சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்

நாகப்பட்டின புத்தரின் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்துவது என் ஆய்வின் ஒரு பகுதியாக அமையும். அதற்கு அடிப்படையாக அமைந்தது டி.என். இராமச்சந்திரன் எழுதிய Nagapattinam and other Buddhist bronzes in Madras Museum (Director of Museums, Chennai, I Edition 1954, Reprint 1992) நூலாகும். இக்கட்டுரைக்கான தேடல் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றியதாகும். நாகப்பட்டினம் என்றால் பௌத்த விகாரமும் அங்கிருந்த புத்தர் செப்புத்திருமேனிகளும் நினைவுக்கு வந்துவிடும்.  நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.  



முதலாம் இராஜராஜன் (கி.பி.985 முதல் 1014 வரை) அனுமதியுடன் ஸ்ரீவிஜயநாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன் ஒரு பௌத்த விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டினான். இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் நாகப்பட்டினம் அருகேயுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையாக வழங்கினான். முதலாம் இராஜராஜனுக்குப் பின் அவனது மகன் இராஜேந்திரன் அதனை உறுதி செய்தான். அந்த விகாரம் இராஜராஜப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டது.  இராஜேந்திரப்பள்ளி என்ற பெயரிலும் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரம் இருந்துள்ளது.

நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் இருந்த இடத்திலிருந்து 1856இல் சுமார் 350க்கும் மேற்பட்ட புத்தர் செப்புத் திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாகப்பட்டினத்தில் 1926இல்  வெளிப்பாளையத்திலிருந்தும், 1934இல் நாணயக்காரத்தெருவிலிருந்தும் புத்தர் செப்புத்திருமேனிகள்  கண்டுபிடிக்கப்பட்டன.     

இக்கட்டுரையாளரின் தேடலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய புத்தர் செப்புததிருமேனிகளின் புகைப்படங்கள் பெறப்பட்டன.  1999இல் மேற்கொண்ட களப்பணியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் செப்புத்திருமேனி திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியுடன் ஒருவர் வீட்டில் வழிபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புத்தரை அக்குடும்பத்தார் முனீஸ்வரன் என்று அழைக்கின்றனர்.
 
2004இல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் செல்லூர் என்னுமிடத்தில்  45 நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 7 செமீ முதல் 52 செமீ வரை உயரமுள்ள இச்சிற்பங்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை. இவற்றில் பல சிற்பங்கள் அதிக வேலைப்பாடுகளுடன் உள்ளன.  

செல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகள் முதன் முதலாக டிசம்பர் 2011இல் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. 1856 முதல் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளுடன் 2004இல் குடவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகளும் சேர்ந்து பௌத்த சமயப் பெருமையையும் பரவலையும் வெளிப்படுத்தும் சான்றுகளாக உள்ளன.  

நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் உள்ளன. இவை பெரும்பாலும் தலையில் முடி, அதற்கு மேல் தீச்சுடர் போன்ற வடிவில் முடி, நீண்டு தொங்கிய காதுகள், மேலாடை, கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவில் சென்னை, தஞ்சாவூர், கொல்கத்தா, பாட்னா, நாக்பூர், மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், பரோடா, ராஜ்கோட் ஆகிய இடங்களிலுள்ள  அருங்காட்சியகங்களிலும், வெளிநாடுகளில் பாகிஸ்தான் (லாகூர், கராச்சி), பங்களாதேசம், மியான்மர், இலண்டன், இலங்கை ஆகிய இடங்களிலுள்ள அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.     சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் இவை அதிக எண்ணிக்கையில் உள்ளன. தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில் நின்ற நிலையிலுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சில திருமேனிகள் முற்காலச் சோழர் காலத்தையும் (கி.பி.871 முதல் 1070 வரை), பல திருமேனிகள் பிற்காலச் சோழர் காலத்தையும் (கி.பி.1070 முதல் 1250 வரை) சேர்ந்தவையாகும். இவற்றில் பல எழுத்துப் பொறிப்பினைக் கொண்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் சோழ மன்னர்கள் பௌத்தத்திற்கு அளித்த ஆதரவை வெளிப்படுத்துவதோடு, அக்காலகட்டத்தில் பௌத்தம் உயரிய நிலையில் இருந்ததையும் உணர்த்துகின்றன.

ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு பௌத்தத்தின் பெருமையை எடுத்துக்கூறும் நாகப்பட்டின புத்தரது செப்புத்திருமேனிகளை ஒருசேரக் காண்பதற்குச் சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்கோ, நின்ற நிலையிலுள்ள ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காண தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்திற்கோ ஒரு முறை பயணிப்போம், வாருங்கள்.    

-------------------------------------------------------------------------------------------
நன்றி: தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2011
(கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)
-------------------------------------------------------------------------------------------
12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தஞ்சாவூர் கலைக் கூடத்திற்குப் பலமுறை சென்றுள்ள போதிலும், முழுக் கவனம் செலுத்தாமலேயே பார்த்து வந்துள்ளமை, தங்கள் கட்டுரையினைப் படித்தபின் புரிகிறது. அடுத்தமுறை செல்லும் போது அவசியம், நின்ற நிலையிலுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனியைக் காண்பேன்.நன்றி, தங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்,

    ReplyDelete
  2. miga sirrappaana payan mikka katturai,ungallukku en mikka anbaana vaazthukkalum paaraattukkalum

    Prof.Dr.Kanaka.Ajithadoss

    ReplyDelete
  3. Very good information... we are expecting more... i pray for you... you will get buddha's blessings...

    ReplyDelete

Post a Comment