களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் (1993-2003)


   பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் களப்பணி மேற்கொண்டபோது பல சமண தீர்த்தங்கரர் சிற்பங்களையும், அவற்றில் பெரும்பாலானவை புத்தர் என அழைக்கப்படுவதையும் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட களப்பணியும், சிற்ப அமைப்பில் காணப்பட்ட கூறுகளும் புத்தர் மற்றும் சமணர் சிற்பங்களுக்கான  வேறுபாட்டை உணர்த்தின. 1993இல் ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப்பட்டத்திற்குப் பதிவு செய்தபின் சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்களைப் பற்றிய செய்திகள் நூல்களிலிருந்தும், கட்டுரைகளிலிருந்தும் தொகுக்கப்பட்டன.  முதலில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிற்பங்களைக் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல இடங்களில் தனியாக உள்ள சிற்பங்களைத் தேடும் முயற்சி ஆரம்பமானது.  இக்கட்டுரையில் 1993 முதல் 2003 வரை மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பற்றி விவாதிக்கப்படுகிறது.  அவ்வாறான சமணர் சிற்பங்களை அடஞ்சூர், ஆலங்குடிப்பட்டி, காரியாங்குடி, செங்கங்காடு, தஞ்சாவூர், பெருமத்தூர்,  ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் காணமுடிந்தது. அனைத்து சிற்பங்களும் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பங்களாகும். 
அடஞ்சூர் (2003)
புகைப்படம் ஜம்புலிங்கம்
அடஞ்சூர் (ஏப்ரல் 2003) : தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் திரு வீரமணி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள அடஞ்சூரில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளதாகக் கூறியிருந்தார். அதனடிப்படையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அடஞ்சூருக்குக் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு  சிவந்திதிடல் அருகே உள்ள நல்லகூத்த அய்யனார் கோயிலில் அவர் கூறிய சிற்பம் இருந்தது. அது 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமாகும். அமர்ந்த நிலையில், தியான கோலத்தில் முக்குடை மற்றும் மரம், இரு புறமும் யட்சர்கள் போன்ற கூறுகளுடன் அச்சிற்பம் ஒரு பீடத்தின்மீது இருந்தது. நல்லகூத்த அய்யனாருடன் அந்தத் தீர்த்தங்கரருக்கும் வழிபாடு நடத்தப்படுவதைக் காணமுடிந்தது. மறுபடியும் நவம்பர் 2011இல் பேராசிரியர் இலட்சுமணமூர்த்தி, ஆசிரியர் திரு தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் களப்பணி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தச் சிற்பம் அங்கு காணப்படவில்லை. விசாரித்தபோது சில ஆண்டுகளுக்கு முன் அந்தச் சமண சிற்பம் திருட்டுப்போய்விட்டதாகக் கூறினர்.  
ஆலங்குடிப்பட்டி (1999)
புகைப்படம் ஜம்புலிங்கம்
ஆலங்குடிப்பட்டி (மே 1999): மயிலை சீனி வேங்கடசாமி புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டபோது அங்கு புத்தர் சிற்பம் காணப்படவில்லை. ஆனால் அருகேயுள்ள கோட்டைமேடு என்னுமிடத்தில் 40" உயரமுள்ள ஒரு சமண தீர்த்தங்கரரைக் காணமுடிந்தது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்த அச்சிற்பத்தின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அடர்ந்த செடிகளுக்கிடையே இருந்த அந்தச் சமணரைக் கண்டுபிடிக்க தென்னேந்திரன்பட்டியைச் சேர்ந்த திரு ராம்கண்ணு உதவினார். அந்தச் சமணரைச் சிவநாதர் என்று கூறுகின்றனர். மயிலை சீனி வேங்கடசாமியும், பின்னர் வந்த அறிஞர்களும் அந்தச் சமணரைப் புத்தர் என்று கூறியிருப்பார்கள் என்பதைக் களப்பணி மூலம் உணரமுடிந்தது.
காரியாங்குடி (நவம்பர் 1998): வேதாரண்யம் பகுதியைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைத் தேடி தில்லை வளாகம், கற்பகநாதர்குளம் ஆகிய இடங்களுக்குக் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பயணத்தின்போது திருவாரூரைச் சேர்ந்த திரு ஆர்.தியாகராஜன் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-தப்ளாம்புலியூர் சாலையில் காரியாங்குடி அருகே ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாகக் கூறினார். அத்தகவலின் அடிப்படையில் தப்ளாம்புலியூர் சென்றபோது வலது புறம் வயல் வரப்பில் அமர்ந்த நிலையில் தியானகோலத்திலிருந்த ஒரு சிற்பத்தைக் காணமுடிந்தது. அச்சிற்பத்தை அப்பகுதியில் புத்தர் எனக் கூறிவருவதைக் காணமுடிந்தது. முக்குடையும், இரு புறமும் காணப்பட்ட யட்சர்களும் அது சமண தீர்த்தங்கரர் சிற்பம் என்பதை உறுதி செய்தன. கவனிப்பாரின்றி அச்சிற்பம் வயலில் கிடந்தைப் பார்த்தபோது மனதுக்கு நெருடலாக இருந்தது. மறுபடியும் பிப்ரவரி 2010இல்  சென்றபோது அச்சிற்பத்தை அங்கு காணவில்லை.
செங்கங்காடு (1999)
புகைப்படம் ஜம்புலிங்கம்
