பௌத்த சுவட்டைத் தேடி : பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில்

என் ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்னை அதிகம் ஈர்த்த இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம் பகுதி. ஏனெனில் அப்பகுதியில் அதிகமான புத்தர் சிற்பங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அருகருகே இரு புத்தர் சிற்பங்களை முந்தைய களப்பணியில் பார்த்தோம். மறுபடியும் தற்போது பட்டீஸ்வரம் போவோம் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள புத்தரைப் பார்க்க.

 அக்டோபர் 1993
    தஞ்சையில் பெளத்தம் என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய காலகட்டம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்த நிலையில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் (1940) நூல் எனக்கு முதன்முதலாகத் துணைக்கு வந்தது. அவர் அந்நூலில் புத்தர் சிற்பங்கள் உள்ளதாகக் கூறிச் சில இடங்களைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் தற்போது புத்தர் சிற்பங்கள் இருக்கிறனவா என்பதை உறுதி செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வாறாக அவர் சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம்.
        மயிலை சீனி வேங்கடசாமி அவரது நூலில் கல்வெட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி தஞ்சை ஜில்லாவில் உள்ள பட்டீஸ்வரம் கிராமத் தேவதைக் கோயிலில் புத்தர் உருவச் சிலையொன்று இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பட்டீஸ்வரத்தில் உள்ள கிராம தேவதைக் கோயில் என்றதும் என் நினைவுக்கு வந்தது அங்குள்ள பட்டீஸ்வரம் துர்க்காம்பிகை கோயிலாகும். பள்ளிப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை நாள்களில் கும்பகோணத்திலிருந்து நண்பர்கள் குழாமாகச் சேர்ந்து சென்ற இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம். புகழ்பெற்ற பழையாறை அரண்மனை இங்குதானே இருந்திருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் வரும் வந்தியத்தேவன் இவ்வழியில் தானே குதிரையில் போயிருப்பான் என்று பேசிக்கொண்டே பலமுறை பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள பல இடங்களுக்கு மிதிவண்டியிலும் நடந்தும் சென்றிருக்கிறோம். அவ்வாறு பேசிக்கொண்டு சென்ற நண்பர்களில் தற்போது கும்பகோணத்தில் இருக்கும் நண்பர் சிற்பக் கலைஞர் இராஜசேகரனையும் தாராசுரத்திலுள்ள நண்பர் நாகராஜனையும் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

அக்டோபர் 1995
    முதலில் நண்பர்கள் உதவியுடன் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் சென்றேன். துர்க்கையம்மன் சன்னதியைச் சுற்றிச் சுற்றி வந்தேன். எங்கும் புத்தர் சிலை இல்லை. கோயில் அலுவலகம், அர்ச்சகர்களிடம் விசாரித்தேன். அவ்வாறான சிலை எதுவும் இல்லை என்று கூறினர்.  தேனுபுரீஸ்வரர் கோயிலை ஒட்டி துர்க்கையம்மன் சன்னதி இருந்தது. திடீரென்று ஒரு யோசனை. தேனுபுரீஸ்வரர் கோயிலில் புத்தர் சிலை இருக்கிறதா என நண்பர்களின் உதவியுடன் தேட ஆரம்பித்தேன். கொடி மர விநாயகரைச் சுற்றி வந்து, பிரகாரத்தில் உள்ள ஞானவாவி எனப்படும் கோயில் குளத்தைச் சுற்றிப் பார்த்தேன். அருகிலுள்ள  கணபதி சன்னதி அருகில் தேடினேன். எங்கும் இல்லை. தேனுபுரீஸ்வரர் கோயிலின் உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், பிரகாரம் என அனைத்துப் பகுதிகளிலும் தேடினேன். அர்ச்சகர்களிடம் விசாரித்தேன். பெரியவர் ஒருவர், "மயிலை சீனி வேங்கடசாமி, கிராமத்தேவதைக் கோயில் என கூறியுள்ளதாகச் சொன்னீர்களே, துர்க்கையம்மன் சன்னதியைப் பார்த்த நீங்கள் சிவன் கோயிலிலுள்ள ஞானாம்பிகை சன்னதியைப் போய்ப் பார்க்கலாமே?" என்று யோசனை கூறினார்.  ஞானாம்பிகை சன்னதி சென்றேன். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எங்கும் இல்லை. வெளியே வந்து மறுபடியும் தேனுபுரீஸ்வரர் கோயிலின் அனைத்துப் பிரகாரங்களிலும் தேடினேன். எங்கும் புத்தர் சிலை இல்லை. மற்றவர்களிடமும் விசாரித்தேன். அவ்வாறாக எந்த புத்தர் சிலையும் இல்லை என்று கூறினர். நம்பிக்கை தளரவில்லை. தொடர்ந்து தேடினேன். அக்டோபர் 1995இல் ஆய்வேட்டினை பல்கலைக்கழகத்தில் அளிக்க வேண்டிய நிலை. இடைப்பட்ட குறுகிய காலத்தில் பலமுறை தேடியும் கிடைக்காத சூழலில் எனது ஆய்வேட்டில், ''பட்டீஸ்வரத்தில் உள்ள கிராம தேவதைக் கோயிலில் புத்தர் சிலை உள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார், ஆனால் தற்போது புத்தர் சிலை அங்கு காணப்படவில்லை'' என்று பதிவுசெய்தேன்.

