ஒரு மாதிரி ஆய்வு: முனைவர் தி.நெடுஞ்செழியன்

என் நூலுக்கு அன்பு நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன்,

ஒளிப்படம்  : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணி நிறைவு பெற்றபோது
ஏப்ரல் 2017இல் முனைவர் தி நெடுஞ்செழியன் என்னைப் பாராட்டிய
இனிய தருணங்கள்

சோழ நாட்டில் பௌத்தம் என்னும் நூலை உருவாக்கிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உதவிப் பதிவாளராகப் பணி ஓய்வு பெற்றவர். இவர் சிறந்த ஓர் ஆய்வாளர் மட்டுமல்லாமல், சிறந்த வாசிப்பாளர். அதுவும் தன் இளமைக் காலம் முதல் இன்று வரை ஆங்கில இந்து நாளேடு, பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆளுமைத் திறன் கொண்டு நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியவர். 

இப்படியான பன்முக ஆற்றல் கொண்ட முனைவர் பா.ஐம்புலிங்கம் தன் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சோழ நாட்டில் பௌத்தம் என்னும் தலைப்பைத் தேர்வு செய்து, அறைக்குள் முடங்கி, நூலகங்களில் தரவுகளைச் சேகரித்து முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்யாமல், பௌத்தம் தொடர்பான ஆய்வுகளைத் தேடிக் களங்களுக்குச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர். அவரால் கண்டெடுக்கப்பட்ட புத்தச் சிலைகளின் எண்ணிக்கை மிகஅதிகம் எனில் வியப்பில்லை. சோழ நாட்டில் பௌத்தம் என்ற இந்நூலைப் படிமம் பதிப்பகம் உலகத் தரத்தில் வெளியிட்டிருப்பது வியப்பே எனில் மிகையில்லை. 

இந் நூலின் உள்ளடக்கமாக, பதிப்புரை, நூலாசிரியரின் என்னுரை தவிர்த்து 8 பகுதிகள் உள்ளன. அவை: 1. சோழ நாடு, 2. அசோகரின் சாசனங்கள் 3. இலக்கியம், பிற சான்றுகள் 4. பௌத்த விகாரங்கள் 5. நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனிகள் 6. புத்தர் சிற்பங்கள் 7. புத்தர் சிலைகள் 8. புத்துயிர் பெறும் பௌத்தம் என்பதாகும். இவற்றடுத்து, பின்னிணைப்புகள். அலுவலர்கள், தகவலாளர்களுக்கு நன்றி, சிலைகள் உள்ள இடங்கள், நாளிதழ் நறுக்குகள் என்று நூலின் செய்திகளைப் பகுத்துத் தந்துள்ளார்.

பதிப்புரையில்,“முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் பல்லாண்டு உழைப்பே சோழ நாட்டில் பௌத்தம். இந் நூல் புது எழுத்து வெளியீடாக வருவது மகிழ்விற்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் உள்ள புத்தப் படிமங்கள் பற்றிய இந் நூல் தமிழ்நாட்டில் பௌத்தம் என்னும் நூலாக விரியட்டும் என்ற வேணவாவில் உள மகிழ்வுடன் புது எழுத்து பதிப்பிக்கிறது” என்று சுகவன முருகன் குறிப்பிட்டிருப்பது வெறும் புகழ்ச்சியில்லை; உண்மை என்பதை நூலின் செய்திகள் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நூலாசிரியர் என்னுரையில்,“தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் பௌத்தம் செழித்து வளர்ந்ததை இந் நூல் ஆராய்கிறது. நூலாசிரியரால் தனியாகவும், பிறருடைய துணையுடனும் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைப் பற்றியும், புத்தர் சிலைகள் என்று குறிப்பிடப்படுகின்ற புத்தர் அல்லாத சிலைகளைப் பற்றியும் விவாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியரின் நேர்மையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மேலும், நன்றியுரையில் இந்த ஆய்வுக்கு உதவி செய்த அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார். இதன் மூலம் இந்த ஆய்வு ஒரு கூட்டுழைப்பு என்பதையும் அறிவித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

சோழ நாடு என்னும் பகுதியில் பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை உள்வாங்கிச் சோழ நாடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கிறது என்று வரையறுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் பௌத்தத்தின் வளர்ச்சியை அசோகரின் சாசனங்கள், இலக்கியம், பிற சான்றுகளின் வழியாக நிறுவியுள்ளார். மேலும், வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பர்மா தேச வரலாறு உள்ளிட்ட பல சான்றுகள் பௌத்தச் சமயம் பரவியிருந்ததை உறுதி செய்கின்றார்.

