சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் : இந்து தமிழ் திசை
5 பிப்ரவரி 2020 ஆம் நாளன்று தஞ்சாவூரில் நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு நினைவாக, இந்து தமிழ் திசை இதழ் வெளியிட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இணைப்பில் வெளியான சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் என்ற என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோழர் காலத்தில் சமணம் செழித்திருந்ததை எடுத்துரைக்கும் சான்றுகளாக இச்சிலைகள் உள்ளன. கி.பி.10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலைகள் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிலைகளாகும். ஜெயங்கொண்டம் (1998), காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999), பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர் (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010), தோலி (2011), கவிநாடு ...