பின்னர் ஆய்வியல் நிறைஞர் தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பெளத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள ஆயத்தமானேன். பதிவுசெய்தவுடன் ஆய்வியல் நிறைஞர் ஆய்வில் விடுபட்டவற்றைத் தொடர ஆரம்பித்தேன். முன்னர் விடுபட்ட பல இடங்களுக்குச் சென்று புத்தர் சிற்பங்களைத் தேட ஆரம்பித்தேன். மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்ட கோயில் எதுவாக இருக்கும் என்ற சிந்தனை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. எந்த வாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பட்டீஸ்வரம் பகுதியிலுள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று தேட ஆரம்பித்தேன். நண்பர்களிடமும் அறிஞர்களிடமும் இதுகுறித்துக் கேட்டேன். அவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பட்டீஸ்வரம் – ஆவூர் சாலையில் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலில் புத்தர் சிற்பம் உள்ளதாகக் கூறினார். முன்பு இதுபற்றி அவர் கூறியிருந்தபோதும் நான் சரியாகக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளாததால் அதுபற்றிய நினைவு சிற்பத்தைத் தேடும்போது எனக்கு இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து வந்த விடுமுறை நாளில் மறுபடியும் பட்டீஸ்வரம் செல்ல முடிவுசெய்தேன்.

