சமண சுவட்டைத் தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள்
மே 2007இல் வளையமாபுரத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் சிற்பம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அச்செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த பூண்டி புட்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் த.இலட்சுமணமூர்த்தி, திருக்காட்டுப்பள்ளி அருகே தன் சொந்த ஊரான டி.கள்ளிக்குடியில் ஒரு சமணரைப் புத்தர் என்று கூறி அங்குள்ளோர் வழிபடுவதாகக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் ஜூன் 2003இல் அடஞ்சூர் என்னுமிடத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் என்றழைக்கப்படும் சமணரைப் பற்றிக் கூறியிருந்தேன். அவர் சொன்ன சிற்பத்தைப் பார்க்கும் வாய்ப்பு உடனடியாக அமையவில்லை.
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3.11.2011இல் களப்பணியின்போது இது பற்றிக் கூறியிருந்தேன். அடுத்த களப்பணியில் அச்சிற்பத்தைப் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்து இலட்சுமணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஓரிரு நாளில் அவ்விடத்திற்குச் சென்றுவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதாக உள்ளூரில் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தார். சிற்பம் இருந்த இடத்தையாவது பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆவலை வெளிப்படுத்தியபோது அவர், எப்போது வந்தாலும் உதவுவதாகக் கூறினார். களப்பணிக்கான திட்டம் உருவானது. அக்களப்பணியின்போது முந்தைய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்களைப் பார்க்க முடிவெடுத்து நானும் திரு கோ. தில்லை.கோவிந்தராஜனும் 20.11.2011 அன்று கிளம்பினோம். இம்முறை எங்களுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு பி.கருணாநிதி சேர்ந்துகொண்டார்.
சித்திரக்குடி
சித்திரக்குடியில் சமணர் சிற்பத்தைப் பார்த்தோம். ஆனந்தகாவேரி ஆற்றின் இடது கரையில் அழகாக அமர்ந்திருந்தார் சமண தீர்த்தங்கரர்.
திருக்காட்டுப்பள்ளி
பேராசிரியர் லட்சுணமூர்த்தி சொல்லியிருந்த சமணரைப் பார்க்க அவரையும் அழைத்துக்கொண்டோம். பயணத்தின்போது அவருடைய பள்ளி நாட்களில் தன் தாத்தாவின் அன்புக்கட்டளையால் அச்சிற்பத்தை வணங்கிவிட்டுச் சென்றதை நினைவுகூர்ந்தார். சிற்பம் இல்லாவிட்டாலும் சிற்பம் இருந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளைக் கேட்டவுடன் மிக நெகிழ்ச்சியடைந்தார். அங்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்பகுதியில் நெடுநாளாக இருக்கும் அவரது உறவினர் ஆசிரியர் திரு சுந்தரராஜனை அறிமுகப்படுத்தினார். அவர் சில ஆண்டுகள் முன்பு வரை அச்சிற்பம் இருந்ததாகவும், பின்னர் திருட்டுப்போனதாகவும் கூறினார். அவரிடம் ஏதாவது அச்சிற்பத்தின் புகைப்படம் இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டு கிளம்பினோம்.
சங்கராம்பாடி
இளங்காடு-மேகளத்தூர் இடையே உள்ள சங்கராம்பாடி சென்றோம். இளங்காட்டைச் சேர்ந்த பெரியவர் திரு கோவிந்தராஜன் இடத்தை அடையாளம் காட்ட சுமார் 1 கிமீ வயல் வரப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை. முழங்கால் வரை ஆடையை மடக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தோம்.பல இடங்களில் கால் உள் வாங்கியது. அருகிலுள்ள நாணலைப் பிடித்து நடந்தோம். பிடிமானம் இல்லாத இடங்களில் சிரமப்பட்டு நடந்து சென்று அருகிலுள்ள சற்று மேடான கன்னிமார் திடல் என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்த சமணரைப் பார்த்தோம். அவருக்கு முன்பு காசுகள் சிதறிக்கிடந்தன. அவரை எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத அவர் அமைதியாக இருந்தார். பார்த்துவிட்டுத் திரும்பினோம். மறுபடியும் 1 கிமீ நடை.
