தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பௌத்த சமயச்சான்றுகள்
சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும் பௌத்த சமய வரலாற்றில் சிறப்பான இடத்தை வகிக்கின்றன.
பூம்புகார்
பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும் அதன் வணிகம், பண்பாடு தொடர்பான பெருமைகளையும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது..
கி.மு.3ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தது. அவருடைய மகன் மகேந்திரன் பௌத்த சமயத்தைப் பரப்புவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தின் வழியாக இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். வட இந்தியாவில் பர்கூத் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்தூண் காகந்தி (பூம்புகார்) நகரைச் சேர்ந்த சோமா என்ற பிக்குணியால் தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, 1975 : 2).
மணிமேகலையின் வேண்டுகோள்படி சோழ மன்னன் கிள்ளிவளவன் பௌத்த சமயத்தில் சேர்ந்ததையும், சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளி (கி.பி.150-200), மணிமேகலை பௌத்த மந்திர சக்தியால் வேற்றுருவம் கொண்டு புகார் நகர ஏழைகளுக்கு உணவளித்து வந்ததைக் கேள்விற்று அவளை உபசரித்து சிறைச்சாலையை அழித்து அவ்விடத்தைப் பல நற்செயல்கள் நடத்தற்குரிய இடமாகச் செய்ததையும், சிறைச்சாலையைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துக்கொண்டதையும் மணிமேகலைக் காப்பியம் மூலம் அறியமுடிகிறது.
1927இல் காவிரிப்பூம்பட்டினத்தில் மேலையூர் என்ற இடத்தில் போதிசத்வ மைத்ரேயரின் செப்புத்திருமேனி பூமிக்கடியிலிருந்து கிடைத்துள்ளது. தங்கமுலாம் பூசப்பட்டுள்ள இத்திருமேனி கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. (நாகசாமி, 1973 : 16). 1962-67இல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது மேலையூரில் 2.5 மீ சதுரமுள்ள ஏழு அறைகளைக் கொண்ட புத்த விகாரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (EIA Vol.II : 216). இந்த விகாரையிலிருந்து, ஆந்திரப்பிரதேசம் நாகார்ஜுனகொண்டாவில் பயன்படுத்தப்பட்ட ஒருவகைப் பளிங்குக்கல்லால் ஆன புத்தரின் பாதம் கிடைத்துள்ளது. சுமார் 3 1/2 அடி நீளமும், 2 1/2அடி அகலமும் உள்ள இந்தப் புத்தர் பாதத்தில் இரண்டு காலடிகளும், பூர்ண கலசம், ஸ்ரீவத்சம் போன்ற மங்கலச் சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன. புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் செப்புத்திருமேனி ஒன்றும் கிடைத்துள்ளது. பிப்ரவரி 1995இல் முடிவுற்ற நான்காவது கடல் அகழ்வாராய்ச்சியின் மூலமாக பூம்புகார் கடலுக்குள் பல கட்டிட அமைப்புகள் இருந்ததையும் அறிய முடிகிறது. (The Hindu, 20.2.1995).
நாகப்பட்டினம்
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பூம்புகாருக்கு அடுத்தபடியாக பௌத்த சமயச் செல்வாக்கு நிலவிய இடம் நாகப்பட்டினம் ஆகும். 1991இல் தஞ்சாவூர் மாவட்டம் இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவு தஞ்சாவூரையும் மற்றொரு பிரிவு நாகப்பட்டினத்தையும் தலைமையிடமாகக் கொண்டன. இடைக்காலச் சோழர் ஆட்சியில் நாகப்பட்டினம் சோழர்களின் முக்கியத்துறைமுகமாக மட்டுமன்றிச் சமய மையமாகவும் விளங்கியது. கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப்பாடல்களில் இவ்வூரின் பெயர் நாகை என்று உள்ளது. இங்குள்ள நாகநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து அமைப்பு முறையில் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் கல்வெட்டு இவ்வூரின் பெயரை நாகை என்று குறிப்பிடுகிறது. (பா.ஜெயக்குமார், 1991 : 2).
