கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலிலுள்ள ஒரு சிற்பம் அரை நூற்றாண்டிற்கும் மேலாக புத்தர் என்று கூறப்பட்டுவருகிறது. அது புத்தரா அல்லது வேறு சிற்பமா என்பதைப் புரிந்துகொள்ள களப்பணி எவ்வாறு உதவியாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள கும்பகோணத்திற்குப் பயணிப்போம்.
அக்டோபர் 1993
ஆய்வியல் நிறைஞர் ஆய்விற்காகப் பதிவுசெய்த பின் கும்பகோணம் பகுதியிலுள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.மயிலை சீனி வேங்கடசாமி தன் பெளத்தமும் தமிழும் (1940) நூலில், கல்வெட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி கும்பகோணம் என்ற உட்தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்ததைக் கண்டேன்: "கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டுகள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்". டி.என்.வாசுதேவராவ் (1979) மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்தை அப்படியே கூறியுள்ளார். தமிழ்நாட்டு வரலாறு (1998) நூலில் மயிலை சீனி வேங்கடசாமியை மேற்கோள் காட்டி புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாகக் கும்பகோணம் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் சென்று அந்த சிற்பத்தைக் காண உரிய நேரத்தை எதிர்பார்த்தேன்.
இரண்டாண்டுகள் கழித்துத்தான் கும்பகோணம் செல்ல நேரம் பொருந்தி வந்தது. சைவ, வைணவ, சமணக் கோயில்களும் பெளத்தக் கோயில் இருந்ததற்கான கல்வெட்டும் உள்ள இடம் கும்பகோணம். இவற்றில் பெரும்பாலான கோயில்களுக்கு நான் சென்றுள்ளேன். கல்லூரி நாட்களில் (கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி, 1975-1979) நாகேஸ்வரர் திருமஞ்சன வீதி வழியாகக் கல்லூரிக்குச் சென்றபடியால் பகவ விநாயகர் கோயிலை முன்பு பல முறை பார்த்த நினைவு எனக்கு இருந்தது. அவரது குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு அக்கோயிலுக்குச் சென்றேன். கருவறையில் விநாயகர் சிற்பம் இருந்தது. மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ள சிற்பம் கருவறையின் வெளியே இருந்தது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். போதிய கால அவகாசம் கிடைக்காததால் அவர் புத்தர் என்று கூறிய, கருவறையின் வெளியேயிருந்த சிற்பத்தினைப் புகைப்படம் எடுத்து ஆய்வேட்டில் சேர்க்க இயலவில்லை.
அக்டோபர் 1998
எனது முனைவர் பட்ட ஆய்வின் மூலமாகச் சில புதிய அனுபவங்களைப் பெறமுடிந்தது. ஆய்வின் களமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் களப்பணி சென்றபோது பல புத்தர் சிற்பங்களைக் காணமுடிந்தது. சோழ நாட்டில் உள்ள புத்தர் கற்சிற்பங்கள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் உள்ளவையாகும். நின்ற நிலையில் உள்ள சிற்பங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிற்பங்கள் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், சற்றே மூடிய கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள், நெற்றியில் திலகக்குறி, மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி போன்ற சில கூறுகளைக் கொண்டுள்ளன. சோழ நாட்டில் உள்ள புத்தர் கற்சிற்பங்கள் இவற்றில் அனைத்துக் கூறுகளையோ, சில கூறுகளையோ கொண்டிருப்பதைக் களப்பணியின்போது காண முடிந்தது. இந்தச் சூழலில் மறுபடியும் கும்பகோணம் ஸ்ரீ பகவத் விநாயகர் கோயில் என்றழைக்கப்படும் பகவ விநாயகர் கோயிலுக்குச் சென்றேன். அங்குள்ள சிற்பம் புத்தரின் சிற்பத்திற்கான கலையமைதியைக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணியால் கோயில் அர்ச்சகர் திரு.சுரேஷ் எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். ஆய்வுபற்றி ஆவலோடு விசாரித்தார். 1995இல் பகவ விநாயகர் கோயிலில் இருந்த சிற்பத்தைப் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் இடையே பெரும் வேறுபாட்டினை என்னால் காண முடிந்ததை அவரிடம் கூறினேன். சோழ நாட்டில் காணப்படும் பிற புத்தர் சிற்பங்களின் கலையமைதியில் அந்தச் சிற்பம் இல்லை. பல ஆண்டுக்குப் பின் இப்போது இந்த வேறுபாட்டை அறிந்ததையும் இடைப்பட்ட ஆண்டுகளில் பல இடங்களில் புத்தர் சிற்பங்களைப் பார்த்ததையும் அவரிடம் கூறினேன். அவர் பகவர் தொடர்பாக அங்கு கூறப்பட்டுவரும் செய்தியை என்னிடம் கூறினார்.
"வேதாரண்யத்தில் தன் சீடருடன் வசித்துவந்தவர் பகவர். ஒரு நாள் பகவரின் வயதான தாயார் தான் காலமான பிறகு, தன் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மலர்கிறதோ அந்த இடத்தில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டார். தாயாரின் மறைவுக்குப் பிறகு, பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறார். கும்பகோணம் வந்து காவிரி நதியில் நீராடும்போது அவருடைய சீடர் பெட்டியைத் திறந்துப் பார்க்க, அதில் மலர்கள் இருக்கக் கண்டு குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடி விடுகிறார். இச்செயல் குருவிற்குத் தெரியாது. பின் அவர் காசி செல்கிறார். காசியில் அஸ்தி மலராக மாறவில்லை. அப்போது அருகிலிருந்த சீடர் கும்பகோணத்தில் நடந்ததைக் கூறுகிறார். மீண்டும் கும்பகோணம் அடைந்து காவியாற்றில் புனித நீராடிவிட்டு அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மிகிழ்ச்சியுற்று அஸ்தியைக் கரைக்கிறார். கும்பகோணத்துக்கு காசியைவிடவும் வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கேயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்த கணபதிக்கு ஸ்ரீ பகவத் விநாயகர் என்ற பெயர் வரலாயிற்று. காசிக்கு வீசம் பெரிது கும்பகோணம் என்று உணர்த்தும் வகையில் பகவரின் வலது கை முத்திரை உள்ளது".
இச்செய்தி படத்துடன் கோயிலின் கருவறைச் சுவற்றில் அழகான சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் களப்பணியின் மூலமாகப் பெற்ற அனுபவம் அது புத்தர் சிற்பம் இல்லை என்பதை எனக்குத் தெளிவுபடுத்தியது. மயிலை சீனி வேங்கடசாமி அச்சிற்பத்தைப் புத்தர் என்று கூறியுள்ளார். அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் (அக்டோபர் 1995) அப்படியே பதிவு செய்திருந்தேன். முனைவர் பட்ட ஆய்வேட்டில் (டிசம்பர் 1999) சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிற்பங்களுடன் நோக்கும்போது இச்சிற்பம் புத்தராக இருக்க வாய்ப்பில்லை என எண்ணத்தோன்றுகிறது என்று கூறி அவரது கருத்துக்கு மாற்றாக என் கருத்தைப் பதிவு செய்தேன்.
களப்பணி மேற்கொள்ளாமல் போயிருந்தாலோ பிற புத்தர் சிற்பங்களுடன் ஒத்துநோக்காமல் விட்டிருந்தாலோ நானும் இச்சிற்பத்தைப் புத்தர் என்றே கூறியிருப்பேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு சுரேஷ், என் இளைய மகன் திரு சிவகுரு
-------------------------------------------------------------------------------------------
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை
-------------------------------------------------------------------------------------------
நன்றி: சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) மலர்
(வலைப்பூ கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)
-------------------------------------------------------------------------------------------
18 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
வரலாற்றுப் பிழைகளைச் சீர்செய்து செம்மையாக்கும் தங்களின் பணி பாராட்டிற்குரியது.பணி தொடரட்டும்...
ReplyDeleteInformations are very good, am very much happy to read your articles
ReplyDelete