ஜெயங்கொண்டம் சமணர் 1998-2022
என் முனைவர் பட்ட ஆய்விற்காக (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) டிசம்பர் 1998இல் ஜெயங்கொண்டத்தில் உள்ள புத்தர் சிலையைக்காணச் சென்றபோது சிறிய மேடையில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. அப்போது புகைப்படக்கருவியை எடுத்துச்செல்லாததால் புகைப்படம் எடுக்காமல் திரும்பினேன். அடுத்த களப்பணியின்போது அந்த தீர்த்தங்கரர் சிலையை அவ்விடத்தில் காணவில்லை. (களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள், 1 மே 2012, சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ, https://ponnibuddha.blogspot.com/2012/05/blog-post.html ) அண்மையில் நாளிதழில் (23 ஆண்டுகளுக்குப் பிறகு மகாவீரர் சிலையை மீட்ட இந்தியதொல்லியல் துறையினர், தினமணி, திருச்சி பதிப்பு, 15 மார்ச் 2022, ப.12) வெளியான செய்தியைப்பார்த்ததும் டிசம்பர் 1998இல் பார்த்த சிலை அதுவாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்தது. அதனை உறுதி செய்வதற்காக பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தமிழ்நாட்டுசமணத்தளங்கள் (Jain Sites of Tamil Nadu, Nalini Balbir, Karine Ladrech, N.Murugesan, K.Rameshk...