சோழ நாட்டில் பௌத்தம் : நூல் அறிமுகம் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி

இந்தியாவில் பௌத்தம் (புத்தம்) ஒரு மதமாக மாற்றப்பட்டுள்ளது.  பௌத்தம் ஒரு நெறி. வாழ்க்கை நெறி-முறை. அறிவியல் நெறி. சிந்திக்கத்தூண்டும் நெறி. இந்து பண்பாட்டின்மீது மாற்று சிந்தனையில் பண்பாட்டை சிந்திக்க வைத்த நெறி. மெய்யியல் காண்பது அறிவு என்று வைத்த நெறி. இயற்கையோடும், உலக உயிர்களோடும், செடி கொடிகளோடும், இன்னும் பல இயற்கைப்பொருள்களோடும் வாழத்தூண்டி வழிகாட்டிய நெறி. பௌத்தம், சிந்தனை வழியாகத்தான் அகப்பொருளையும், புறப்பொருளையும் தெளிவாக உணரமுடியும் என்றது.

கௌதம புத்தருக்கு முன்னேயும் புத்தர் இருந்தனர் என நம்பப்படுகிறது. 24 புத்தர்களைக் கடந்துதான் கௌதம புத்தர் புது நெறியை உருவாக்கினார். மண்டிக்கிடந்த குப்பைகளை எரிக்கச் செய்யும் சிந்தனையை வளர்த்தவர் புத்தர். மாசு படிந்த பல அடுக்குகளைக் (சாதியடுக்குகளை) கொண்டு பூமியை தூய்மைப்படுத்த முயன்றவர். இன்னும் பல கூறலாம்.

அசோகன், தன் போர் வெற்றிக்குப் பிறகு பௌத்த நெறியை அறிந்து தெளிந்தான்.  பௌத்தத்தைப் பரப்பவும் முயன்றான். அது அவனால் முடிந்தது.  அவனுக்குப் பிறகும் நடந்தது.  பெருமளவு மக்கள் பௌத்தத்தை (புத்த நெறியை) ஏற்றனர். இயற்கை உணர்வு குறித்த விழிப்புணர்வும் எழுச்சி பெற்றது.

தற்பொழுது மக்கள் முனைவது போன்று பௌத்தத்தைப் பரப்ப முயற்சிகளை மேற்கொண்டனர். புத்தரின் நெறி-திரிபு-மாற்றமடையாத முன்பு வரை இயற்கை சார்ந்தே, அறிவியல் சிந்தனை மரபாக்க மக்கள் பயணித்தனர், புத்தி நெறியாளர்கள். அவர்கள் அறிவர், அருவர் எனவும் அழைக்கப்பட்டனர்.

பொ.ஆ.மு.2ஆம் நூற்றாண்டளவில் பௌத்தம் குறித்த அறிதல் தமிழ்நாட்டில் பரவியிருந்தது.  அதற்கு முந்தைய சிந்தனை முறையை பௌத்தம் இன்னும் கூர்மைப்படுத்தியது. பௌத்த நெறியில் அறிவுக்கூர்மை அனைத்தையும் கூறுகூறாகப் பிரித்து நோக்கியது. உலக இயக்கத்தை, மனிதத் தோற்றத்தை, மனிதப் பரிமாணத்தை, மனித வாழ்க்கை அமைப்பை கூறுகூறாகப் பிரித்தது. சக்கையைப் புறந்தள்ள அறிவுறுத்தியது.

குப்பை சக்கைகளை வைத்துப் பிழைத்தது ஒரு சமூகம். தமிழ்நாட்டு சமூக உணர்வுகளை, சிந்தனைகளை கிள்ளுக்கீரையாகவே கடைவிரித்து அழிக்க முனைந்தன.  அரசர்களை ஆள்கொண்ட நிலையில் பௌத்தம் எதிர்மறை நெறியாக்க  முயற்சிகளை மேற்கொண்டது. 

ஆதரவு அளித்த தலைமுறைகளை ஏதிலாக்கியது. முரண்பாடு மெய்யியல் கருத்துகள்மீது பொய்மையை திணிக்கப்பட்டது.  முதல் பொருள்கள் மீதான சிந்தனைகளின்மீது மண் கொட்டி புதைக்கப்பட்டது. (சான்று : சோழ நாட்டில் பௌத்தம் நூல் சிற்பங்கள்). சில இடங்களில் மெய்யியல் தடயச் சான்றுகளின் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. ஊர்கள் எரிக்கப்பட்டன. மக்கள் கழுவேற்றப்பட்டனர். மக்கள் உயிருக்கும், உடைமைக்கும், பிழைப்புக்கும் குப்பைக் கழிவுகளைச் சகித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.  அந்த அவலம் இப்பொழுது வரை வாழ்க்கையிலும் பண்பாட்டில் தொடர் நிகழ்வுகளாக இருந்து வரலாறாகப் பதிவாகி வருகிறது.

பௌத்த மெய்யியல் சிதைவுகளைத் தான் முனைவர் பா.ஜம்புலிங்கம் சோழ நாட்டில் பௌத்தம் எனும் நூலில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கான தேடல்,  தேடல் மீதான அணுகுமுறை, தேடலில் அறியப்பட்ட சான்றுகளை தன் ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நூலில் பௌத்தம் சார்ந்த அவரின் பதிவுகள், இந்நூற்றாண்டின் தற்பொழுதைய வாழ்க்கை அரசியல் ஆகிய தேடல்களுக்கு மிகத் தேவையான வகையில் சிறப்பாக அடையாளப்படுத்தியுள்ளார். அவரது பதிவுகள் தொடக்க நிலை பௌத்த நெறியைப் பதிவிட்ட மக்களின் உளவியல் நம்பிக்கை ஆகியன தெளிவாக அடையாளப்படுத்தும் முயற்சியாக சோழ நாட்டில் பௌத்தம் நூல் உணர்த்துகிறது.

நூலின் முகப்பே மெய்யியலைத் திரிபுபடுத்த முயன்ற முரணில் தலை வெட்டப்பட்டதைச் சுட்டுகிறது. 

சோழ நாட்டில் பௌத்தம் நூல், புத்தரின் உருவங்களை நினைவுபடுத்தும் படிமங்களைக் கொண்டுள்ளது. பௌத்த சிந்தனையில் மாற்றங்களை உருவாக்கி புத்தரின் மெய் நெறிக்குப் பல வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன என்பதை புத்தரின் படிமங்கள் நினைவுபடுத்துகின்றன.

இந்தியச் சிற்பக்கலையில் புத்தரின் உருவங்கள் இயற்கையியல் மெய்யியலைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளன.

புத்தரின் படிமங்கள் கம்பீரமான தோற்றம், வலிமையான பெருத்த உடல் உறுப்புகள் (கைகள், உடல் பகுதி, கால்கள், முகம், காதுகள்) யாவும் மிக உறுதியான அறிவுத்தேடலின் முடிவான நிலையினை உணர்த்துவனவாகவே அமைக்கப்பட்டுள்ளன.

வேறு சமய உருவங்களில் காணமுடியாத தோற்றம், தியான நிலை புத்தரின் உருவங்கள் தமிழரின் அறிவித்தேடலின் மரபை அடையாளப்படுத்தி உருவாக்கியுள்ளனர் என்பதை அறிகிறோம்.  தமிழரின் சிந்தனை மரபின் விரிந்த உச்ச நிலையைக் காட்டவே புத்தரின் உருவங்களில் சுட்டடிய முயன்றுள்ளனர்.

ஆம், புத்தரின் உருவ சிற்பங்களில் மெய்யியலை வெளிப்படுத்தும் உணர்வை வேறு (இந்து) சமய உருவங்களில் காணமுடியவில்லை.  அதாவது தீச்சுடர் குறியீடு அறிவின் முதிர்வு நிலை வெளிப்பாடாகவே உள்ளது. படர்ந்த நெற்றி, திரட்சியுடன் முன் நீண்ட நெற்றி, விரிந்த புருவம், அகன்ற கண்கள், ஆழமான, ஆழ்ந்த சிந்தனை- சிந்திக்கும்-உணர்வைச் சுட்டுகின்றன. நீண்ட காதுகள் உலக அறிவை கேட்டலின் குறியீடாகவே காட்டப்பட்டுள்ளன. தீச்சுடர் சிந்தனையின் உச்ச நிலையின் வெளிப்பாடே.  நெற்றிப்பொட்டு அமைப்பு ஆழ்நிலையில் அமைதியின் குறியீடே. பிற சமய தாக்கத்தை புகுத்திய முயற்சியையும் உள்ளாக்கத்தையும் அறிவிக்கிறது.  அறவாழி அந்தணன் என்னும் வள்ளுவனின் கூற்றை மெய்ப்பிக்க முயன்றதை படிமங்கள் உணர்த்துகின்றன.

