பௌத்த சுவட்டைத் தேடி : கும்பகோணம்
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலிலுள்ள ஒரு சிற்பம் அரை நூற்றாண்டிற்கும் மேலாக புத்தர் என்று கூறப்பட்டுவருகிறது. அது புத்தரா அல்லது வேறு சிற்பமா என்பதைப் புரிந்துகொள்ள களப்பணி எவ்வாறு உதவியாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள கும்பகோணத்திற்குப் பயணிப்போம். அக்டோபர் 1993 ஆய்வியல் நிறைஞர் ஆய்விற்காகப் பதிவுசெய்த பின் கும்பகோணம் பகுதியிலுள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.மயிலை சீனி வேங்கடசாமி தன் பெளத்தமும் தமிழும் (1940) நூலில், கல்வெட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி கும்பகோணம் என்ற உட்தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்ததைக் கண்டேன்: "கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டுகள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்". டி.என்....