பௌத்த சுவட்டைத் தேடி : பிள்ளைபாளையம், அரியலூர்
25 ஆகஸ்டு 2019 அன்று மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள பிள்ளைபாளையம் என்னுமிடத்தில் புத்தர் சிலையினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம். பௌத்த, சமண மற்றும் பிற சிற்பங்களைத் தேடி களப்பணி மேற்கொள்ளும் நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன் பெரம்பலூரிலிருந்தும், முனைவர் பட்ட ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் திருச்சியிலிருந்தும் வந்தனர். நான் தஞ்சாவூரிலிருந்து அவர்களோடு இணைவதாக முடிவெடுத்து, கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள குறுக்கு ரோட்டில் சந்தித்துப் பின்னர் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டோம். தஞ்சாவூரிலிருந்து கீழப்பழுவூர்-ஜெயங்கொண்டம் -கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோடு என்ற வகையில் நான் வந்து சேர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டேன். பேருந்து கிடைக்காததால் அவர்கள் அங்கு வர தாமதமாக, அருகில் வேறு ஏதாவது இடம் இருக்கிறதா என்று திரு செல்வபாண்டியன் அவர்களிடம் கேட்டேன். அவர் முதலாம் இராஜேந்திரசோழன் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பங்களை கீழச்செங்கல்மேட்டில் காணலாம் என்றார். அதன்படி அங்கிருந்து 1.5 கிமீ தொலைவில் இருந்த அவ...