சீன நாட்டுப்பயணி யுவான்சுவாங், இங்கு அசோகன் கட்டிய ஆதிவிகாரை எனப்படும் புத்த விகாரை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தம்மபாலர் (கி.பி.500) இங்கிருக்கும்போது பாலியில் ஒரு நூல் எழுதினார். கி.பி.720இல் பல்லவ மன்னன் நரசிம்மபோத்தவர்மன் காலத்தில் இங்கு ஒரு புத்தர் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டு சீனாவிலிருந்து நாகப்பட்டினத்துக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன மன்னன் விருப்பப்படி இக்கோயில் கட்டப்பட்டது. (மயிலை சீனி வேங்கடசாமி, 1957 : 47). கி.பி.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன், இராஜராஜன் (கி.பி.985-1014) அனுமதியுடன் ஒரு புத்த விகாரையைக் கட்டியதை ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. (EI Vol.XXII : 213-216). ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனின் தந்தையான சூடாமணிவர்மன் பெயரால் கட்டப்பட்டதால் இது சூடாமணி விகாரை என்றழைக்கப்பட்டது.இந்த விகாரைக்கு இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் (1006) நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரையும் அதன் வருவாயையும் கொடையாக வழங்கினார். இராஜராஜன் இறந்தபிறகு அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி.1012-1044) இதனை உறுதிப்படுத்தியதோடு அதனை செப்பேடாகவும் பொறித்தார். (EI Vol.XXII : 267-281). வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விகாரைகள் அழிந்துவிட்டபோதிலும் ஆனைமங்கலச்செப்பேடுகள் மூலம் இவை எங்கிருந்தன என்பதைத் தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். (P.Jayakumar, 1992 : 429-433).
பர்மாவை ஆண்ட மன்னன் தம்மசேத்தி அல்லது இராமாதிபதியின் (கி.பி.1476) கல்யாணி கல்வெட்டு, நாகப்பட்டினத்தில் பௌத்த சமயம் சிறந்த நிலையில் இருந்ததை எடுத்துரைக்கிறது. (IA Vol.XXII : 11-243). இக்கல்வெட்டுகளில் ஒன்றின் மூலம் சித்திரதூதர் மற்றும் இராமதூதர் என்பவர்களின் தலைமையில் இரு கப்பல்களில் இரு குழுக்கள் பௌத்த சமய வளர்ச்சி பற்றி அறிய இலங்கைக்குச் சென்றதையும், அவற்றில் சித்திரதூதர் சென்ற கப்பல் கடலில் விபத்துக்குள்ளானதையும், சித்திரதூதர் மட்டும் நாகப்பட்டினம் (நவுதபட்டின) வந்தடைந்து அங்கு சீன மன்னனால் கட்டப்பட்டு வந்த புத்த விகாரையை வணங்கியதையும் அறியமுடிகிறது. (P.Jayakumar, 1992 : 429-433). நாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில் காணப்பட்ட இக்கோபுரம் புதுவெளிக்கோபுரம், பழைய கோபுரம், சீனக்கோபுரம், ஜெயினக்கோபுரம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பண்டைய சின்னங்களின்மீது பற்று கொண்டிருந்த வால்டர் எலியட் என்ற ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நாகப்பட்டினக் கடற்கரைக்கு வரும் கப்பல்களின் மாலுமிகளுக்குத் திசையை உணர்த்தும் கலங்கரை விளக்கமாக விளங்கிய இரு பெரிய கோபுரங்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு பக்கங்களையும் மூன்று அடுக்குகளையும் கொண்டிருந்த இக்கோபுரம் முழுவதும் செங்கற்களைக் கொண்டும் காரை இல்லாமலும் கட்டப்பட்டிருந்தது. இங்கு எவ்வித கல்வெட்டுக்களோ சிற்பங்களோ காணப்படவில்லை. இக்கோபுரம் 1867இல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இடிக்கப்பட்டது. (IA Vol.VII : 224-227). கி.பி.1856 முதல் சூடாமணி விகாரை இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து சுமார் 350 புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. (T.N.Ramachandran, 1965 : 1-20). இவை கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும். வெளிப்பாளையத்தில் விகாரையையொட்டி இருந்த மிகப்பெரிய இலுப்பை மரம் சாய்க்கப்பட்டபோது அம்மரத்தின் வேர் சென்றிருந்த ஆழத்தில் ஐந்து புத்தர் சிற்பங்கள் கிடைத்தன. இவற்றில் நான்கு உலோகத்தினாலும் ஒன்று பீங்கானாலும் ஆனது. இவற்றில் ஒரு புத்தர் சிற்பம் நின்ற நிலையில் உபதேசம் செய்வதுபோல் அமைந்ததாகும். (மயிலை சீனி.வேங்கடசாமி, 1957 : 50). இச்சிற்பங்கள் அனைத்தும் சோழர் காலந்தொட்டு விஜயநகர ஆட்சி வரை உள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும். (P.Jayakumar, 1992 : 429-423).
பிற இடங்கள்
பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்கமங்கலம், திருவிளந்துரை, கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், எலையூர், பெருஞ்சேரி, கோட்டப்பாடி, மயிலாடுதுறை போன்றவை மிகச் சிறந்த பௌத்த மையங்களாக இருந்தன. (மயிலை சீனி.வேங்கடசாமி, 1957 : 46) இவ்விடங்களில் சிலவற்றில் புத்தரது சிற்பங்களும் கோயில்களும் இருந்துள்ளன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த புத்தர் சிற்பங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்க் கலைக்கூடத்தில் இரு புத்தர் சிற்பங்களும் (பட்டீஸ்வரம், மதகரம் ), தமிழ்ப்பல்கலைக்கழக அரண்மனை வளாக அருங்காட்சியகத்தில் (கும்பகோணம்) ஒரு புத்தர் சிற்பங்களும், திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடியில் ஒரு சிற்பமும் உள்ளன. இவை அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவையாகும்.