மாறநேரி
சமணர் சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டு மாறநேரி சென்றோம். அங்கு சிற்பம் இல்லை. எங்களது தேடலைக் கண்டு எங்களுக்கு உதவ முன்வந்தார் அப்பகுதியைச் சேர்ந்த திரு தனபால். அவர் எங்களை அங்கிருந்த பசுபதீஸ்வரசுவாமி சிவன் கோயிலுக்கு அழைத்துச்சென்றார். சிற்பங்கள் தனியாக ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தன. விரைவில் குடமுழுக்கு நடக்கவுள்ளதாக அவர் கூறினார். கோயில் கிட்டத்தட்ட இடிபாடான நிலையில் இருந்தது. அக்கோயிலில் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததற்கான ஒரு பீடத்தைத் தில்லை கோவிந்தராஜன் காண்பித்தார். அதில் மூன்று யாளிகள் இருந்தன. சிற்பம் இல்லாவிட்டாலும் பீடமாவது இருந்ததே என சமாதானப்படுத்திக்கொண்டு அதைப் புகைப்படம் எடுத்தோம். அருகிலுள்ள பிடாரி கோயிலில் சமணர் சிற்பம் இருப்பதாக அவர் கூறினார். சிறிது தூரம் வயலில் சென்று அக்கோயிலை அடைந்தோம். அவ்வாறான சிற்பம் இல்லை. திரும்பினோம்.
செம்பியன்களரி
சங்கராம்பாடியில் உதவிய திரு இளங்காடு கோவிந்தராஜன், திருவையாறு வட்டம் செம்பியன்களரியில் திரு சாமிநாதன் என்பவரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார். செம்பியன்களரியை அடைந்ததும் சமணரைத் தேடும் முன் சாமிநாதனைத் தேடினோம். அப்போதுதான் அவர் தோளில் மண்வெட்டி, கழுத்தில் துண்டு, கையில் கதிர் அரிவாளுடன் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அவசரம் அவசரமாகச் சென்று பிடித்தோம். சமணரைப் பார்க்க வந்தது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பெண்மணிகள் சிலர் இப்படிப் போய் எப்படிப் பார்ப்பீர்கள் என்றனர். அவர்கள் கூறியபோது எங்களுக்குப் புரியவில்லை. பின்னர்தான் அதற்கான காரணம் புரிந்தது. சங்கராம்பாடியில் இருந்தது போலவே வயலைத் தாண்டி செல்லவேண்டியிருந்தது. வயலில் நடக்கும்போது முழங்கால் வரை சேறு படாத வகையில் ஆடையைச் சரிசெய்து நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன் வேகமாக நடந்து சென்றார் சாமிநாதன். எங்களால் வேகமாக நடக்க முடியவில்லை. அவர் மண்வெட்டியை எடுத்து எதையோ வெட்டுவதைப் போலிருந்தது. நெருங்கியபின்னர்தான் அங்கு சிற்பம் இருப்பது தெரிந்தது. அடர்ந்த புற்களை அப்புறப்படுத்தினார். சமணர் வெளிப்பட்டார்.
இன்னும் சிறிது புதைந்த நிலையில் சிற்பம் இருந்தது. அவர் மட்டும் இல்லாவிட்டால் அவ்வாறாக புல் மண்டிக் கிடக்கும் இடத்தில் அச்சிற்பத்தை எங்களால் பார்த்திருக்கமுடியாது. முன்பு வயலில் வேறொரு இடத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பிற்காக முத்தாளம்மன் கோயில் அருகே வைத்திருப்பதாகவும் அங்கிருந்தோர் கூறினர்.
இன்னும் சிறிது புதைந்த நிலையில் சிற்பம் இருந்தது. அவர் மட்டும் இல்லாவிட்டால் அவ்வாறாக புல் மண்டிக் கிடக்கும் இடத்தில் அச்சிற்பத்தை எங்களால் பார்த்திருக்கமுடியாது. முன்பு வயலில் வேறொரு இடத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பிற்காக முத்தாளம்மன் கோயில் அருகே வைத்திருப்பதாகவும் அங்கிருந்தோர் கூறினர்.
ஒரத்தூர்
திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஒரத்தூரில் சமுதாயக்கூடம் அருகே குளக்கரையில் மரத்தடியில் ஒரு சமணர் சிற்பத்தைப் பார்த்தோம். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிலர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மொண்டு கொடுத்தனர். சிற்பத்தைக் கழுவிவிட்டு புகைப்படம் எடுத்தோம்.