செங்கங்காடு (பிப்ரவரி 1999): வேதாரண்யம் பகுதியில் இடும்பவனம் மற்றும் புட்பவனம் ஆகிய இடங்களில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்ப்பதற்காகக் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தில்லைவளாகத்தைச் சேர்ந்த திரு எம்.அய்யாதுரை என்பவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் செங்கங்காடு அருகே ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாகக் கூறினார். அதனடிப்படையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டபோது ஒரு சமணரைக் காணமுடிந்தது. அமர்ந்த நிலையில், தியான கோலத்தில் முக்குடை, இரு புறமும் யட்சர்கள் போன்ற கூறுகளுடன் அச்சிற்பம் ஒரு பீடத்தின்மீது இருந்தது. அந்தச் சமணரைப் புத்தர் என்று உள்ளூரில் வழிபட்டு வருவதாக அங்கிருந்த திரு கோவிந்தசாமி வைத்தியர் கூறினார். நவம்பர் 2011இல் மறுபடியும் தில்லைவளாகம் தெற்குப்பகுதியில் உள்ள வேம்பழகன்காடு எனப்படும் அவ்விடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் நா.முருகேசன் மற்றும் ஆசிரியர் திரு தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் சென்றபோது மறுபடியும் அந்தச் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றதை நினைவுகூர்ந்தார் வைத்தியர். தொடர்ந்து அச்சிற்பத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதைக் காணமுடிந்தது.   
தஞ்சாவூர்  (1999)
புகைப்படம் ஜம்புலிங்கம்
தஞ்சாவூர் (சூன் 1999) : தஞ்சாவூர் மேலவீதி-வடக்குவீதி சந்திப்பில் மூலை அனுமார் கோயில் பின்புறம் ஒருசமணர் இருப்பதாக பல நண்பர்களும், அறிஞர்களும் கூறியிருந்தனர். அதனடிப்படையில் ஆசிரியர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அக்கோயிலின் பின்புறம் எவ்விதப் பராமரிப்புமின்றி இருந்த 34" உயரமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பத்தைக் காணமுடிந்தது. அமர்ந்த நிலையில் தியான கோலத்திலுள்ள அச்சிற்பம் முக்குடையுடன் அழகிய பீடத்தின்மீது காணப்பட்டது. நவம்பர் 2011இல் மறுபடியும் அங்கு சென்றபோது அச்சிற்பத்தை அங்கு காணமுடியவில்லை. அருகில் விசாரித்தபோது சில ஆண்டுகளுக்கு முன் அச்சிற்பம் திருட்டுப்போய் விட்டதாகத் தெரிவித்தனர்.
பெருமத்தூர் (மார்ச் 1999):  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூரில் ஒரு சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டு களப்பணி மேற்கொள்ளப்பட்டபோது 24" உயரமுள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த அந்தச் சமண சிற்பத்தினை உள்ளூரில் புத்தர் என்று கூறிவருவதைக் காணமுடிந்தது. மற்ற சிற்பங்களிலிருந்து சற்று மாறுபட்ட கலையமைப்பில் உள்ள அந்தச் சமண சிற்பத்தைப் பல அறிஞர்கள் புத்தர் என்று கூறுகின்றனர். அச்சிற்பத்திற்கு வழிபாடு எதுவும் நடத்தப்படவில்லை.
ஜெயங்கொண்டம் (டிசம்பர் 1998): மயிலை சீனி வேங்கடசாமி தொடங்கி பல அறிஞர்கள் ஜெயங்கொண்டத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஒரு புத்தரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சிற்பத்தைப் பார்க்கச் சென்றபோது ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன்  உதவியாக இருந்தார். புத்தர் சிற்பம் உயரமான ஒரு மேடையின்மீது வைக்கப்பட்டிருந்தது. புத்தரைப் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மேல வெள்ளாளத்தெரு-கோனார் தெரு சந்திப்பில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிற்பத்தைக் காணமுடிந்தது. களப்பணியின்போது புகைப்படக் கருவியை எடுத்துச்செல்ல மறந்துவிட்டதால் அந்தச் சமண தீர்த்தங்கரரைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அச்சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்தது. 20" உயரமுள்ள அச்சிற்பத்தில் இருந்த முக்குடை மற்றும் பிற கூறுகளின் வழியாக அச்சிற்பம் சமண தீர்த்தங்கரர் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த பயணத்தின்போது புகைப்படம் எடுக்கத் தயாராகச் சென்றபோது ஒரு பெரியஅதிர்ச்சி காத்திருந்தது. முன்னர் அங்கிருந்த  சமண தீர்த்தங்கரர் சிற்பம் அவ்விடத்தில் காணப்படவில்லை. அருகிலிருந்தவர்களை விசாரித்தபோது சில நாள்களுக்கு முன் திருட்டுப்போய்விட்டதாகக் கூறி வேதனைப்பட்டனர்.
களப்பணியின்போது பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும் சமணரைப் புத்தர் என்றும் கூறுவதையும்,  குறுகிய காலத்திற்குள் பல சமணர் சிற்பங்கள் இருந்த தடயம் இல்லாமல் மறைந்துபோனதையும் காணமுடிந்தது. சில இடங்களில் முறையாக வழிபாடு நடத்தப்படுவதைக் காணும்போது சமண தீர்த்தங்கரரின் மீதான மக்களின் ஈடுபாட்டை உணரமுடிந்தது. சிற்பங்களை வழிபாடு என்ற நோக்கில் மட்டுமன்றி கலை, சமயம், பண்பாடு என்ற பரந்துபட்ட கோணங்களில் நோக்கவேண்டியது தற்போதைய தேவையாகிறது. இவை போன்ற சிற்பங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வினை உண்டாக்குவதே வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.

