பௌத்த சுவட்டைத் தேடி : கீழக்குறிச்சி, வெள்ளனூர்

15 ஏப்ரல் 2023இல் திருச்சி அருகில் கீழக்குறிச்சி புத்தரைப் பார்க்க களப்பணி மேற்கொள்ள முடிவெடுத்து, அத்துடன் திருச்சி அருங்காட்சியக புத்தர் சிலைகளையும், வெள்ளனூர் புத்தர் சிலையையும் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு.

டிசம்பர் 1999இல் முனைவர் பட்ட ஆய்வேட்டின் கணினித் தட்டச்சுப்பணி நடைபெற்று வந்த நிலையில், திருச்சியில் தலையில்லாத புத்தர் சிலையும் அதனருகில் ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி (கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தப்பள்ளி, தினமணி, 15 நவம்பர் 1999) வெளியானது.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  ஆய்வேட்டினை அளிக்க வேண்டிய சூழலில்,  இவை பற்றி செய்திகளையும் திரட்டி உரிய ஒளிப்படங்களுடன் ஆய்வேட்டில் இணைத்தேன். 

"திருச்சி நகருக்குத் தென்கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்குறிச்சி என்னும் சிற்றூரில் கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரது கற்சிலையையும், பௌத்தப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டையும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது....இக்கல்வெட்டில் செந்தாமரைக்கண்ணநல்லூர் என்ற இந்த ஊர் முழுவதும் இறையிலியாகப் பௌத்தப் பள்ளிக்கு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை தலையின்றி உள்ளது...." (பா. ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.140-141)

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றைப் பார்க்க அப்பகுதிக்கு  திருச்சி அருங்காட்சியக்காப்பாட்சியர் திரு சிவக்குமார், ஆய்வாளர் திரு ரவிக்குமார் ஆகியோருடன் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு பால் பண்ணையில் இறங்கினேன். அங்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கீழக்குறிச்சி சென்றோம். அங்கு சென்றபோது எனக்கு மே 1999இல் புதுக்கோட்டையில் ஆலங்குடிப்பட்டிக்கு களப்பணி மேற்கொண்டது நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட இந்த இடமும் அவ்வாறே இருந்தது.  

அவை இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க சற்று நேரம் பிடித்தது. சிறிது நேர தேடலுக்குப் பின் அவற்றைக் கண்டோம். தலையில்லாத புத்தர் சிலை தற்போது சற்று தரையில் புதைந்திருந்தது. அதன் அருகில் கல்வெட்டைக் காணமுடிந்தது. நல்ல வெயில். எங்கும் நிழல் கிடையாது.  
  






காப்பாட்சியர் சிவகுமார், ஆய்வாளர் ரவிக்குமார் (வ)


ஆயிரமாண்டு வரலாற்றுச்சான்றுகளைக் கண்டபின் அடுத்து அருங்காட்சியகம் செல்ல முடிவெடுத்தோம்.  

திருச்சி, அரசு அருங்காட்சியகத்தில் முன்னரே நான் பல முறை பார்த்த குழுமணி, முசிறி, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகளைப் பார்த்தேன். இவற்றில் பேட்டைவாய்த்தலை புத்தர் 1998 களப்பணியின்போது மத்யார்ஜூனேஸ்வரர் கோயில் முன்பாக இருந்ததாகும். அதனை அங்கு பார்த்ததும், அது அருங்காட்சியகத்திற்கு வந்ததும் பற்றி முன்பு விவாதித்துள்ளோம்.  


அவர்களிடம் விடைபெற்று, தஞ்சை திரும்ப எண்ணியபோது பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த வெள்ளனூர் புத்தரைப் பற்றிய சிந்தனை வரவே சத்திரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து வெள்ளனூர் நோக்கி பேருந்தில் பயணித்தேன். 

1998இல் மேற்கொண்ட களப்பணியின்போது அப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு வில்சன் மோகன்ராஜ் அவர்களுடன் முதன்முதலாக ஒரு நல்ல மழைப்பொழுதில் அச்சிலையைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. இப்போது அந்தச் சிலை இடம் மாறி குளக்கரையில் இருந்தது. 


அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள இச்சிலை இப்பகுதியில் உள்ள பிற புத்தர் சிலைகளுக்கான கூறுகளைக் கொண்டுள்ளது. லால்குடி புள்ளம்பாடி இடையேயுள்ள இந்த வெள்ளனூரை ஈ.வெள்ளனூர் என்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வெள்ளனூர் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சமணர் சிலை புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. ஈ.வெள்ளனூர் புத்தரைப் பார்த்த மன நிறைவுடன் அங்கிருந்து கீழப்பழுவூர் வழியாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.

 
நன்றி: 
திருச்சி அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு சிவக்குமார்
ஆய்வாளர் முனைவர் ரவிக்குமார்

Comments

  1. தங்களது பணி மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  2. Anonymous01 July, 2023

    சோழ நாட்டு புத்த சிற்பங்கள் குறித்த ஆய்வு எங்களை போன்ற இளைஞர்களுக்கு தேடுதல் குறித்த ஆர்வத்தினை ஏற்படுத்தியது ஐயா.....தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. தங்களது தேடல் போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  4. Anonymous16 July, 2023

    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

Post a Comment