பௌத்த சுவட்டைத் தேடி : எழுமகளூர்

2022 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரை பதிவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.   

"இரத்த சம்பந்தமான வியாதிகளை நீக்கும் அற்புதத் திருத்தலம்" என்ற (கடம்பூர் விஜயன், தினமணி, 14 ஆகஸ்டு 2018) கட்டுரையில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் (கொல்லுமாங்குடிக்கு முன்னதாக வலது புறச்சாலை) எழுமகளூர் என்ற ஊர் சப்தகன்னிகளுக்காகப் பெயர் பெற்றது என்று படித்தேன். இக்கோயிலைப் பற்றி எவ்வித பதிவும் விக்கிப்பீடியாவில் இல்லாததால் அதனைப் பற்றி கட்டுரை எழுதுவதற்காக விவரங்களைத் திரட்ட அவ்வூரை நோக்கிப் பயணித்தேன்.

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் சென்று, அங்கிருந்து புதூர் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தில் ஏறினேன். வழக்கம்போல பேருந்தில் ஏற ஆரம்பித்த முதல் உரிய இடத்திற்குச் சென்று சேரும் வரை செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே சென்றேன். கிளியனூர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து எழுமகளூர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். போகும் வழியில் குளத்தின் கரையில் ஒரு புத்தர் சிலை உள்ளதாக சிலர் கூறினர். சிலை உள்ள இடம் கோயிலுக்கு முன்பு உள்ளதா, கோயிலை அடுத்தா என்பது தெரியாமல் விசாரித்துக்கொண்டே நடந்தேன்.

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் குளத்தின் அருகில் இருந்த ஒரு கல்லைக் காட்டி "புத்தர் சிலை இதுதான். கோயிலுக்கு இன்னும் சிறிது தூரம் செல்லவேண்டும்" என்று கூறினான். குப்புறக்கிடந்த அந்தக் கல்லைப் பார்த்தபின் அதனைப் புரட்டிப் பார்த்துவிட்டு, பின்னர் கோயிலுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.   


அடி பம்ப்பை அடுத்து அந்தக் கல் குப்புறக்கிடந்தது. (சிகப்பு வண்ணத்தில் வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது) அருகிலிருந்த வீட்டில் விசாரித்தபோது திரு வேணுகோபாலன் அதுதான் புத்தர் சிலை என்று கூறி, அந்தச் சிலையை நிமிர்த்துவைக்க உள்ளூர் நபர்களை அழைத்தார். சிலர்  மறுத்தனர். என் ஆர்வத்தைக் கண்ட அவருக்கு எனக்கு உதவி செய்யவேண்டும் என்று தோன்றவே தொடர்ந்து வருவோர் போவோரை அழைத்தார். உதவிக்கு சிலர் வந்தனர். அவர் வீட்டிலிருந்து கடப்பாறையை எடுத்துவந்தார். ஐந்து பேர் சேர்ந்து அதனைப் புரட்டி நிமிர்த்தினோம். அச்சிலை தலையும், இடுப்புக்குக் கீழ்ப்பகுதியும் இல்லாத புத்தர் சிலை என்பதை உறுதி செய்தேன். சிலையின் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். தலை சிதைந்த நிலையிலும் சிலையில் அழகான கலையழகினையும், கம்பீரத்தையும் காணமுடிந்தது.  கைகளின் அமைப்பு அவை தியான கோலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. மார்பிலும், இடுப்பிலும் ஆடை காணப்படுகிறது. இப்பகுதியில் காணப்படுகின்ற அதிகம் சிதைந்த சிலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கோயிலைப் பற்றிக் கேட்டபோது அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் அலுவலர் திரு கி.ஸ்ரீதரன் அக்கோயிலுக்கு வந்ததாகவும், அண்மையில் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதாகவும் கூறி, செல்லும் வழியைக் காண்பித்தார். 

பேசும்போது அவர் போழக்குடியில் ஒரு புத்தர் சிலை இருந்ததாகக் கூறினார். (இதே செய்தியை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமீயச்சூர் களப்பணியின்போது ஒருவர் கூறியிருந்தார்.)  போழக்குடியில் புத்தர் சிலை எதுவும் இல்லை என அப்போதைய களப்பணியின்போதே அறிந்தேன். ஒரே செய்தியை பல ஆண்டுகள் கழித்துக் கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

பின்னர் அவர் கூறிய கோயிலுக்குச் சென்று உரிய விவரங்களைத் திரட்டினேன். திரும்பும் வழியில் அவருக்கும், உதவி ஊர் மக்களுக்கும் நன்றி கூறினேன். அப்போது அவர் அருகில் பைக்கில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் என்னை கிளியனூர் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய்விடும்படி கூற, அவர் என்னை அங்கு கொண்டு வந்துவிட்டார். அங்கிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் திரும்பினேன்.   

