வருங்கால ஆய்வாளர்களுக்கு முக்கியத் தரவு : ஜெயபால் இரத்தினம்
உலகின் பழமையான ஆன்மீகப் பாதைகளில் ஒன்றான பௌத்தம், தமிழகத்தில் பொதுக்காலத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பரவத்தொடங்கி, பல நூற்றாண்டுகள் வரை உயர் செல்வாக்குடன் திகழ்ந்திருந்து, பின்னர் படிப்படியாக செல்வாக்குக் குறையத்தொடங்கி, பின்னர் சோழர்ஆட்சியில் புத்தெழுச்சி பெற்றது என்பதும், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் செல்வாக்கிழந்தது என்பதும் ஆய்வாளர்கள் அளிக்கும் தகவல்கள். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையுடனும், வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் இலக்குகளுடனும் செயல்பட்டு, நீண்ட நெடிய காலம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த பௌத்தம் ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகியப் பரப்புக்களில் பல அழியாத முத்திரைகளைப் பதித்துள்ளது. அது விட்டுச்சென்ற தடயங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் புத்தர் பெருமான் சிலைகள். தமிழகத்தில் நிலவிய பௌத்தமதப் பரவலுக்கு சான்றளிக்கும் முக்கியத் தரவுகளில் ஒன்றாக விளங்குவது புத்தர் சிலைகள். சோழநாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கும் புத்தர் சிலைகள் குறித்த ஆய்வாக வெளிவந்திருக்கும் நூல் ‘சோழநாட்டில் பௌத்தம்’. நூலாசிரியர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள்...