பௌத்த விகாரங்கள், கோயில்கள் குறித்துப் பூம்புகார், நாகப்பட்டினம், திருவிளந்துறை, பெருஞ்சேரி, புத்தமங்கலம், மங்கலம் போன்ற ஊர்களில் உள்ளவை ஆதாரங்களுடன் மட்டுமல்ல, ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனிகள் உள்ள அருங்காட்சியகங்களின் தகவல்கள் தரப்பட்டுள்ளன. செப்புத் திருமேனிகள் உள்ள தஞ்சாவூர், அய்யம்பேட்டை, செல்லூர், ரெட்டிப்பாளையம், நாகப்பட்டினம், பேராவூரணி போன்ற ஊர்களில் உள்ள புத்தரின் ஒளிப்படங்கள் நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ளன. 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் உள்ள புத்தர் சிற்பங்களின் தகவல்கள் ஒளிப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.  தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், திருச்சி மாவட்டம், அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் - இங்குள்ள ஊர்களில் உள்ள புத்தர் சிலைகள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்துயிர் பெறும் பௌத்தம் என்னும் இறுதி பகுதியில், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த செய்திகளையும், பின்னர்ப் பௌத்தம் அழிக்கப்பட்டது. தற்போது பௌத்தம் எப்படிப் புத்துயிர் பெற்று மீண்டும் வளர்ச்சி பெற்று வருகின்றது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் ஆய்வுக்கு உதவிய பல்வேறு அருங்காட்சியங்களின் காப்பாட்சியர்கள், தொல்லியல் துறை அலுவலர்கள், செயல் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் முனைவர் பட்ட ஆய்வுக்கான புத்தர் குறித்த தேடுதலின்போது கிடைத்த தகவல்களைத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நாளிதழ்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன. அந்த நாளிதழின் செய்தி நறுக்குகளையும் இணைத்துள்ளார். இதுவரை எந்த ஆய்வாளரும் செய்யத் துணியாத செயலை முனைவர் பா.ஜம்புலிங்கம் செய்துள்ளார்.

222 பக்கங்களில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற இந் நூலுக்குத் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து ஆய்வுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அழிந்துபோன பௌத்தம் தற்போது மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பான ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. தற்போதைய முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இந் நூலின் மூலம் ஓர் ஆய்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்கான ஒரு மாதிரி ஆய்வாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற என் விருப்பத்தையும் பதிவு செய்கிறேன். பௌத்த வரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பதைக் காலம் நமக்கு உணர்த்தும். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்குத் தமிழ் உலகமும் ஆய்வு உலகமும் நன்றி கடன்பட்டிருக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத பேருண்மையாகும்.

நூலில் உள்ள ஆய்வு முறைமையும், ஆதாரங்கள், ஒளிப்படங்கள் எல்லாவற்றையும் தாண்டி உலகத் தரத்தில் இந் நூல் அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் இந்த முறைமைகளை கைக்கொண்டால் ஆய்வு உலகம் இன்னும் செழுமை அடையும் என்பது திண்ணம். 

-முனைவர் தி.நெடுஞ்செழியன். தமிழ் இணைப்பேராசிரியர் (ப.நி.), தலைவர், சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம், 4/142, அய்யனார் கோயில் முதல் தெரு, குண்டூர், திருச்சிராப்பள்ளி - 620 007. அலைபேசி-943214142.

21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. முனைவர் அவர்களின் ஆய்வுகளும், நூல் வெளியீடுகளும் தொடர்ந்து வரட்டும்...

    ReplyDelete

Post a Comment