திரும்பிய நாளன்றே விக்கிப்பீடியாவில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில், எழுமகளூர் என்ற தலைப்பில் ஒரு பதிவினை ஆரம்பித்து, நான் எடுத்த புகைப்படங்களுடன் பதிந்தேன். விக்கிப்பீடியா கட்டுரைக்காக களப்பணி மேற்கொண்டு ஒரு புத்தரைக் கண்டது எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. 


நன்றி : திரு வேணுகோபாலன்


25 டிசம்பர் 2021 முகநூல் பதிவு
பேராசிரியர் இல.தியாகராசன் ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி என்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கெல்லாம் ஒரு பெரிய அதிர்ச்சி. வரலாற்றுத்துறைக்கு ஒரு பேரிழப்பு.


1993-95இல் பௌத்த ஆய்வில் அடியெடுத்த வைத்தபோதிலும், அவரை முதல் முறையாகக் காணும் வாய்ப்பினை 1997இல்தான் பெற்றேன். முதல் சந்திப்பின்போது அவர் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும் கூறினார். அவர் சொன்னவற்றில் பல சிலைகளை நான் பார்த்துள்ளேன் என்று நான் கூறியபோது வியந்தார். அன்று முதல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆய்வு தொடரபாக உரையாடுவது வழக்கம். களப்பகுதியில் நான் கண்டுபிடித்த புத்தரைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனமுவந்து பாராட்டியவர்.

பல ஆய்வாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், எந்த நேரத்தில் சென்று கேட்டாலும் ஐயங்களைத் தெளிவிப்பவர், ஒரு நண்பரைப்போல பழகுபவர். அறிஞர்களிடம் பழகும்போது காணும் இடைவெளியை இவரிடம் காணமுடியாது. இயல்பாகப் பேசுவார். தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர். அரியலூர் கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


Comments

  1. தங்களது தேடல்கள் தொடர்ந்து செல்லட்டும்.

    நண்பரது மறைவுக்கு எனது இரங்கல்கள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பௌத்தம் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டுள்ளது எனும் சிந்தனை மேலோங்குகிறது...

    ReplyDelete
  3. தங்களது களப்பணி மேலும் தொடர வாழ்த்துகள். சிதைந்துபோன புத்தர் சிலை வருத்தம் தருகிறது.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தங்களது களப்பணிகள் இளைய தலைமுறையினருக்கு பயன்படும்..

    தொடரட்டும்....மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  5. தாங்கள் தேடித் தேடி செய்யும் அரும்பணிகளுக்கு தலைவணங்குகிறோம் ஐயா

    ReplyDelete
  6. கொண்ட கொள்கையில் உறுதியோடு இயங்கிடும் தமிழகம் கண்ட பவுத்த ஆய்வு அறிஞர்களில் பிரதானமானவர் ஐயா ஜம்புலிங்கம் அவர்கள் .உங்கள் பயண பதிவுகளில் இயல்போடு விவரிக்கும் தமிழ் நடை மிக்க அருமை .அறிஞர் பெருந்தகை மேனாள் அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் தியாகராஜன் அவர்களின் எளிமையையும் அணுகுதலையும் சிறப்பொடு குறிப்பிட்டுள்ளீர்கள் .
    பவுத்த பயணம் தொடரவும் உங்கள் ஆரோக்கியம் உற்ற துணையாக அமையவும் விழைகிறேன் .
    எழுமகளூரில் ஒரு சிறு மேடை கட்டி பவுத்தரை எழச்செய்திட விரும்புகிறேன் .
    உள்ளூர் அன்பர் தொடர்பு எண் ஏதேனும் இருப்பின் தெரிவிப்பின் நலம் ஐயா.
    பணிவுடன் பேரணி ஸ்ரீதரன்,விழுப்புரம் 9787 300 353

    ReplyDelete

  7. என் ஆர்வத்தைக் கண்ட அவருக்கு எனக்கு உதவி செய்யவேண்டும் என்று தோன்றவே தொடர்ந்து வருவோர் போவோரை அழைத்தார். உதவிக்கு சிலர் வந்தனர். அவர் வீட்டிலிருந்து கடப்பாறையை எடுத்துவந்தார். ஐந்து பேர் சேர்ந்து அதனைப் புரட்டி நிமிர்த்தினோம். அச்சிலை தலையும், இடுப்புக்குக்
    கீழ்ப்பகுதியும் இல்லாத புத்தர் சிலை என்பதை உறுதி செய்தேன். சிலையின் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். தலை சிதைந்த நிலையிலும் சிலையில் அழகான கலையழகினையும், கம்பீரத்தையும் காணமுடிந்தது. கைகளின் அமைப்பு அவை தியான கோலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. மார்பிலும், இடுப்பிலும் ஆடை காணப்படுகிறது. இப்பகுதியில் காணப்படுகின்ற அதிகம் சிதைந்த சிலைகளில் இதுவும் ஒன்றாகும்.-- பௌத்த சுவட்டைத் தேடி : எழுமகளூர்
    January 01, 2022 - உங்கள் அயராத முயற்சிக்கு பாராட்டுகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr B Jambulingam

    ReplyDelete

Post a Comment