தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பௌத்த சமயச்சான்றுகள்
சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும் பௌத்த சமய வரலாற்றில் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. பூம்புகார் பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும் அதன் வணிகம், பண்பாடு தொடர்பான பெருமைகளையும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.. கி.மு.3ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தது. அவருடைய மகன் மகேந்திரன் பௌத்த சமயத்தைப் பரப்புவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தின் வழியாக இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். வட இந்தியாவில் பர்கூத் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்தூண் காகந்தி (பூம்புகார்) நகரைச் சேர்ந்த சோமா என்ற பிக்குணியால் தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, 1975 : 2). மணிமேகலையின் வேண்டுகோள்படி சோழ மன்னன் கிள்ளிவளவன் பௌத்த சமயத்தில் சேர்ந்ததையும், சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளி (கி.பி.150-200), மணிமேகலை பௌத்த மந்திர சக்தியால் வேற்றுருவம் கொண்டு புகார் நகர ஏழைகளுக்கு உணவளித்து வந்தத...