பழமார்நேரி
களப்பணியில் நாங்கள் சென்ற அடுத்த இடம் திருவையாறு வட்டத்திலுள்ள எடுத்தநாண்துருத்தி எனப்படும் ரெங்கநாதம் கீழத்தெரு. அங்குள்ள விநாயகர் கோயிலில் இடது புறமாக அழகான ஒரு சிறிய மண்டபத்தில் பாதுகாப்பாக வழிபாட்டில் இருந்த சமணரைக் கண்டோம்.
அடஞ்சூர்
அன்றைய பயணத்தில் கடைசியாகப் பார்க்க வேண்டிய இடமான பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் சென்றோம். ஏப்ரல் 2003 களப்பணியின்போது அச்சிற்பத்தைப் பார்த்தது எனக்கு நினைவிற்கு வந்தது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்காக விசாரித்துக் கொண்டே சென்றபோது அங்கிருந்த சிலர் வேறு ஒரு கோயிலை அடையாளம் காட்ட அங்கு சென்றுவிட்டோம். கோயிலை நெருங்க நெருங்க இருட்ட ஆரம்பித்துவிட்டது. நான் பார்த்த கோயில் அது இல்லை என உறுதியாகத் தெரிவதற்குள் அதிகம் இருட்டாகிவிட்டது. செல்வதும் கடினம், இனி சென்றால் சிற்பம் இருந்தாலும் தெளிவாகப் பார்க்கமுடியாது என்ற நிலையில் இலட்சுமணமூர்த்தி அவர்களிடம் அச்சிற்பம் மற்றும் கோயில் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு, நாங்கள் மூவரும் தஞ்சாவூரை நோக்கித் திரும்பினோம். அப்போது அவர் தனக்குத் தெரிந்தவர்கள் அங்கிருக்கின்றார்களா என விசாரித்து எப்படியும் சிற்பம் பற்றியத் தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினார். நன்றிகூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் ஒரு விஷ்ணு சிற்பத்தைக் காண்பித்தார் உடன்வந்த கருணாநிதி.(களப்பணி முடிந்து சில நாள்கள் கழித்து அச்சிற்பம் பற்றி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார்). ஒரே நாளில் பல சிற்பங்களைப் பார்த்த நிறைவுடன் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.
நான் வீட்டில் நுழைந்தபோது, எப்போது வந்தாலும் உடன் பேசச்சொல்லி இலட்சுமணமூர்த்தி தொலைபேசியில் கூறியதாக என் மனைவி கூறினார். அவரைத் தொடர்பு கொண்டேன். நாங்கள் திரும்பியபின் உடனே அவர் அந்த இருட்டிலும் நண்பர்கள் உதவியுடன் அக்கோயிலுக்குச் சென்றதாகவும், அச்சிற்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப் போய்விட்டதாகவும் கூறினார். இச்செய்தியை தில்லை கோவிந்தராஜனிடம் தெரிவித்தபோது, அதன் புகைப்படமாவது கிடைக்குமா என்றார். 2003இல் நான் எழுதிய கட்டுரையில் அப்புகைப்படம் உள்ளதைப்பற்றி கூறியபோது சமாதானதோடு, இவ்வாறே திருக்காட்டுப்பள்ளி சமணரின் புகைப்படத்தையும் எப்படியாவது நாம் பெற்றுவிடுவோம் என்றார். டி.கள்ளிக்குடியில் பல இடங்களில் விசாரித்து, காணாமல் போனதாகக் கூறப்படும் சமண தீர்த்தங்கரரின் புகைப்படத்தைத் தேடிப் பெற்று ஒரு வாரத்திற்குள் என்னிடம் நேரில் கொண்டுவந்து கொடுத்தார் இலட்சுமணமூர்த்தி.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: பேரா. த.இலட்சுமணமூர்த்தி, திரு கோ.தில்லை கோவிந்தராஜன், திரு பி.கருணாநிதி, திரு சுந்தரராஜன், திரு தனபால்
-------------------------------------------------------------------------------------------
17 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
we are happy to see your works
ReplyDelete