களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் (1993-2003)
பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் களப்பணி மேற்கொண்டபோது பல சமண தீர்த்தங்கரர் சிற்பங்களையும், அவற்றில் பெரும்பாலானவை புத்தர் என அழைக்கப்படுவதையும் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட களப்பணியும், சிற்ப அமைப்பில் காணப்பட்ட கூறுகளும் புத்தர் மற்றும் சமணர் சிற்பங்களுக்கான வேறுபாட்டை உணர்த்தின. 1993இல் ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப்பட்டத்திற்குப் பதிவு செய்தபின் சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்களைப் பற்றிய செய்திகள் நூல்களிலிருந்தும், கட்டுரைகளிலிருந்தும் தொகுக்கப்பட்டன. முதலில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிற்பங்களைக் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல இடங்களில் தனியாக உள்ள சிற்பங்களைத் தேடும் முயற்சி ஆரம்பமானது. இக்கட்டுரையில் 1993 முதல் 2003 வரை மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. அவ்வாறான சமணர் சிற்பங்...