அக்டோபர் 1998
     முந்தைய பயணத்தில் தேனுபுரீஸ்வரர் கோயிலையும், துர்க்கையம்மன் கோயிலையும் முழுமையாகப் பார்த்த நிலையில் அப்பகுதியில் உள்ள பிற சிறிய கோயில்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு விடுமுறையிலும் ஒவ்வொரு திசையில் செல்வதென்று முடிவெடுத்து அவ்வாறாக தொடர்ந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் சென்றேன். அவ்வாறான ஒரு பயணத்தின்போது பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் நடந்து சென்றேன். மூலை முடுக்கில் உள்ள கோயில்களைகூட விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் என் பயணங்களை அமைத்துக்கொண்டேன்.முதலில் திரெளபதி அம்மன் கோயிலைக் கண்டேன். அங்கு புத்தர் சிற்பம் இல்லை. பின்னர் அக்கோயிலை அடுத்துள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சென்றேன். எனது அலைச்சலுக்கு ஒரு முடிவு கிடைத்தது. கோயில் வளாகத்தில் வலப்பகுதியில் பிற தெய்வங்களுடன் புத்தர் சிற்பம் இருப்பதைக் கண்டேன். மிகவும் ஆவலோடு அந்த புத்தரைப் புகைப்படம் எடுக்க ஆயத்தமானேன். "யாருப்பா அது? போட்டோ எடுக்கிறது. இங்கெல்லாம்போட்டோ எடுக்கக்கூடாது" என்று சத்தம் போட்டுக்கொண்டே ஒருவர் வந்தார். எனது ஆய்வைப் பற்றி நான் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு கூட்டமே கூடிவிட்டது.  கோயிலுக்குத் தொடர்பானவர்களும் அருகிலிருந்தவர்களும் நான் புகைப்படம் எடுப்பதை ஏற்கவில்லை. என்னைப் பற்றியும் என் ஆய்வைப் பற்றியும் கூறியபோதும், உரிய கடிதங்களைக் காண்பித்தபோதும்கூட  அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி சிற்பத்தைப் பார்த்துவிட்டு அது புத்தர்தான் என்று உறுதியாகத் தெரிந்த பின் அங்கிருந்து கிளம்பினேன். புகைப்படம் எடுக்க ஏற்ற சூழலை எதிர்நோக்கி பல முறை அக்கோயிலுக்குச் சென்றேன். ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு முறையில் தடங்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல முறை அங்கு சென்ற நிலையில் பலர் அறிமுகமாயினர். பட்டீஸ்வரத்தைச் சார்ந்த, தமிழ்ப் பல்கலைக்கழக ஊர்தி ஓட்டுநர் திரு வீரமணி என் ஆய்வு முயற்சிக்கு உதவினார். அவர் அப்பகுதியில் பலரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து உள்ளூரைச் சேர்ந்த பலர் உதவ ஆரம்பித்தனர்.
      
பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் புத்தர் (1998) 
புகைப்படம் ஜம்புலிங்கம்

    உள்ளூர் மக்களின் நெருக்கம் என் ஆய்விற்கு பல நிலைகளில் உதவியது. பின்னர் அவர்களின் உதவியுடன் சிலையைப் புகைப்படம் எடுத்தேன். சுமார் இரண்டு அடி  உயரமுள்ள இந்த சிலை மேலாடை, இடுப்பில் ஆடை, சுருள் முடியுடன் கூடிய தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள், நெற்றியில் திலகக் குறி ஆகியவற்றுடன் மிகவும் அழகாக இருந்தது. பிற தெய்வங்களோடு இதையும் மக்கள் வழிபடுகிறார்கள். பலருக்கு இது புத்தர் என்றே தெரியவில்லை. ஒரு சிலரே ஒத்துக்கொண்டனர். விரட்டியடித்த மக்களே எனக்கு உதவியது நெகிழ்ச்சியை உண்டாக்கியது. முனைவர் பட்ட ஆய்வேட்டில் பட்டீஸ்வரம் - கோவிந்தகுடி சாலையில் திரெளபதி அம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் புத்தர் சிற்பம் உள்ளதை நேரில் பார்த்ததையும் மயிலை சீனி வேங்கடசாமி கூறியிருந்ததையும் பதிவுசெய்தேன்.

மார்ச் 2009
    முன்னர் பார்த்த சிற்பங்களை மறுபடியும் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன் முதன்முதலில் எனக்கு இப்பகுதியில் புத்தர் சிற்பத்தைத் தேட உதவிய நண்பர் இராஜசேகரனை அழைத்துக்கொண்டு மறுபடியும் முத்துமாரியம்மன் கோயில் சென்றேன். நான் பார்த்த இடத்தில் புத்தர் சிற்பம் இல்லை. நெடுநாள் கழித்து வந்து பார்க்க வந்த நான் அதிர்ச்சியடைந்தேன். வேதனையுடன் அதுபற்றி விசாரித்தபோது அந்தச்  சிற்பத்தைச் சிலர் திருட முயன்றதாகவும் பாதுகாப்பாக இருப்பதற்காக அதே கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்துள்ளதாகவும் கூறினர். உள்ளே சென்று பார்தேன். முத்துமாரியம்மன் சன்னதியில் வலப்புறம் புத்தர் அமைதியாக தியானக் கோலத்தில் இருந்தார்.