நன்றி: ஏப்ரல் 2012 முக்குடை இதழில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை வெளியிட்ட முக்குடை இதழுக்கு நன்றி.  

Jain Tirthankara sculptures found during field study 
This piece is on the Jain Tirthankaras found during field study carried out from 1993 to 2003 in Adanjur and Thanjavur (Thanjavur district); Alangudipatti (Pudukottai district), Kariyangudi and Sengangadu (Tiruvarur district); Perumattur (Perambalur district) and Jayamkondam (Ariyalur district). All were in sitting dhyana posture.Among these some were found missing now. During field study it was learnt that Buddha sculptures were referred to as Jain sculptures and vice versa. All these Tirthankaras were the 24th Tirthankara, the Mahavira.      

29.8.2013இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 29.8.2013

Comments

 1. excellent article .great service thanks a lot.
  Prof.Dr.Ajithadoss

  ReplyDelete
 2. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப் பட்டச் சிற்பங்கள்,தங்கள் ஒரு முறை சென்று பார்த்து, மறுமுறை புகைப்படம் எடுப்பதற்குள் மாயமாய் மறைந்தது வேதனையளிக்கின்றது.தொடரட்டும் தங்களின் சீரிய பணி.

  ReplyDelete
 3. Dear sir,
  Thanks for your excellent service - Sanmathi, Singapore

  ReplyDelete
 4. I salutes for your excellent service.

  ReplyDelete
 5. ஐயா, நன்றி. சிலைகள் காணவில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது.

  ReplyDelete

Post a Comment