பௌத்த சுவட்டைத் தேடி : சுந்தரபாண்டியன்பட்டினம்
ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, கரூர், வன்னிச்சிப்பட்டினம், வெள்ளனூர் சுந்தரபாண்டியன்பட்டினம் ஆகியவை புதுக்கோட்டைப்பகுதியில் புத்தர் சிற்பங்கள் இருந்த இடங்களாகும். ஆலங்குடிப்பட்டி களப்பணி அனுபவத்திலிருந்து சற்று வித்தியாசமானது சுந்தரபாண்டியன்பட்டினம் அனுபவம். இங்கு புத்தர் இருக்கும் இடத்தினை முன்கூட்டியே அறிந்து சென்றபோது பெற்ற அனுபவம் இம்மாதப்பதிவு. அக்டோபர் 1993 எனது ஆய்வுக்கான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் புத்தர் சிற்பங்களைத் தேட ஆரம்பித்தபோது என் மனதில் கல்லூரிப்படிப்பை முடித்து வெளியே வந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. படிப்பை முடித்ததும் வேலை தேடும் படலத்தில் இறங்கிய போது பார்க்கும் ஒவ்வொருவரிடமும் என் தன்விவரக்குறிப்பினைக் கொடுப்பதையும், பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வேலைக்காக விண்ணப்பம் அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறே பௌத்தம் தொடர்பான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் நான் சந்திக்கும் நண்பர்களிடமும், அறிஞர்களிடமும் புத்தர் சிற்பங்கள் எங்கெங்கு ...