சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்

நாகப்பட்டின புத்தரின் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்துவது என் ஆய்வின் ஒரு பகுதியாக அமையும். அதற்கு அடிப்படையாக அமைந்தது டி.என். இராமச்சந்திரன் எழுதிய Nagapattinam and other Buddhist bronzes in Madras Museum ( Director of Museums, Chennai, I Edition 1954, Reprint 1992) நூலாகும். இக்கட்டுரைக்கான தேடல் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றியதாகும். நாகப்பட்டினம் என்றால் பௌத்த விகாரமும் அங்கிருந்த புத்தர் செப்புத்திருமேனிகளும் நினைவுக்கு வந்துவிடும். நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். முதலாம் இராஜராஜன் (கி.பி.985 முதல் 1014 வரை) அனுமதியுடன் ஸ்ரீவிஜயநாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன் ஒரு பௌத்த விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டினான். இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் நாகப்பட்டினம் அருகேயுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையாக வழங்கினான். முதலாம் இராஜராஜனுக்குப் பின் அவனது மகன் இராஜேந்திரன் அதனை உறுதி செய்தான். அந்த விகாரம் இராஜராஜப்பெரும்பள்ளி என அழைக்கப்பட...