தமிழகத்தில் பௌத்தம் : முனைவர் தேமொழி

முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.


புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33), தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் (பக்.45-59) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் (பக்.60-79) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் (பக்.60-91) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.

"தொடக்ககால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்." (ப.14) "கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது." (ப.23) "சிந்து சமவெளிக்கு அப்பால் வளர்ந்த காந்தார புத்த சிற்பங்களுக்கு இணையாகவே கங்கைச்சமவெளி அருகில் மதுராவிலும் புத்த சிற்பங்கள் உருவாயின."(ப.25) "மதுரா வடிவங்களிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக குப்த வடிவங்கள் தோன்றிப் பின்னர் குப்த வடிவமே அஜந்தா எல்லோரா, அமராவதி நாகார்ஜுனகொண்டா, காஞ்சி நாகப்பட்டினம் என இந்தியாவின் பிற பகுதிகளிலும் கிழக்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்.... உள்ளிட்ட நாடுகளில் உருவான வடிவங்களுக்கும் அடித்தளமாக அமைந்தன." (ப.27)

"தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு தொடர்ந்து பல பௌத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது."(ப.34) "சில புத்தர் சிலைகள் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர்.. ஆகிய இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றி உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை."(ப.42)

"கலித்தொகையில் முக்கோற்பவர் குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு."(ப.45) "முக்கோல் குறித்துத் தமிழின் தொன்மையான நூலை எழுதிய தொல்காப்பியரும் அந்தணர்க்குரியவை எவை என்பதைக் குறிப்பிடுகையில் ஒரு நூற்பாவில் சுட்டுகிறார்."(ப.48) "தொல்காப்பியம் குறிப்பிடுவது போல அந்தணர்கள்/துறவிகள் முக்கோல் ஏந்துவர் என்பது வழக்கம்." (ப.52) "துறவிகள் அவ்வாறு முக்கோல் அமைப்பைத் தங்களுடன் எடுத்துச்சென்ற நோக்கம் என்ன என்பதற்கான சான்றுகள் சிற்பங்களிலோ ஓவியங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை, அதாவது பௌத்த சிற்பங்களைத் தவிர."(ப.54)

"விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்ததத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார்."(ப.64) "ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தபுத்ததத்தர் அவர் காலத்தில் தமிழகம் முழுவதும் ஆண்டதாகக் களப்பிர மன்னன் என அச்சுத விக்கந்தனைக் குறிப்பிடுகிறார்."(ப.67) "புத்ததத்தர் காலமான ஐந்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியதையும் அதன் பின்னரே கடல்கோளால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையின் பதிவு காட்டுவதாகவும் கணிக்கலாம்."(ப.70)

"எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறியமுற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்."(ப.80) "...எட்டு பண்புகளைக் கொண்டவரும் துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்."(ப.90) "திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரை குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப்பொருத்தமானதாக இருக்கும்."(ப.90)

ஒட்டுமொத்த நூலையும் வாசிக்கும்போது முழுமையாக பல புதிய செய்திகளைக் காணலாம். நூலாசிரியர் பல இடங்களில் என் ஆய்வினை மேற்கோளாகச் சுட்டியுள்ளதைக் காணமுடிந்தது. உரிய இடங்களில் ஒளிப்படங்களும், மேற்கோள் சான்றுகளும் தரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பௌத்தம் என்பதை பல்வேறு பொருண்மைகளில் நோக்குகின்ற நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கும், பதிப்பித்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.


நூல் : தமிழகத்தில் பௌத்தம்
ஆசிரியர் : முனைவர் தேமொழி
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மே 2023
விலை ரூ.120, ஐரோப்பாவில் யூரோ 4
நூலை இணையம் வழி பெற : https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
அல்லது https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/

*******************************************
இவ்வலைப்பூவில் வெளியான இந்த மதிப்புரை, 
திணை ஏப்ரல்-ஜூன் 2023 (தமிழ் மரபு அறக்கட்டளை) இதழில் வெளியாகியுள்ளது.



8 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. Anonymous29 May, 2023

    அய்யா வணக்கம் இந்த நூல் வேண்டும் செல் என் போன் பே no..

    ReplyDelete
  2. நூலின் விவரிப்பு அருமை

    ReplyDelete
  3. நல்லதொரு நூல் அறிமுகம்...... நன்றி ஐயா.

    ReplyDelete

Post a Comment