அந்தங்களை அறியாதவற்றை அறியவைத்தவன் என்பதை புத்தரின் உடலில் காணப்படும் சிற்றாடையும். உடலில் நூலும் அடையாளப்படுத்துகின்றன. புத்தரின் உருவங்களில் துறவு நிலையை-துறவின் முடிவு நிலையாக உயர்த்திக்காட்ட முயற்சி செய்யப்பட்டதைக் காணமுடிகிறது. மேலும் பிற சமய வளர்ச்சியில்  புத்த சமய நெறியில் ஓர் அழுத்தம் உருவாக்கப்பட்ட நோக்கை புத்த படிமங்கள் உணர்த்துகின்றன. 

புத்தரின் உருவங்களை, உருவக் கால பல சமூக மக்களும், உயர்நிலை வாழ்க்கைக்கு முன் குறியீடாகக் கொண்டனர் என்பதை சோழ நாட்டில் பௌத்தம் நூல் வழியாக உணரமுடிகிறது. 

ஆசிரியர் பா.ஜம்புலிங்கம் பௌத்தத் தேடலில் தேடும் களத்தை-தேடும் நோக்க நிலையில் சரியான வரையறையை அமைத்துக்கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி சோழ நாட்டில் பௌத்தம்-புத்தர்-சிற்பங்களை மக்களுக்கு அறியப்படுத்த வேண்டுமென்பதிலும் மிக மிக கவனமாக இருந்துள்ளார். அதன் வழியிலான பதிவுகளை-சோழ நாட்டில் பௌத்த உச்ச நிலையையும், அதன் மீதான தாக்குதலின் விளைவுகளையும் தெளிவாக அறிந்துகொள்ள, நூல் வழியாக தெரிந்துகொள்ள உதவியும் உள்ளார். மெய்யியல் மரபின் நீட்சியை இந்நூலமாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஏறத்தாழ 60 புத்தர் சிற்பங்கள் மூலமாக  சோழ நாட்டில் அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரங்களை (கோயில்களை) அறிந்துகொள்ள இந்நூல் வழிகாட்டியுள்ளது. பொ.ஆ.பி.9ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.பி.13ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் பௌத்தக்கோயில்கள் சிதைக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ள சான்றாக இந்நூல் உதவுகிறது. மேலும் , தேரவாத பௌத்தம், ஈனயான பௌத்தம் ஆகிய நெறிகளை சோழ நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்துகொள்ள இந்நூலில் பதிவிடப்பட்டுள்ள சிற்பங்கள் பெரிதும் உதவுகின்றன.

பௌத்த மெய்யியலில் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் எழுதுகோல் ஈடுபடவில்லை. அதற்கான காரணம், அவரின் தேடுதலுக்குரிய வாய்ப்பை முழுமையாக்கிக் கொண்டுள்ளதுதான் என்பதை உணரமுடிகிறது. அதுவே அவரின் நோக்கமும் ஆழமான எண்ணமும் என்பதாக இருந்துள்ளது எனக் கருதமுடிகிறது.

புத்த சிற்பங்கள் ஊரினர் சாம்பான், செட்டியார், பழுப்பர், சிவனார், ரிஷி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டதைப் பதிவிட்டுள்ளார். பிற இடங்களில் முனியப்பன்,  முனிவர் என்னும் பெயரால் குறிப்பிட்டுள்ளனர். புத்தரை அடையாளப்படுத்தும் மக்களின் பெயர்களை தமிழ்ச் சமூக மக்களின் பண்பாட்டோடு ஒப்புநோக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுத் தேவையை நூலாசிரியர் பௌத்த நோக்கர்களின் எண்ணங்களுக்கு விதைத்துள்ளார்.

சைவ, வைணவ சமய மோதலும், அவற்றின் வழியாக வேத தாக்கமும் மக்களை அக்கால நிலையில் நிலைகுலையச் செய்தது என்பதை பெயர்களைக் கொண்டு அறியமுடிகிறது. நல்ல வேலையாக புத்தர் உருவங்களுக்கு முன் வேல், சூலம் ஆகிய படைக்கருவியை, வேட்டை ஆயுதத்தை நிறுத்தி வைத்து தீமிதி விழா நடத்தவில்லை.

புத்தர் சிற்பங்களின் உடல் பகுதி, கால்கள், கைகள், தலையை சிதைத்தவர், சைவ, வைணவத்தை ஏற்ற அரசர், மக்களில் சிலரின் வெறிச்செயலாகவே கருதமுடிகிறது. எதிரிகளைவிட உள்பகை மிகவும் மோசமானது, ஆபத்தானதும்கூட. இதைத்தான் சிதைவுற்ற சிற்பங்களின் பதிவுகளாகக் காணமுடிகிறது.

