சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை
மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), டி.என். இராமச்சந்திரன் (1965), சி.மீனாட்சி (1979), டி.என்.வாசுதேவராவ் ஆகியோர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக சுமார் 20 இடங்களைக் குறிப்பிட்டுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இப்பகுதியினைச் சார்ந்த 16 புத்தர் சிலைகளின் புகைப்படங்களைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப்பகுதியில் 19 புத்தர் சிலைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆய்வாளர்கள் ஆங்காங்கே சில புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து வரலாற்றுலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளனர். 1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் இன்று வரை சோழ நாட்டில் இவற்றைப்போல இரு மடங்கு எண்ணிக்கையிலான புத்தர் சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் களப்பணி மேற்கொண்டபோது நேரடியாகக் காண முடிந்தது. 1998 முதல் 2009 வரை இப்பகுத...