல்வபாண்டியன். தொலைபேசியில் தன்னை அறிமுகப்படுத்தி பேசியபோது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய பட்டியலில் நான் பார்க்காதது செந்துறை வட்டத்தில் குழுமூர் என்னுமிடத்தில் உள்ள புத்தர் சிலை. எழுத்தாளர் பழமலய் அவர்கள் எழுதியுள்ள (இது எங்க சாமி, ஆனந்தவிகடன், 31.10.2004) கட்டுரையில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளதாகத் தெரிவித்து, அதன் நறுக்கினை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.

ஜூன் 2006
அந்த புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைக்க ஒரு வருடத்திற்கு மேலானது. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மருதையான்கோயில் என்ற பேருந்து நிறுத்தத்திற்கு வரக்கூறினார். அதன்படி தஞ்சாவூரிலிருந்து அரியலூர் சென்றுவிட்டு (அரியலூர்-செந்துறை-குழுமூர் பேருந்து வரத் தாமதமானதால்) அப்போது நின்றுகொண்டிருந்த திட்டக்குடி/பெரம்பலூர் பேருந்தில் சென்று மருதையான் கோயில் நிறுத்தத்தில் இறங்கினேன். அங்கிருந்து தொடர்புகொண்டபோது அவர் பைக்கில் வந்தார். அவருடன் துங்கபுரம் வழியாக குழுமூர் சென்றேன்.

புத்தர் சிலை இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். சிலை இருந்த இடம் குப்பை மேடாக கழிவுகளுடன் காணப்பட்டது. சிலையை முற்றிலும் பார்க்கமுடியாதபடி ஒரு மரம் முறிந்து அதன்மேல் கிடந்தது.  நாங்கள் இருவரும் இடத்தைச் சுத்தம் செய்ய ஆயத்தமானபோது அருகிலுள்ளோர் வந்துவிட்டனர். அவர்கள் கிளைகளை வெட்டி, இடத்தைச் சுத்தம் செய்து எங்களுக்கு உதவி செய்தனர். இப்போதுதான் புத்தரை முழுமையாகக் காணமுடிந்தது. சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிலைகளில் காணப்படும் கூறுகள் அச்சிலையில் இருந்தன. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிலை அழகாக இருந்தது.

 உள்ளூரில் அந்த புத்தரைப் பற்றிச் சிறப்பாகப் பேசினர். "கெட்ட ஆவிகள் நெருங்காது. புத்த உள்ள இந்த ஊரில் இரவில் குழந்தைகளைத் தூழியில் போடலாம். நிம்மதியாகத் தூங்கும். புத்தர் நல்லதுதான் செய்வார். புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர். 32 சந்தி உள்ளது" என்றனர். திரு நடராஜன்பிள்ளை (வயது 88) "என் பெற்றோர் காலத்திலிருந்து இந்த சிலை உள்ளது. விளக்கு வைத்து பூசை செய்ததாகக் கூறுவர். பிறகு பூசை இல்லை" என்று ஆதங்கத்தோடு கூறினார். சிலையைப் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம், அவருடைய பைக்கிலேயே பெரம்பலூர் நோக்கி. அங்கு நாங்கள் எடுத்த புகைப்படத்தை டெவலப் செய்துவிட்டு இரவு அங்கிருந்து பேருந்தில் தஞ்சாவூர் வந்துசேர்ந்தேன். சில நாள்கள் கழித்து பத்திரிக்கைச் செய்தி கொடுத்து அச்செய்தி பெரும்பாலான பத்திரிக்கைகளில் வெளியானது.

ஜனவரி 2011
27.1.2011 அன்று தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு ஆய்வரங்கத் தொடக்கவுரைக்காக வந்திருந்த திரு பழமலய் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தேன். அப்போது அவர் குழுமூர் புத்தரின் தலை திருட்டுப் போனதாகக் கூறி வருத்தப்பட்டார்.  குழுமூர் புத்தரைப் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வந்தபோது என்னைப் பாராட்டி தொலைபேசியில் பேசியவர்களில் இவரும் ஒருவர். செய்தியைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஜூன் 2012
நாளிதழில் வெளியான கட்டுரையில் (Buddha at the crossroadsThe Hindu, 10.6.2012) குழுமூர் புத்தர் தலை இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  வரலாற்றுத் தடயங்களை எந்த அளவு இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதை நினைத்தபோது வேதனையாக இருந்தது.







-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு ம.செல்வபாண்டியன், திரு முருகானந்தம், திரு சம்பந்தம், நாளிதழ்கள், தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர்
-------------------------------------------------------------------------------------------

15 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் சீரிய பணி

    ReplyDelete
  2. தங்களது தமிழ்ப்பல்கலைக்கழகப் பணி 33ஆம் ஆண்டு தொடங்குவதற்கு எனது வாழ்த்துக்கள்! மேலும் “தி இந்து” ஆங்கில நாளிதழ், தங்கள் வாழ்வோடு ஒன்றிப்போனதினை நினைவு கூர்ந்தமை கல்வியில் தங்கள் நன்றியறிதலை குறிப்பாக தெரிவிக்கிறது.

    தங்களின் குழுமூர் (பெரம்பலூர்) பவுத்த ஆராய்ச்சி களப்பணி பாராட்டுதலுக்கு உரியது..முழுமையான புத்தர் சிலை உரிய மரியாதைகள் இன்றி ஒரு வைக்கோல் போர் இருக்கும் இடத்தில் இருப்பது நெருடலான விஷயம்தான்.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    25 ஆண்டுகள் நிறைவு பெற்றமைக்குவாழ்த்துக்கள். ...
    வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு பயன் பெறும் வகையில் தங்களின் ஆய்வுப்பணிஉள்ளது மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Very impressive documentation!congrats! Real research by a natural researcher.

    ReplyDelete
  5. இப்போது அந்தச்சிலை என்னாயிற்று? அருங்காட்சியகத்தாவது வைக்கப் பட்டிருக்கிறதா?

    ReplyDelete
  6. உங்கள் நல்ல முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  7. விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
    வாருங்கள்
    http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா
    இத்தனை நாளாக இந்த பதிவை பார்க்காதது வருத்தப்படுகின்றேன்...என் சொந்த ஊரான அரியலூருக்கு அருகில் உல்ள குழுமூரை பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி...நன்றி

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா
    இந்த பதிவு வலைச்சரத்தில் இன்று.....நன்றி..

    ReplyDelete

Post a Comment