புத்தர் உருவங்களில் மீசை, பூணூல், ஆடை, பிரபை, ஒளிவட்டம், போதிமரம், பணியாள் அல்லது தூதன் என்ற அடையாளங்கள் பழமையில் புகுத்தப்பட்ட-திணிக்கப்பட்ட-புதுமையாகவே கருதமுடிகிறது.

சோழ மண்டலத்து பௌத்த சிற்பங்களுக்கும், தொண்டை மண்டலத்து பௌத்த சிற்பங்களுக்கும் பெரிதான வேறுபாடுகள் காணப்படவில்லை. தொண்டை மண்டலத்து பௌத்த சிற்பங்கள் காலத்தில் தொன்மையையும், ஒத்த காலத்தையும் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. இவ்விரு மண்டலத்திலும் வழிபாட்டில் உள்ள சிற்பங்கள்  ஒற்றை எண்ணில் உள்ளன. அவ்வழிபாடு ஊரினரில் ஒரு பிரிவினர் மட்டுமே நிகழ்த்தி வருகின்றன. மற்றயவை வானம் பிறந்து தலையில் விழுவதை எதிர்நோக்கி உள்ளன. 'தலையில் இடிவிழ' - பழமொழி.

புத்த உருவ சிற்பங்கள் வழிபாட்டுக்குரியனவாக இருந்துள்ளன என மட்டும் கூறிவிட முடியாது, கூடாது. அவை கல்வி கற்பிக்கும் இடங்களில் இருந்திருக்கலாம். புத்த துறவிகள் தங்கி இருக்க, அறநெறிகளை தெளிவிக்கும் இடமாகவும், மக்கள் கூடி திட்டமிடும் இடமாகவும்கூட இருந்திருக்க வேண்டும்.

வேத-ஆரிய பார்ப்பனர்களால் அறநெறிகளும், கல்வி கற்பிக்கும் பொது முறையும் விலங்குகளும் வறியவர்களுக்கும் உணவளித்தலையும் ஏற்க மறுத்துவந்தனர். 

பிராமணர்களுக்கு மட்டுமே கொடையளித்தலையும், உணவுக்கான பொருள்களை அளித்தலையும் நடைமுறைப்படுத்த முயன்றனர். இதன் செயல் திட்டங்களால் பௌத்தர் ஜைனர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்து நின்று தொண்டாற்றியவர்கள் துன்புறுத்தப்பட்டனர். மேலும் கொலையும் செய்யப்பட்டனர்.  அதன் தாக்கமும் வெளிப்பாடும்தான் சிதைக்கப்பட்ட புத்த சிற்பங்களாக அறியப்பட்டுள்ளன. மக்கள் எரிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொண்டை மண்டலத்துக்குத் தெற்கில் பௌத்தப் பள்ளிகளும், பொது கல்வி நிறுவனங்களும் இருந்திருக்க வேண்டும். பூம்புகார், கரூர், மதுரை போன்று காஞ்சிபுரத்திலும் பௌத்தக் கல்லூரிகள் இருந்துள்ளன. காஞ்சிபுரம் பௌத்தப் பல்கலைக்கழகம், நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு முன்னோடியாகவும், இணையாகவும் செயல்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரம் பௌத்தப் பல்கலைக்கழகம் முற்றிலும் அழிக்கப்பட்டு, அதன் எச்சங்களை சைவ வைணவ கோயில்களாக மாறியுள்ளன. சில சான்றுகளை அக்கோயில்களில் காணவும் முடிகிறது.  

காஞ்சிபுரம் பௌத்த கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சோழ மண்டலத்து பௌத்த கல்வி நிறுவனங்களும் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டில் பௌத்த நூலில் காணும் சிற்பங்களே சான்றாக வெளிப்படுகின்றன.

சோழ நாட்டில் பௌத்தம் நூல் வழியாக தமிழ்நாட்டில் பௌத்த சிற்பங்களில் உள்ள சிற்பங்களையும் இணைத்து நோக்க, புத்தர் தன் துறவு நிலையில் மக்களுக்கு உணர்த்திய சிறப்பு நிகழ்வுகளை (அற்புதங்களை) தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். சோழ நாட்டில் பௌத்தம் நூல் சிற்பங்கள் மூலம் புத்தரின் சிறப்பு நிகழ்வுகளை அறியவும் முடிகிறது. அவை:

1. மனிதத் திறனை அறிந்துகொள்ளவும், அதனைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் வேண்டியது.