பிப்ரவரி 2012
   முத்துமாரியம்மன் கோயிலில் கருவறையில் இருந்த புத்தர் தற்போது அவ்விடத்தில் இல்லை என்று ஒரு நண்பர் எனக்குத் தொலைபேசிவழி தெரிவித்தார். 1993 முதல் தேட ஆரம்பித்து, பின் தேடி கண்டுபிடித்த புத்தர் அவ்விடத்தில் இல்லை என்றவுடன் உடனே அங்கு செல்ல திட்டமிட்டேன். தொலைபேசிச் செய்தி, எனது பதற்றம், சிலையைக் காணவேண்டுமென்ற எனது ஆவல்  ஆகியவற்றைக் கண்ட என் மூத்த மகன் பாரத் என்னுடன் வர விரும்புவதாகக் கூறி என்னுடன் சேர்ந்துகொண்டான்.  தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறி, தாராசுரத்தில் இறங்கினோம். அங்கிருந்து நகரப் பேருந்தில் பட்டீஸ்வரம் சென்றோம். முதலில் துர்க்கையம்மன் கோயிலுக்குச் சென்று பல ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் துர்க்கையம்மன் கோயிலில் புத்தரைத் தேடிய அனுபவத்தைக் கூறினேன். பின் துர்க்கையம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்தோம். கோயிலின் வெளியே இடப்புறமாக கோவிந்தக்குடி சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். களைப்பு தெரியாமலிருப்பதற்காக முந்தைய களப்பணிகளின்போது ஒரு சிறிய கோயிலைக்கூட விடாமல் புத்தரைத் தேடியதைப் பற்றிய அனுபவத்தை அவனிடம் கூறிக்கொண்டே வந்தேன். அவனுக்கும் அந்த புத்தரைப் பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது. ஒருவழியாக  முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தோம். எனது கண்கள் முன்னர் புத்தர் இருந்த இடத்தை நோக்கிச் சென்றன. சன்னதியில் வலப்புறம் கருவறையில் முன்பிருந்த இடத்தில் புத்தர் சிற்பம் இல்லை. கடந்த முறையை விட மேலும் அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து வெளியே வந்து மண்டபத்தில் அமர்ந்தேன். 
பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் புத்தர் (2012) 
புகைப்படம் ஜம்புலிங்கம்

மண்டபத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்த்தேன். கோயில் வளாக மண்டபத்தில் இடப்பகுதியில் புத்தர் இருந்தார் எதுவுமே நடக்காததுபோல்.  சிற்பத்தைப் பார்த்ததும் வியந்து ஆச்சர்யப்பட்டு பயணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டான் என் மகன். கர்ப்பகிருகத்தில் இருந்த புத்தரை இடம் மாற்றியதை அறியாத நண்பர் புத்தர் அங்கு இல்லை எனக் கூறியிருப்பார் எனப் புரிந்துகொண்டேன். புத்தரைப் பார்த்ததும் எனது படபடப்பும், சோர்வும் குறைந்தன. என்னுடன் வந்த என் மகனுக்கும். 

பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் புத்தருடன் (2013) 
புகைப்படம் கரந்தை ஜெயக்குமார்
டிசம்பர் 2013
திரு கரந்தை ஜெயக்குமாருடன் திருப்பாலைத்துறை, உடையாளூர், பழையாறை, முழையூர், பஞ்சவன்மாதேவீச்சரம் சென்றபோது முத்துமாரியம்மன் கோயிலிலுள்ள புத்தரின் நினைவு வரவே, அங்கு சென்று அருகில் அமர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன். 

