சமண சுவட்டைத் தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள்
மே 2007இல் வளையமாபுரத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் சிற்பம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அச்செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த பூண்டி புட்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் த.லட்சுமணமூர்த்தி அவர்கள் திருக்காட்டுப்பள்ளி அருகே தன் சொந்த ஊரான டி.கள்ளிக்குடியில் ஒரு சமணரைப் புத்தர் என்று கூறி அங்குள்ளோர் வழிபடுவதாகக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் சூன் 2003இல் அடஞ்சூர் என்னுமிடத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் என்றழைக்கப்படும் சமணரைப் பற்றிக் கூறியிருந்தேன். அவர் சொன்ன சிற்பத்தைப் பார்க்கும் வாய்ப்பு உடனடியாக அமையவில்லை. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3.11.2011 அன்று களப்பணி சென்றபோது இது பற்றிக் கூறியிருந்தேன். அடுத்த களப்பணியில் அச்சிற்பத்தைப் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்து பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஓரிரு நாளில் அவ்விடத்திற்குச் சென்றுவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதாக உள்ளூரில் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தார். சிற்பம் இருந்த இ...