2. உயிரினங்கள் குறித்தும் அவற்றின் இயல்புகள் மற்றும் மனநிலைக் குறித்தும்.

3.புத்தரின் இருவகை அரிய செயல்பாட்டு நிகழ்ச்சிகள்.

4.உயர்ந்த அன்பு செலுத்துவதின்மூலம் உயர்நிலை அடைய முடியும்.

5.உலகம் பற்றி தெளிவான அறிவு பெறுதல் முடியும்.

6.எதனாலும் தடைபடாத சீரிய சிந்தனையை அடைதல் முடியும்.

என்பனவற்றை உணர்ந்துகொள்ள முடியும் என்பதை புத்தரின் உருவ சிற்பங்கள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளன.

புத்தர் தன் வாழ்நாளில் சாதனை புரிந்த எழுபதுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தினார் என்பதையே ஒவ்வொரு சிற்பத்தின்மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

மன ஆற்றலால் (எண்ணித் துணிக கருமம்) ஓர் உடலை பலவாகவும், பலவற்றை ஒன்றாகவும் மாற்றிக்கொள்ள என்பைதை தியான நிலை, நின்ற நிலை சிற்பங்கள் உணர்த்துவனவாக உள்ளன. அமர்ந்த நிலை தியானத்தை பௌத்தமும் ஜைனமும் முழுமையாகக் கொண்டிருந்தன. அமர்நிலை தியானத்தை வேறு சமய சிற்பங்களில் காணமுடியவில்லை. தியானம் என்ற ஒரு நிலைக்கு மாறுதல் என்ற மன மாசுகளை நீக்கல் பௌத்தம் முதன்மையாகக் கொண்டது என்பதை புத்தரின் தியான நிலை சிற்பங்கள் உணர்த்துகின்றன.

ஆரிய-வேதக் கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்டு, உலகம் உலக இயக்கத்தை, உயிர் உயிரின் இயக்கத்தை அறியப்படும் தேவையைப் புத்தரின் சிற்பங்கள் உணர்த்துகின்றன.

மொத்தமாக சிதறிக்கிடக்கும் புத்த சிற்பங்களைப் பார்க்கும்போது ஏற்பட்ட வியப்பை விஞ்சி, சோழ நாட்டில் பௌத்தம் காட்டும் புத்த சிற்பங்கள் பெருமளவு மெய்யியல் தேடலின் தேவையை அன்றைய கால சூழல் (அரசியல், மதம்) நிலையிலிருந்து தேட வேண்டியதன் கட்டாயத் தேவையை தற்பொழுது தூண்டச் செய்திருக்கிறது.     

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவரின் முயற்சி பௌத்தம் சார்ந்த தேடலின் தேவையைச் சுட்டுவன வகையில் சோழ நாட்டில் பௌத்தம் நூல் அமைந்துள்ளது. இன்றைய பௌத்தத் தேடலுக்குத் தேவையான வகையில் சான்றாக அந்நூல் உள்ளது. பௌத்த மெய்யியல் தேடலுக்குரிய தக்க சான்றாக அவரின் இந்நூல் அமைந்துள்ளது என்பதால் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஒரு நூலால் பாராட்ட எண்ணம், பலரும் முயற்சி செய்து பாராட்டலாம். 

சோழ நாட்டில் பௌத்தம் தஞ்சையின் மெய்யியலை உணர்த்துவது போன்று தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தஞ்சையின் புகழுக்கு உரியவராகி உள்ளார். எனது பாராட்டுகளும். வாழ்த்துகளும். 


திரு அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி (வ) உடன் நூலாசிரியர் பா.ஜம்புலிங்கம் 

புக் டே தளத்தில் திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி அவர்கள், சோழ நாட்டில் பௌத்தம் நூலை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கும், புக் டே தளத்திற்கும் நன்றி. அதன் மேம்படுத்தப்பட்ட பதிவு. புக் டே தளத்தில் வாசிக்க :

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் அறிமுகம் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி


Comments

  1. அருமையான மதிப்புரை ஐயா...

    ஆரியம் அழித்தது எண்ணற்றவை... அது அழிந்தால் மட்டுமே விடிவு பிறக்கும்...

    ReplyDelete
  2. விரிவான விமர்சனம் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment