பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் புதூர்

சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, செப்டம்பர் 2022, அலைபேசி 9842647101) நூல் வெளியாகியுள்ள நிலையில் அதனை ஆங்கிலத்தில் வெளிக்கொணர முயற்சி எடுத்து, சோழ நாட்டில் பல இடங்களுக்கு மறுபடியும் களப்பணி சென்றுவருகிறேன்.  


அவ்வகையில் 8 ஏப்ரல் 2023இல் திருவாரூர் மாவட்டம் புதூரில் உள்ள புத்தர் சிலையைப் பார்க்க மறுபடியும் சென்றேன். முதன்முதலாக 2000வாக்கில் மழவராயநல்லூரைச் சேர்ந்த திரு சிங்காரவேலனுடன் சுமார் 25 கிமீ மிதிவண்டியில் பயணித்து இச்சிலையைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. 

முந்தைய களப்பணியில் சந்தித்த திரு சிவகுருநாதனின் மகன் திரு முத்துராமன் தற்போது பணிநிமித்தம் திருவாரூரில் உள்ளார். அவரிடம் அலைபேசியில் பேசியதும் மகிழ்ந்தார். பணியின் காரணமாக அவரால் வர இயலா நிலையைக் கூறினார். நான் மட்டுமே சென்றேன்.   தஞ்சாவூர்-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பாதையில் நால்ரோட்டில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றேன். 

பெருமாள் கோயில் தெரு. அங்கே ஒரு குளம். குளத்தின் கரையில், மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் புத்தர். முந்தைய களப்பணிகளின்போது அருகில் இருந்த குளத்தைப் பார்த்த நினைவில்லை. சோழ நாட்டில் உள்ள பிற புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையில் சற்றே மூடிய கண்கள், புன்னகைக்கும் இதழ்கள், நீண்டு வளர்ந்த காதுகள், நெற்றியில் திலகக்குறி, தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அருமையான சிலை. இச்சிலையை இன்னும் வழிபட்டு வருகின்றனர்.  

அனைத்திற்கும் மேலாக கழுத்தில் டாலர் போன்ற அமைப்பு உள்ளது. புத்தர் சிலையின் உடைந்திருந்த மூக்கினைச் சரிசெய்தபோது சிறிய அளவில் டாலர் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டதாக உள்ளூரில் முந்தைய களப்பணியில் கூறியது நினைவிற்கு வந்தது. அதனைக் கூர்ந்து கவனித்தேன். மூக்கினைச் சரிசெய்தபோது ஆர்வம் காரணமாக கழுத்தணியைச் சேர்த்திருக்கலாம் என நினைக்கிறேன். பிற சிலைகளோடு ஒப்புநோக்கும்போது, பெரும்பாலும் அது அச்சிலையில் முன்னர் இருந்திருக்க வாய்ப்பில்லை. அண்மை சேர்க்கையாக இருக்கலாம். இவ்வாறான கூடுதல் அமைப்புகளை இணைத்தல் தவிர்க்கப்படவேண்டும். அப்போதுதான் சிலையின் பழமைத்தன்மையை ரசிக்க முடியும்.   


 
 

சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த அருகிலுள்ள வீட்டிலிருந்து திருமதி லட்சுமி வந்தார். பலர் இச்சிலையை ஆர்வமாகப் பார்த்துப் போவதாகக் கூறினார்.



முந்தைய களப்பணியின்போது நீர்நிலையோடு ஒளிப்படம் எடுக்கவில்லை. குளக்கரையில் மரத்தின் அடியில் கம்பீரமாக அமர்ந்திருந்த புத்தரை ஒளிப்படம எடுத்தேன். எங்கு பார்த்தாலும் வெயில்.

வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. அவ்வப்போது கரும்புச்சாறு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு போன்றவை என் தாகத்தைத் தணிக்கவும், சூட்டைக் குறைக்கவும் உதவின. 

அடுத்தடுத்த களப்பணியினை முன்கூட்டியே, வெயில் உச்சம் வருவதற்குள் முடித்தேன். இப்பயணத்தை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்ப யோசித்தபோது, சற்றே மனம் மாறியது.  நாகை சென்று பல வருடங்கள் ஆனபடியால் தஞ்சை திரும்புவதற்குப் பதிலாக நாகை பயணிக்க முடிவெடுத்தேன். இரண்டாவது சனிக்கிழமை அருங்காட்சியகம் விடுமுறையாக இருந்தபோதிலும் அங்கு செல்லலாம் என்பது என் எண்ணம். 

அதற்கு முன்பாக அருகிலுள்ள கோயில்களைப் பற்றி விசாரித்தேன். அப்பகுதியில் நான் இதுவரை பார்க்காத திருத்தென்கூர், நமச்சிவாயபுரம், திருநெல்லிக்காவல் ஆகிய  இடங்களில் உள்ள சிவன் கோயில்களுக்குச் சென்றேன். ஆட்டோ ஓட்டுநர் நால்ரோட்டில் இறக்கிவிட்டார். அவருக்கு நன்றிகூறிவிட்டு, அங்கிருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் நோக்கிப் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன்.





சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இச்சிலையை முதன்முதலாகப் பார்க்கச் சென்று, நாளிதழில் வெளியான செய்தியின் நறுக்குகள்



.  
நன்றி : திரு முத்துராமன், ஆட்டோ ஓட்டுநர் திரு சந்திரசேகரன். திருமதி லட்சுமி,

அண்மையில் என் நூலுக்கு வந்த மதிப்புரை

திரு உதயசங்கர், 24 மே 2023

4 ஜுன் 2026இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. உங்கள் சுவாரஸ்யம் எங்களையும் தொற்றிக்கொள்ளும்போல...  சுவாரஸ்யமான விவரங்கள்.

    ReplyDelete
  2. தங்களது தேடுதல் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment