பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகளூர்

போதிய குறிப்புகள், செய்திகளைத் திரட்டிக்கொண்டு செல்லும்போதுகூட பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைப் பார்த்த அனுபவத்தினை ஒரு களப்பணியில்போது பெற்றேன். அத்துடன் வேறு இரு புத்தர் சிலைகள் இருப்பதையும் அறிந்தேன். அது என் ஆய்வில் மறக்க முடியாத அனுபவமாகும். களப்பணியின்போது தஞ்சாவூரில் தொடங்கி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த அரியலூர், இராயம்புரம், குன்னம், பரவாய் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். 15 வருடங்களுக்கு முன் நான் சென்ற இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் பெருமையடைகிறேன். 18 மார்ச் 1999இல் (தெலுங்கு வருடப்பிறப்பு, அரசு விடுமுறை நாள்) தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டேன்.

அரியலூர்
என் பயணத்திட்டத்தில் முதலில் தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்குப் பேருந்தில் சென்றேன். அங்கு கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புத்தர் சிலை உள்ளதாக திருச்சி அருங்காட்சியக காப்பாளர் திரு இராஜ்மோகன் மற்றும் அரியலூர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இல. தியாகராஜன் ஆகியோர் கூறியிருந்தனர். (தற்போது இருவரும் பணி நிறைவு பெற்றுவிட்டனர்). கோட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் அனுமதி பெற்று அங்கிருந்த புத்தர்சிலையைப் புகைப்படம் எடுத்தேன். 

இராயம்புரம்

அரியலூரிலிந்து செந்துறை செல்லும் பேருந்தில் சென்று இராயம்புரம் என்னும் இடத்தில் இறங்கினேன். அங்கு விசாரித்தபோது குறிப்பிட்ட தொலைவில் புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். வாடகைக்கு ஒரு மிதிவண்டி எடுத்துக்கொண்டு பேருந்து வந்த வழியில் செந்துறை மார்க்கமாகவே சென்றேன். போகும்போது வலப்புறத்தில் ஏரிக்கரையில் இடுப்பு வரைபுதையுண்ட நிலையில் இருந்த புத்தர் சிலையினைப் பார்த்தேன். புத்தரைப் பற்றி விசாரித்தபோது அங்கிருந்த திரு பசுபதி (வயது 40), "புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர் என்பார்கள். நல்ல சிலையை உடைத்துவிட்டார்கள்" என்று கூறிவிட்டு அருகேயுள்ள ஒகளூரில் ஒரு சிலை இருப்பதாகக் கூறினார். ஒகளூர் சிலையைப் பற்றி தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சந்திரகுமார் (தற்போது பணி நிறைவு) என்னிடம் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. மற்றொருவர் பெரிய திருக்கோணத்தில் இரு புத்தர் சிலைகள் இருந்ததாகவும், தற்போது ஒன்று மட்டுமே உள்ளதாகவும் கூறினார். அவர், அரியலூரிலிருந்து காலை 7.40 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் பேருந்து இருப்பதாகக் கூறினார். அப்போது நேரம் ஒத்துவராத நிலையில் ஒகளூர் புத்தரைப் பின்னர் பார்த்துக்கொள்ள முடிவெடுத்து, மிதிவண்டியை கடையில் திரும்ப வைத்துவிட்டு உரிய வாடகையைத் தந்துவிட்டுக் கிளம்பினேன்.


பரவாய்

அரியலூர் துறையூர் பேருந்தில் குன்னம் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வேப்பூர் செல்லும் பேருந்தில் பரவாய் என்னுமிடத்திற்குச் சென்றேன். ஊரின் நடுவில் மேடையில் புத்தர் சிலையினைக் கண்டேன். அங்கிருந்த திரு கமலக்கண்ணன், விழா நாட்களில் அச்சிலையைத் தண்ணீரால் சுத்தம் செய்து, பொட்டு வைத்து மாலைபோடுவதாகக் கூறினார். அவர் ஒகளூரில் ஒரு புத்தர் சிலையும், பெருமத்தூரில் ஒரு புத்தர் சிலையும் இருப்பதாகக் கூறினார். தகவல்களைக் குறித்துக் கொண்டேன். அப்போது மாலை நேரமாகிவிட்டது. தொடர்ந்து செல்லமுடியுமோ என்ற நிலையில் யோசித்தபோது உள்ளூர் மக்கள் எனக்கு உதவி செய்தனர். பேருந்துக்காக நான் காத்திருந்தபோது பேருந்து வரத் தாமதமாகும் என்றும், புத்தரைப் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் இருட்டிவிடும் என்று கூறி அந்தப் பக்கம் வந்த பால் வண்டியில் ஒகளூருக்கு என்னை அனுப்பிவைத்தனர்.

ஒகளூர்


பால் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது இந்த புத்தர் சிலையைப் பற்றி தமிழ்ப்பல்கலைக்கழக நூலகர் திரு கௌதமன் முன்னர் கூறியது நினைவிற்கு வந்தது. பால் குடுவைகளை ஓட்டுநர் இறக்க ஆரம்பித்தார். அங்கிருந்து புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு விசாரித்துச் சென்றேன். அதற்கு முன்பாக அவரிடம் பேருந்து பற்றிய விவரம் கேட்டபோது அந்நேரம் எந்த பேருந்தும் வராது என்று கூறிவிட்டு, எனக்காகச் சற்று நேரம் காத்திருப்பதாகவும், தான் அருகிலுள்ள கடைகளுக்கு பால் தந்துவிட்டு வருவதற்குள் திரும்பும்படியும் அன்பாகக் கட்டளையிட்டார். மறுப்பேதுமின்றி தலையாட்டிவிட்டு புத்தரைக் காணச் சென்றேன். அங்கிருந்த மாணவர் திரு கே விஸ்வநாதன், "அந்த ஊரில் பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் செல்வதற்கு முன் அந்த புத்தருக்கு மாலை அணிவித்துவிட்டுச் செல்வதாக" கூறினார். புத்தரைப் புகைப்படம் எடுக்கவும் சற்று இருட்ட ஆரம்பித்தது. பால் வண்டி சத்தம் என்னை அழைக்கவே, அங்கிருந்து கிளம்பினேன். பால் வண்டியில் திட்டக்குடி பார்டர் என்ற இடத்திற்குத் திரும்பினேன். ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அங்கிருந்து அரியலூர் வழியாகத் தஞ்சாவூர் வந்தடைந்தேன். 

பிறிதொரு பயணத்தின்போது பெருமத்தூர் மற்றும் பெரிய திருக்கோணம் செல்ல வேண்டும் என்ற சிந்தனை என்னைத் தொடர்ந்து கொண்டே வந்தது.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: முனைவர் இல.தியாகராஜன், முனைவர் த. சந்திரகுமார், திரு இராஜ்மோகன், திரு பசுபதி, திரு கே.விஸ்வநாதன், திரு மா.கௌதமன்
-------------------------------------------------------------------------------------------

அரியலூர் புத்தர் சிலை கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பிறிதொரு களப்பணியின்போது கண்டேன். 

15 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. நாங்களும் பயணித்த உணர்வு ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைத் தரிசித்துள்ளீர்கள்
    பாராட்டுக்கள் ஐயா
    தங்களின் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  3. ஒரே நாளில் 4 ஊர்களுக்கு சென்று புத்தர் சிலைகளைத் தரிசித்துள்ளீர்கள். அதனை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. நல்ல அனுபவம். சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல்முறை வருகிறேன். தொடர்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. நீங்கள் உங்கள் தளத்தில் ஒரு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்கலாமே...

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    அறியமுடியாத தகவல் அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான பயணம்

    ReplyDelete
  8. அய்யா வணக்கம்,
    பொதுவாக விடுமுறை தினமாக இருந்தால் ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் ஏற்படும். ஆனால் அந்த விடுமுறை தினத்திலும் பேருந்து, மிதிவண்டி, பால் வண்டி என்று பல்வேறு வாகனங்களில் சென்று புத்தர் சிலைகளை கண்டு இன்புற்றதுடன் புகைப்படங்களை எடுத்து எங்களையும் இன்புற செய்தது அற்புதம், ஆனந்தம். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. தங்கள் பட்டறிவு மற்ற ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்று கருதுகிறேன்

    ReplyDelete
  10. இதுவரை அறியாத தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. அன்று பயணப் பட்ட போது இருந்ததைவிட அது பற்றிய நினைவுகளில் மகிக்ஷ்ச்சி அதிகம் இருக்கும். சரிதானே ஐயா.

    ReplyDelete
  12. A pilgrimage to Buddhist monuments, not only a field work

    ReplyDelete
  13. பௌத்தம் பற்றிய தங்கள் ஆர்வம் பிரமிப்போட்டுகிறது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் தெரியப் பெற்றோம் நன்றி ஐயா

    ReplyDelete
  14. ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகள் பார்த்த அனுபவக் கட்டுரை நானும் பயணித்த உணர்வை தருகிறது. எனக்கு தெரிந்தவர்களிடம் புத்தர் சிலை இருக்கும் விவரம் தெரிவிக்க கேட்டுக்கொண்டு வருகிறேன். சரியான விவரம் பெற்றதும் தெரிவிக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. அறிய விசயங்கள் நண்பரே குறிப்பெடுத்துக்கொண்டேன் நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  17. நல்லதொரு “புத்தர் வேட்டை”

    வேட்டை தொடர வாழ்த்துகள் ..........

    ReplyDelete
  18. ஆய்வென்ற பெயரில் நான்கு சுவரைத் தாண்டாமல் நான்கைந்து புத்தகங்களை முதன்மையாதாரமாகவும் நாற்பதைம்பது புத்தகங்களை மேற்கோளுக்காகவும் எடுத்திட்டு முடித்து பி எச்டி வாங்கும் நிலை பெருகிய தமிழாய்வுச் சூழலில் உங்களின் ஆய்வு எப்படி இருந்திருக்கும் என்பதை அனுமானிக்கச் செய்துவிட்டது இந்த ஒரு பருக்கைச் சோறு!
    தங்களைப் போன்றோரின் தமிழ்ப்பணிகள் தொடர வேண்டும்.
    ஒரு வாக்குத்தான் எனக்கு இருக்கிறது.
    நூறிடலாம் என்றால் அந்த நூறையும் தங்களின் இந்த ஒரு பதிவிற்கே தந்திருப்பேன்.
    நன்றி அய்யா!
    த ம 1

    ReplyDelete
  19. விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா
    வெளி நாடுகளுக்கு நமது சிலைகளை கடத்துவது பற்றி கேட்கும் கோபம், நமது நாட்டில் இந்த பழம் பெரும் கலை பொருட்களை பாதுகாக்காததை காணும் போது வருவதில்லை

    ReplyDelete
  20. Sir, Can you use google map and mark the place and history of buddhism in tamil nadu? It will be a valuable information to all of us. Further can you write how Buddhism has been assimilated by tamil hinduism?

    ReplyDelete

Post a Comment