பௌத்த சுவட்டைத் தேடி : பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில்
என் ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்னை அதிகம் ஈர்த்த இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம் பகுதி. ஏனெனில் அப்பகுதியில் அதிகமான புத்தர் சிற்பங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அருகருகே இரு புத்தர் சிற்பங்களை முந்தைய களப்பணியில் பார்த்தோம். மறுபடியும் தற்போது பட்டீஸ்வரம் போவோம் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள புத்தரைப் பார்க்க. அக்டோபர் 1993 தஞ்சையில் பெளத்தம் என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய காலகட்டம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்த நிலையில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் (1940) நூல் எனக்கு முதன்முதலாகத் துணைக்கு வந்தது. அவர் அந்நூலில் புத்தர் சிற்பங்கள் உள்ளதாகக் கூறிச் சில இடங்களைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் தற்போது புத்தர் சிற்பங்கள் இருக்கிறனவா என்பதை உறுதி செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வாறாக அவர் சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் இர...