மன்னார்குடியிலிருந்து பின்னர் அழிந்து போன புத்தர் கோயில் ஒன்றில் இருந்த புத்தரது சிற்பம் தற்போது மன்னார்குடியில் உள்ள சமணக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. (குடவாயில் பாலசுப்ரமணியன், 1995 : 5). இச்சிற்பமும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது.
நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி
தஞ்சாவூர்க் கலைக் கூடத்தில் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற நிலையில் உள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனி உள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் புத்தரது சிற்பங்கள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கருவறையின் தென்புற வாயிலிலும், இராசராசன் திருவாயிலின் உட்புறத் தென்பகுதியிலும் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கும்பகோணம் கல்வெட்டு
பௌத்தத்தின் இறுதிச்சுவடுகளைத் தன்னகத்தே கொண்ட நகரம் கும்பகோணம் ஆகும். கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்மூலமாக பௌத்தம் இப்பகுதியில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை இருந்ததை அறியமுடிகிறது. (EI. Vol.XIX: 215-217). இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற அக்கல்வெட்டு தஞ்சாவூரை ஆண்ட செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியைச் (கி.பி.1535-1590) சார்ந்ததாகும். இது குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜுலைத்திங்கள் ஆகும். நீர்ப்பாசன வசதிக்காக செவ்வப்ப நாயக்கர் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக திருவிளந்துரையில் புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது. கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் எலந்துரை உள்ளது. செவ்வப்ப நாயக்கர் காலத்தில் இந்த ஊர் திருவிளந்துரை என்று அழைக்கப்பெற்றது. இவ்வூருக்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியதால் எலந்துரையிலிருந்த புத்தர் கோயிலுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக திருமலைராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் உரிய அளவு நிலத்தை இக்கோயிலுக்காக அளித்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி.1580இல் எலந்துரை புத்தர் கோயில் பௌத்தர்களால் வழிபடப்பெற்றுள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் புத்தர் கோயிலொன்று பௌத்தர்களால் போற்றப்பெற்றுவந்ததற்கான இறுதிச்சான்றாக திகழ்வது இக்கல்வெட்டாகும். களப்பணி மேற்கொண்டபோது இந்த ஊரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எந்தச் சுவட்டையும் காணமுடியவில்லை. இருப்பினும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததை இக்கல்வெட்டும், மேற்கண்ட சிற்பங்களும் உறுதி செய்கின்றன. சோழ நாட்டில் சோழப்பேரரசர்கள் காலத்தில் நல்ல நிலையில் இருந்த பௌத்தம் விஜயநகரப் பேரரசின் காலத்தில் மங்கத்தொடங்கியது. இவ்வாறு மறையத் தொடங்கிய பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் செவ்வப்ப நாயக்கர் காலத்திற்குப் பிறகு தென்படவில்லை. (குடவாயில் பாலசுப்ரமணியன், 1995 : 325).
*தமிழ்க்கலை, தமிழ் 12 கலை 1-4, மார்ச்சு-திசம்பர் 1994, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரையின் திருந்திய வடிவம். தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997 ஜனவரியில் திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்றைய தேதியில் தஞ்சாவூர் (17), நாகப்பட்டினம் (9), திருவாரூர் (12) ஆகிய மூன்று மாவட்டங்களில் 38 புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஏழு புத்தர் சிற்பங்கள் இக்கட்டுரையாளரால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியுடன் மேற்கொண்ட களப்பணியின்போது அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி தனியார் வழிபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
துணை நின்றவை
நாகசாமி, இரா. பூம்புகார், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
பாலசுப்ரமணியன், குடவாயில். "மன்னை நகரமும் மாண்புடைய கோயில்களும்", அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், மன்னார்குடி, 1995.
பாலசுப்ரமணியன், குடவாயில். தஞ்சை நாயக்கர் வரலாறு கையெழுத்துப்படி, 1995.
வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 11, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
வேங்கடசாமி, மயிலை சீனி. பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957.
ஜெயக்குமார், பா. "நாகைக்கல்வெட்டு", ஆவணம், இதழ் 1, அக்டோபர் 1991.
Encyclopaedia of Indian Archaeology, Vol II.
Epigraphia Indica, Vol XIX and XXII.
The Hindu, 20.2.1995.
Indian Antiquary, Vol VII.
Jayakumar, P. "Nagapattinam: A Medieval Chola Port", New Trends in Indian Art & Archaeology, SR Rao Felicitation Volume II, Aditya Prakasan, New Delhi, 1992.
Ramachandran, T.N. The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum, Bulletin of the Madras Government Museum, General Section, Vol VII No.1, 1965.
Comments
Post a Comment