14 பிப்ரவரி 2022
கும்பகோணம் நண்பர் சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரனுடன் மறுபடியும் கோயிலுக்குச் சென்றேன். அண்மையில் கோயில் குடமுழுக்கு ஆனதாகத் தெரிவித்தனர். முன் மண்டபத்தில் வலப்புறத்தில் புத்தரைக் கண்டேன். பல முறை இக்கோயிலுக்கு வந்தபோதிலும் இதுவரை கோயிலை புகைப்படம் எடுத்ததில்லை. அக்குறை நீங்க புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன், நண்பருடன்.
.
பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில் (2022)
புகைப்படம் பா.ஜம்புலிங்கம்


உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
முப்பதாண்டுகள் நிறைவு (16.8.1982-15.8.2012
முதல் நூலின் முகப்பு
மிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில்  மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறேன். தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்த என்னை ஆய்வாளனாகவும், எழுத்துக்களை நேசிப்பனாகவும் வடிவமைத்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தை என் நெஞ்சில் நிறுத்திப் போற்றுகின்றேன். எனது முதல் நூல் வாழ்வில் வெற்றி (பதிப்: பிட்டி விஜயகுமார், 269/833 திருவொற்றியூர்  நெடுஞ்சாலை, சென்னை 600 021) 2001இல் வெளியானது. ஜனவரி 2011இல் வலைப்பூவில் என் இளைய மகன் சிவகுரு உதவியுடன் இணைந்த நான்,  30ஆண்டுகள் நிறைவுறும் நினைவாக முகநூலில் அண்மையில் ன் மூத்த மகன் பாரத் உதவியுடன் இணைந்துள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.     

நன்றி: தமிழ் இன்று வலைப்பூவில் http://tamilindru.blogspot.com என்ற இணைப்பில் 31.7.2010இல் வெளியான பௌத்தச் சுவட்டைத்தேடி: அந்த புத்தர் எந்த புத்தர் என்ற தலைப்பிலான கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம். இதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.
 
களப்பணியின்போது உடன் வந்த கும்பகோணம் நண்பர் சிற்பக் கலைஞர் திரு இராஜசேகரன், தாராசுரம் நண்பர் திரு நாகராஜன், என் மகன் பாரத். திரு கரந்தை ஜெயக்குமார், களப்பணியின்போது உதவிய தமிழ்ப் பல்கலைக்கழக நண்பர் திரு வீரமணி ஆகியோருக்கு என் நன்றி.

In search of imprints of Buddhism: Pattisvaram Muthumariamman Temple
This article argues about the Buddha sculpture found in Muthumariamman Temple of Pattiswaram, in Thanjavur District. In this area many number of Buddhas were found. Mayilai Seeni Venkatasamy in his work Bouthamum Tamilum (1940) says about the prevalence of Buddha in a village deity temple in Pattisvaram. Thinking that it might be the Durga Temple of Pattivaram, I went there and searched for the Buddha in 1995, but in vain. After seeing many temples I spotted this Buddha in Muthumariamman temple  in 1998, alongwith other deities. During the field studies carried out in 2012, I saw the Buddha in the mandapa of the temple. The locals said that in order to ensure the safety they kept it inside the temple. Had the occasion to take photograph with the Buddha during my trip there with Mr Karanthai Jayakumar in December 2013.

27 பிப்ரவரி 2022இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 22 February 2022
 

Comments

  1. பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில் களப் பணி தங்களின், தளரா ஆர்வத்தினையும், அயரா முயற்சியினையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. தங்களின் பயண அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
    தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முப்பதாண்டுகள் பணி நிறைவு செய்துள்ளமை அறிந்து மகிழ்கின்றேன்.தங்களின் பல்கலைக் கழகப் பணியும், களப் பணியும் தொடர வாழ்த்துக்கிறேன்.

    ReplyDelete
  2. My best wishes for your effort to achieve the your goal as identifying Buddha statue in Thanjavur region
    Dr.P.Perumal

    ReplyDelete

Post a Comment